அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்? பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து விட்டதே?” என்றேன் நான்“. “ஆமாம்! ஆமாம்! அங்கு மட்டுமே, அதை கடைசியில் சொல்கிறேன்” எனக் கூறி விட்டு உள்ளிட்ட கருத்து மூட்டைகளை வீசத் தொடங்கினார் வாக்காளர் சாமி.
“தேனீக்கள் பூவிலிருந்து தேன் எடுப்பது போலவும் அரசு வருவாயை பெருக்கலாம். சுத்தியால் அடித்து பெறுவது போலவும் வருவாயை பெருக்கலாம். இந்திய வருமான வரி சட்டம், ஜிஎஸ்டி சட்டம் ஆகியன சுத்தியால் அடித்து வருமானத்தை பெருக்குவது போல உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் அவர்கள் ஓரிரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
“அதே நிகழ்வில் வழக்கறிஞராக வருவோரில் பத்தில் ஏழு பேர் தகுதியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது கவலை அளிக்கிறது சாமி” என்றேன் நான்.
“சேலத்தில், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற ஒன்பது பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கடந்த வாரத்தில் கைது செய்துள்ளார்கள். அவர்களிடமிருந்து 7,900 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதை மாத்திரை கும்பலை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அழிக்காவிட்டால் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் அழிந்துவிடும்” என்றார் வாக்காளர் சாமி.
“பூங்கா இதழில் மெத்தம்பேட்டமைன் போதை மருந்து குறித்து விரிவாக கட்டுரை எழுதி இருந்தோமே சாமி” என்றேன் நான்.
“சேலத்தில், டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூபாய் 500 கோடி மோசடியாக வசூல் செய்த பிரமுகரும் அவரது ஆட்களும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி பலரை மிரட்டி பல கோடிகளை சம்பாதித்த மோசடி கும்பலில் ஒருவரை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் மூலம் பல கோடிகளை மக்கள் இழந்துள்ளது வேதனையாக உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
“அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவிகளையும் ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்கரைன், வங்கதேசம் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் உதவிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே சமயத்தில் இஸ்ரேலுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது சாமி” என்றேன் நான்.
“வங்கதேசத்துக்கு அமெரிக்க உதவிகள் நிறுத்தப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு சீனா வங்கதேசத்துக்கு உதவத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதிகளும் வங்கதேசத்துக்கு சென்று ஆலோசனை நடத்திய உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை இந்திய அரசின் வெளியுறவுத் துறையும் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் ரா (R.A.W.,) எனப்படும் உளவுத்துறையும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றார் வாக்காளர் சாமி.
“உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது சாமி” என்றேன் நான்.
“வந்ததிலிருந்து அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறாயே, அதில் உள்ள இன்னொரு விவரம் என்ற என்னவென்றால் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்விங் டுகெதர்) ஜோடியாக வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளவர்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தில் உள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“நல்லதுதானே சாமி! திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை இந்தியா முழுவதும் கொண்டு வரலாம். இதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் சாமி” என்றேன் நான்.
“அமெரிக்காவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் உரிமைகளைப் போல ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ரம்ப் பதவி ஏற்றதும் இவற்றை ரத்து செய்து விட்டார். மனிதர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழலாம் என்ற வாழ்க்கை முறை கருத்துக்களும் செயல்பாடுகளும் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளது. இதனை டிங்க் வாழ்க்கை முறை என அழைக்கிறார்கள். என்னமோ நடக்குது நாட்டுல ஒண்ணுமே புரியல” எனக் கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.




