மேகங்களால் மூடப்பட்டு தேயிலைத் தோட்டங்களால் விரிக்கப்பட்ட, வானத்தைத் துளைக்கும் மலைகளால் சூழப்பட்டது மேகமலை. மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைப் பகுதியாக விளங்குவதாலும் மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி செய்வதாலும் இதற்கு மேகமலை என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மலையானது பச்ச குமாச்சி (பச்சை மலைகள்) என்றும் ஹைவேஸ் மவுன்டெய்ன் என்றும் அழைக்கப்படுகிறது. நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கான மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள மேகமலை தொடரானது தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டம். ஆண்டிபட்டி வட்டத்தில், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் எரசக்கநாயக்கனூர் சீமைக்கு மேலே மேகமலை ஊராட்சி அமைந்துள்ளது.
மதுரையிலிருந்து 98 கிலோ மீட்டர் தொலைவிலும் திண்டுக்கல்லில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னமனூர் நகரம். சின்னமனூரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சுருளி அருவி, 45 கிலோ மீட்டர் தொலைவில் சோத்துப்பாறை அணை, 50 கிலோமீட்டர் தொலைவில் வைகை அணை, 40 கிலோ மீட்டர் தொலைவில் தேக்கடி, 100 கிலோ மீட்டர் தொலைவில் மூணாறு மற்றும் 70 கிலோமீட்டர் தொலைவில் கொடைக்கானல் ஆகியவை உள்ளன.
சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில் பயணித்தால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேகமலைக்கு செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் தேயிலை மற்றும் ஏல தோட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
தனியார் சொத்து
எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேக மலையை ஆங்கிலேயர்கள் கண்டறிந்து 1920-களில் தேயிலை தோட்டங்களை அமைத்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனி தேயிலைத் தோட்டமாகவும், இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் மேகமலையில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி சாலையை தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.
மக்கள்
தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் விரிந்து பரவியுள்ளன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மேகமலை தற்போது தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்கு தேயிலை, ஏலம் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேகமலை ஊராட்சியின் மக்கள் தொகை 3564. இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் ஊர் ஒன்று உள்ளது. இம்மலைப்பகுதியில் வெண்ணியாறு, இரவங்கலூர், மகாராசாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன.
இயற்கை
இயற்கை கண்கவா் காட்சிப் பெட்டகமாக காட்சி அளிக்கும் மேகமலையானது பசுமை மாறாத காடுகள், அரிதான தாவரங்கள் மற்றும் விலங்குகள், யானைகள், காட்டு எருமைகள், மான்கள் மற்றும் புலிகள் போன்றவைகளின் தலமாகும். மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வன உயிரின சரணாலயமான மேகமலையில் அரிதான ஹார்ன்பில், சலீம் அலி வவ்வால், காணக் கிடைக்காத ஹூட்டன் பிட் வைபர் பாம்பு முதலிய பல அரிய வகை பறவைகள், விலங்குகளின் வாழிடமாகும்.
காட்டு யானைகளும் மான்களும் மேகமலையில் சுற்றித் திரிவது அங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கண்கவர் காட்சியாக அமைகின்றன. மிக அழகான சாய்ந்த பசுமையான நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், பெரிய மரங்கள், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் மேகமலை தொடராகும்.
ஐந்து அணைகள்
ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கம் கூடங்கள் இப்பகுதியிலுள்ளது. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாகச் சமைத்துக்கொடுப்பார்கள். ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவக் குணம் கொண்டது என அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
`உட்பிரையர்` என்ற தனியார் நிறுவனத்தாரின் தேயிலைத் தோட்டங்கள் மேகமலையில் அதிகமாக உள்ளன. அவர்களின் தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்று `டீ தூள்` தயாரிக்கும் முறை பற்றித் தெரிந்துகொள்ளலாம். அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
வைகை – சுருளி அருவி
மேகமலை பகுதியிலிருந்துதான் வைகை ஆறு உருவாவதாகக் கூறப்படுகிறது. இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள அணையை இங்கே பார்க்க முடியும். நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர்தான் சுருளி அருவிக்குச் செல்கிறது. அருவியிலிருந்து வெளியேறும் நீர் தூவானமாக காற்றில் சிதறி தூவானம் என்ற பகுதியில் சிலீரென்று வீசுகிறது. இதனாலேயே இப்பகுதி தூவானம் என்றழைக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
மேகமலையில் தனியார் தங்குமிடங்கள் சில சுற்றுலா வாசிகளுக்காக இருக்கின்றன. பேரூராட்சியின் சார்பில் உள்ள தங்கும் விடுதிகளில் மிக குறைவான அறைகளே உள்ளன. தனியார் தங்கும் விடுதிகளும் பேரூராட்சியின் தங்கும் விடுதியில் சுற்றுலாவாசிகளுக்கு போதுமானதாக இல்லை. சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையிலும் மக்களின் நலன் கருதியும் மேகமலை பேரூராட்சி பகுதியில் போதுமான தங்குமிட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மலை உச்சிக்கு செல்பவர்கள் மாலையே திரும்ப வேண்டும் என வனத்துறை வலியுறுத்துகிறது. போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டால் சுற்றுலா செல்பவர்கள் மேகமலையில் பாதுகாப்பாக தங்க இயலும். சின்னமனூரில் இருந்து செல்லும் மலைப்பாதையில் இரு புறமும் போதிய கம்பி வேலிகள் அமைத்து பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இயற்கையின் கொடையாக விளங்கும் மேகமலையில் போதிய வசதிகளையும் செய்தால் ஊட்டி, கொடைக்கானல் போல மேகமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: மேகமலை இயற்கையின் கொடை. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும்.