தூசூர் ஏரி
நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் தூசூர் ஏரி மிகப் பெரியதாகும். நாமக்கல்லில் இருந்து துறையூர் சாலையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் தூசூர் கிராமத்தின் அருகில் பழமையான இந்த ஏரி அமைந்துள்ளது. சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 66.87 மில்லியன் கன அடியாாகும்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மழை பெய்தால், மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து, கரைபோட்டான் ஆற்றில் நீர் வரத்து அதிகாரிக்கும். இந்த தண்ணீர் நஞ்சுண்டாபுரம் ஏரி, காந்திபுரம் ஏரி, முத்துகாப்பட்டி ஏரி, பழையபளையம் சின்ன ஏரி, பழையபாளையம் பெரிய ஏரி ஆகிய ஏரிகள் உட்பட 9 ஏரிகளில் நிரம்பி தூசூர் ஏரியை வந்தடைகிறது தூசூர் ஏரி நிரம்பிய பின்னர் வெள்ளநீர் வளையப்பட்டி வழியாக அரூர், ஆண்டாபுரம் ஏரி வழியாக சென்று கடைசியில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் கலக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக துாசூர் ஏரி விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஏரி நிரம்பும் போது இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் நெல், கரும்பு, கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரியில் நாமக்கல்லில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பதால் ஏரியின் நீர் மாசடைந்துள்ளது. இதனால் இந்த நீரை குடிநீர் பயன்பாட்டுக்கு உபயோகிப்பதற்கும் இந்த நீரை நேரடியாக விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த ஏரியில் பல பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் இங்கு உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் பழமையான ஏரி பாதுகாக்கப்பட்டு முழுமையான பயன்பாட்டை மக்கள் பெறுவார்கள் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தூசூர் ஏரியை மேம்படுத்தி நீர் பிடிப்பு அதிகமாக இல்லாத மேடான பகுதிகளில் சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க வேண்டும். தூசூர் ஏரியில் படகு சவாரியையும் மேற்கொள்ளும் வகையில் வசதிகளை உருவாக்கலாம். இந்தப் பகுதிகளில் விளையாட்டு அரங்கங்களை அமைக்கலாம். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் உள்ளூர் மக்களுக்கும் சுற்று வட்டார மக்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும். பல்வேறு வகையான பறவைகள் தூசூர் ஏரிக்கு வந்து செல்வதால் இந்த பகுதியை சிறந்த பறவையில் சரணாலயமாக மாற்ற முடியும். கொல்லி மலைக்கு அருகாமையில் இருப்பதால் தூசூர் ஏரி பகுதியை மாநில அளவிலான சுற்றுலாத்தலமாகவும் மாற்ற முடியும் என்று தூசூர் விவசாயியும் சமூக ஆர்வலருமான வி.எஸ் ராஜு தெரிவிக்கிறார்.
கணக்கன்பட்டி பட்டிக்குளம் ஏரி
பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் கணக்கன்பட்டியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது பட்டிக்குளம். சுமார் 160 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பட்டிக்குளம் கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாகும். அதுமட்டுமல்லாமல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.
பட்டிக்குளத்துக்கு தண்ணீர் வரக்கூடிய ஓடை பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை அகற்றி பழநி அருகே அமைந்துள்ள வரதமா நதியில் இருந்து இந்த குளத்துக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் இதைப் போலவே பர்டிகுலத்தில் இருந்து வெளியில் செல்லும் நீர் பிடிப்பு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கிறார்கள்.
பழனியில் இருந்து கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் இந்த குளம் அமைந்துள்ளது. தற்போது இந்த குளத்துக்கு சற்று வடக்கே ஒட்டன்சத்திரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த குளத்துக்கு கிழக்கே புதிய தேசிய நெடுஞ்சாலையையும் பழைய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் வடக்கு தெற்காக இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இந்த நீர் பிடிப்பு பகுதியின் கிழக்குப் பக்கமும் இணைப்புச் சாலைக்கு மேற்கு பக்கமும் ஒரு பகுதியை பூங்காவாகவும் விளையாட்டு அரங்கங்கள் ஆகவும் உருவாக்கினால் சுற்றுப்புற கிராம மக்களுக்கும் பழனி கோவிலுக்கு நடைபாதையாக செல்லும் மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று கணக்கன்பட்டி எல்ஐசி ஈஸ்வரன் தெரிவிக்கிறார்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து:
இயற்கையை பாதுகாக்காவிட்டால் சமூகம் சிறப்புடன் வாழ முடியாது! பொதுவாக தமிழக முழுவதும் உள்ள ஏரிகளையும் குளங்களையும் பாதுகாக்கவும் அவற்றின் பயன் மக்களுக்கு கிடைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.