‘பச்ச மலைப் பூவு, நீ உச்சி மலைத்தேனு… குத்தங்குறை ஏது… நீ நந்தவனத் தேரு…’ என்ற திரைப்பட பாடல் ஒரு காலகட்டத்தில் மிகப்பிரசித்தி பெற்றதாக இருந்தது. தற்போதும் இந்த பாடலைக் கேட்டால் மனம் மகிழும் என்றால் மிகையல்ல. பச்சைமலை சங்ககாலத்தில் ‘விச்சிமலை’ என்று அழைக்கப்பட்டது. மலையஞ்சிவந்தி எனப்படும் விச்சிப்பூ இம்மலையில் இக்காலத்திலும் மிகுதியாகப் பூக்கிறது. விச்சிமலைநாடு ‘மடங்கா விளையுள் நாடு’ என்று கபிலரால் போற்றப்பட்டுள்ளது.(புறநானூறு 200).
விச்சிமலை நாட்டு மன்னன் விச்சியர் பெருமகன் சோழ வேந்தன் ஒருவனோடு போரிட்டதைப் பார்த்த குறும்பூர் மக்கள் புலியும் குறும்பூள் பறவையும் போரிடுவது போல் உள்ளதே என்று பேசிக்கொண்டு ஆரவாரம் செய்தார்களாம். (பரணர் – குறுந்தொகை 328). திருமாலைப் பற்றி பாடிய ஆழ்வாரும் “பச்சைமா மலை போல் மேனி” என்று பச்சை மலையை குறிப்பிட்டுள்ளார். ‘பச்சை மலை, பவள மலை எங்கள் மலை’ என குற்றாலக் குறவஞ்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் மகாராணியான பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பச்சமலை கடல். மட்டத்திலிருந்து 1,072 மீட்டர் உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இறுதியில் 1,30375 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
திருச்சியிலிருந்து 73 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 112 கி.மீ தொலைவிலும் பச்சைமலை அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து துறையூர் சென்று, அங்கிருந்து ஆத்தூர் சாலையில் உப்பிலியபுரம் சென்று அங்கிருந்து சோபனபுரம் வழியாகப் பச்சைமலையின் மேல் பயணிக்கலாம். இல்லையென்றால், பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலை செல்லலாம்.
மக்கள்
தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு என மூன்று நாடுகளாக பச்சைமலையை பச்சைமலையில் வாழும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 48 கிராமங்களை கொண்டுள்ள பச்சைமலை பகுதியில் மக்கள் தொகை 10,774. இம்மலைவாழ் மக்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழில். பலாப்பழம் இம்மலைப் பகுதிகளில் இருந்து இருந்து வரும் ஒரு பிரபலமான பருவகால விவசாயப் பொருளாகும். மரவள்ளிக்கிழங்கு, முந்திரி, நெல் மற்றும் கரும்பு ஆகியன இங்கு பயிரிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், காபி தோட்டங்களும் மலைப்பகுதிகளில் நல்ல வளர்ச்சியைப் பெறுகின்றன. பச்சைமலையில் நாட்டின் தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் காணக்கிடைக்கின்றன.
இந்த மலைகளை வீடுகள் என்று அழைக்கும் பூர்வீக குடிமக்களின் தனித்துவமான வாழ்க்கை முறை நம்ப முடியாத கலாச்சாரமாக உள்ளது. இம்மக்கள் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கு ஏற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. வானொலியும், தொலைக்காட்சியும் எங்கும் கிடைக்கும் இக்காலத்திலும், பொழுதுபோக்கிற்காக நாடகங்களும், பாடல்களும் நடத்தி வருகின்றனர், பச்சைமலைவாழ் மக்கள்.
இயற்கை
சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன. இம்மலைகளின் வழியாக ஓடும் ஆகிய ஸ்வேத நதி மற்றும் கல்லாறு ஆகிய இரண்டு பிரகாசமான ஆறுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது பச்சை மலை. காவேரி ஆற்றுப் படுகை மற்றும் பாலாறு ஆற்றுப் படுகை ஆகியவை இந்த அற்புதமான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளன. அவை கிரானைட் கற்களால் ஆன வட்டமான மலைகளின் வரிசையை உருவாக்குகின்றன. சால் காடுகள் தட்டையான மலை உச்சிகளில் செழித்து வளர்கின்றன. அதே சமயம் ஸ்க்ரப் காடுகள் சரிவுகளில் செழித்து வளர்கின்றன. பள்ளத்தாக்குகள் வளமான களிமண் மற்றும் அதற்கு ஒத்த மண்ணைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வளர்க்கின்றன. இயற்கை ஆர்வலர்கள் மலையேற்றம், பறவைகளைப் பார்ப்பது மற்றும் இயற்கை புகைப்படம் எடுத்தல் போன்ற பல செயல்களில் ஈடுபடலாம். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஓய்வு எடுக்க விரும்புவோருக்கு, பச்சமலை ஓர் சிறந்த வார இறுதி விடுமுறை தலம். ரசிக்கும்படியான மிதமான குளிர் மட்டுமே இங்கு நிலவும். அதிகமான குளிரை இங்கு எதிர் பார்க்க முடியாது.
அருவிகளின் மலை
பச்சைமலையில் மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, ’மயிலூற்றுஅருவி, கோரையாறு அருவி எனப் பல அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறைக்கு சென்று, அங்கிருந்து விஜய புரம், அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கோரையாறு கிராமம் வரை அரசு உள்ளூர் பேருந்துகள் செல்கின்றன. சொந்த வாகனங்கள் முதுகு மூலம் செல்வது பயணத்தை எளிமையாக்கும்.
கோரையாறு கிராமத்திலிருந்து பச்சைமலை மீது இடையிலுள்ள ஆற்றை கடந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அங்கு உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுகிறது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது. இவ்வருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டும். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் பருவ காலமாகும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ் தொடர்கிறது)
பட்டாம்பூச்சி
வனத்துறை கணக்கெடுப்பின்படி இந்த மலையில் 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன. இங்கு உள்ள காடுகளில் மயில்கள், குயில்கள் அரிய வகைக் குருவிகள், பறவைகளையும், மான், காட்டுப்பூனை போன்றவை வாழ்கின்றன. பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், அதில் விளையாடும் சிறுவர்கள் எனப் போகிற வழி முழுக்கவும் கட்டடங்கள் ஏதுவுமில்லாமல் இயற்கையோடு இணைந்த தூய்மையான மூலிகை வாசம் காற்றுடன் கலந்து வருகிற்து. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம்தான் இந்தப் பச்சைமலை.
எதிர்பார்ப்பு
மலையேற்ற பயிற்சி ஆர்வலர்களுக்காக இரண்டு கிலோமீட்டர், ஐந்து கிலோ மீட்டர், ஏழு கிலோமீட்டர் என்று மூன்று வழிதடங்களை அமைக்கவும் அந்த வழித்தடங்களில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் இளைப்பாறுவதற்கான வசதிகளை அமைக்கவும் இரண்டு ஏக்கரில் சாகச விளையாட்டு தலம் அமைக்கவும் 2.5 கிலோமீட்டர் அளவில் குளம் அமைத்து அதில் படகு சவாரி செய்வதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்ட அறிக்கையை திருச்சி மாவட்ட நிர்வாகம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுலாவாசிகள் கருதுகிறார்கள். இந்தப் பகுதியில் சுற்றுலா துறையின் சார்பில் தங்குமிட வசதிகளையும் உணவக வசதிகளையும் ஏற்படுத்தினால் சுற்றுலாத் தொழில் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
பச்சைமலை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் உடனடி தேவையாக உள்ளது. இங்குள்ள மக்கள் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி ஆகியவற்றையே அதிகமாக பயிரிடுகின்றனர். இவர்கள் நேரடியாக சந்தையில் விற்காமல் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதால் அவர்களது வருமானம் குறைவாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக அரசு நேரடியாக பச்சைமலை மக்களின் உற்பத்தி பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டும் அல்லது உற்பத்தியாளர்கள் – நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பச்சை மலையில் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் மேலிருந்து கீழே வழிந்தோடிவிடும். அந்த நீரை தேக்கிவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு இல்லை. தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டத்தை வடிவமைத்து அமல்படுத்துவது பச்சை மலையில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க உதவும். கோரையாறு அருவியில் சீரமைத்து இரண்டு அடுக்காக தண்ணீர் தேங்கி நின்று வழிந்தோடும்படி வடிவமைக்கவும், வழிந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க 63 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுருங்கக் கூறின் பச்சைமலை மக்களின் மேம்பாட்டுக்கும் இந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: பச்சை மலைக்கு போவோம் இயற்கையை அனுபவிப்போம்!


“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)

பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |