காலையிலேயே பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தார் வாக்காளர் சாமி. அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்.
“உக்ரைன் மீது போர் தொடுத்தால் ஓரிரு மாதங்களில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் ரஷ்யா போரை தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வாரி வழங்கியதால் ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்குள் சென்று ட்ரோன்கள் மூலம் தாக்குதலை உக்ரைன் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தால் உக்ரைன் மீதும் ஆதரவளிக்கும் நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா தொடங்கினால் மூன்றாம் உலகப்போராக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, இஸ்ரேல் லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் கூட்டாக சேர்ந்து இஸ்ரேல் மீது நேரடி போர் தொடுக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ஐக்கிய நாடுகள் சபை சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டு போர்களையும் நிறுத்தாவிட்டால் உலகப் போர் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது” என்றார் வாக்காளர் சாமி. “உலகச் செய்திகள் இருக்கட்டும் சாமி! உள்ளூர் செய்திகள் என்ன?” என்றேன் நான்.
“471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமீனில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். செந்தில் பாலாஜி வந்த பின்னர் அமைச்சரவை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று முதலமைச்சர் கருதுவதாக திமுக கட்சித் தலைவர்களே பேசி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஏமாற்றம் இருக்காது என்று தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியும் முதலமைச்சரால் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் தங்கள் பதவி பறிபோய் விடுமோ? என்று ஓரிரு அமைச்சர்களும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? சில எம்எல்ஏக்களும் இருந்து வருகிறார்கள். இவை எல்லாம் யூகங்களே. இதை வைத்து பலரும் பலவகையில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். முதலமைச்சரின் மனதில் என்ன இருக்கிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி. “இலங்கையின் புதிய அதிபர் இந்தியாவுக்கு தொல்லையாக இருப்பாரா சாமி?” என்றேன் நான்.
“இலங்கை வரலாற்றில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி ஏற்பட்டிருப்பது முதல் முறையாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் பிராந்திய அரசியலில் சிக்க விரும்பவில்லை. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் நட்பு நாடுகள் என்ற விதத்தில் அவர் பேசியிருக்கிறார். இந்தியாவில் அரசியல் கட்சிகள் எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிகள் கொண்டு வரும் கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். அதே எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி ஆட்சியில் அமரும் போது தங்களால் எதிர்க்கப்பட்ட, முந்தைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட கொள்கைகளையும் திட்டங்களையும் தொடர்ந்து கடைபிடிப்பதோடு அதனை மேலும் வலுவாக்குகிறார்கள். இதைப்போலவே, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர் தற்போது இலங்கையின் அதிபராக மாறியுள்ளார். இங்குள்ள அரசியல் சூழல் போலவே, அவரும் எதிர் கட்சி வரிசையில் இருந்தபோது சீனாவுக்கு ஆதரவாக இருந்தவர் இந்தியாவுக்கு எதிராக இருந்தவர் என்று கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு மாறாக, இந்தியாவை ஒருபோதும் பகைத்துக் கொள்ள மாட்டார்” என்றார் வாக்காளர் சாமி. “வேறு என்ன சாமி செய்திகள்?” என்றேன் நான்.
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எண்ணம் பலரின் மனதில் எழுந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் இல்லை. மத்திய தகவல் ஆணையத்தில் இதுவரை தமிழகத்தைச் சார்ந்த எவரும் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதில்லை தற்போது எட்டு தகவல் மத்திய தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணியை மத்திய அரசு விரைவு படுத்தியுள்ளது இந்த முறை தமிழகத்தை சார்ந்து ஒருவருக்கு மத்திய தகவல் ஆணையர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! தமிழகத்தில் கூட லோக் ஆயுக்த அமைப்பில் தலைவராக இருந்தவர் ஓய்வு பெற்று சில மாதங்கள் கடந்து விட்டன. அதே அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் ஓய்வு பெற வேண்டிய நாளில் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு நிரந்தர தலைவரும் காலியாக உள்ள இடங்களில் இரண்டு புதிய உறுப்பினர்களும் தற்போது வரை நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், உடனடியாக இந்த நியமனங்களை செய்ய அரசு தீவிரமாக உள்ளது“ என்றேன் நான். “சபாஷ்! சிறப்பாக நீயும் கருத்துச் சொல்கிறாய். அடுத்த வாரம் சந்திப்போம்” என்று கூறி விடை பெற்றார் வாக்காளர் சாமி.
பாலா? பாய்சனா? https://theconsumerpark.com/side-effects-milk