“உரிமைகள் சார்ந்த சட்டவியலின் பரிணாமமும் எதிர்காலமும்” என்ற கருத்தரங்கம் கொடைக்கானல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சங்க தலைவர் ஐ ஜாம் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டம், மனித உரிமைகள் சர்வதேச சட்டம் போன்ற தலைப்புகளில் இந்தியாவில் பலர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதலாவதாக மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை பெற்றவர் தற்போதைய தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ ராமராஜ் ஆவார். மனித உரிமை நீதிமன்றங்கள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருவதை அவரது ஆய்வேடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததது என தலைமை உரையில் ஐ. ஜாம் ஜெகன் தெரிவித்தார்.
மனித உரிமைகளை பாதுகாக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரை வழங்கும் அமைப்புகள் மட்டுமே. ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அமைப்பாகும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 21349 புகார்களும் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் 108717 புகார்களும் பதிவாகியுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகள் 167 மட்டுமே. இதைப் போல கடந்த 25 ஆண்டுகளிலும் குறைவான வழக்குகளே மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளன. மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை அணுகுவதிலும் வழக்கு நடத்துவதிலும் உள்ள சிக்கல்களை நீக்குவதும் மனித உரிமைகள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும் என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
மனித உரிமைகளை பாதுகாக்க நல்லாட்சி அவசியமானது. நல்லாட்சிக்கு அடிப்படையானது ஜனநாயகம். தேர்தலுக்குப் பின்னரும் உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது. தேர்தல்களில் வாக்களிப்பதுடன் வாக்காளர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேலைகளையும் கண்காணிக்க வேண்டியது வாக்காளர்களின் பணியாகும். ஊழல் விசாரணை ஊழல் புகார்கள் மீதான விசாரணை அமைப்பான லோக்பால், லோக் ஆயுக்தா, வெளிப்படையான நிர்வாகத்திற்கு உதவும் அமைப்பான தகவல் உரிமை ஆணையங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக நிர்வாக சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் பணியை வாக்காளர்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்பாண்டியன் மற்றும் வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பூங்கா இதழ் (The News Park) கருத்து: “வாக்காளரியல் (Voterology)” என்ற சொல் வாக்காளரியலின் தந்தை டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு “மதிப்பிற்குரிய வாக்காளர்” என்ற அவரது புத்தகத்திலும், ஆகஸ்ட் 20, 1999 அன்று வெளியான தினமணி என்ற தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையிலும் அறிமுகமானது. “வாக்காளரிலிசம்” என்பது டாக்டர் வீ. ராமராஜ் அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும், இது “வாக்காளரியல்” என்பதிலிருந்து பெறப்பட்டது. “வாக்காளரிலிசம் (Voterologism)” என்பது “வாக்காளரியல்” கோட்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (டாக்டர் வி. ராமராஜ் முன்வைத்த சிந்தனைப் பள்ளி). இது எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்களின் செயல்கள், விருப்பம் அல்லது கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.




