இந்திய தேசத்தின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் சாமானிய வாக்காளர்களின் தேர்தல் அறிக்கையாக சில கேள்விகள் அரசியல் களத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்கு முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு அரசியல் கட்சியினர் பதிலளிப்பார்களா? இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள கோரிக்கைகளை ஆட்சியில் அமரும் கட்சி நிறைவேற்றி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1. இந்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க சிறப்பு தேர்தல் தீர்ப்பாயங்கள் (Special Election Tribunal) அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மூன்று மாதங்களில் தீர்க்கும் வகையில் மாநில அளவில் பிராந்திய தேர்தல் தீர்ப்பாயம் அமைக்கப்படுமா?
2. மாநில தேர்தல் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளை மூன்று மாதங்களில் முடித்து வைக்கும் வகையில் தேசிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படுமா?
3. மேல்முறையீட்டு தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுக்களை மூன்று மாதத்தில் முடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்த வழிவகை செய்யப்படுமா?
4. வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வாக்காளரின் உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டு வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படுமா?
5. வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படுமா?
6. தவறான வாக்குறுதிகள், போலியான விளம்பரங்கள், தவறான கருத்துக்கள், வெறுப்பு கருத்துக்கள் ஆகியவற்றை பரப்பும் வேட்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படுமா?
7. பிரதம அமைச்சர், முதலமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை கிழமை நீதிமன்றத்திலும் மேல் நீதிமன்றங்களிலும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசியல் கட்சியில் வழங்கி அதற்கு தகுந்தவாறு சட்டம் இயற்றுவார்களா?
8. தேர்தல் காலங்களில் பேரணிகள், பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களை தடை செய்து ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து அனைத்து வேட்பாளர்களையும் அவர்களது கருத்தை தெரிவிக்கும் ஏற்பாட்டை வாக்காளர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் கொண்டு வருவார்களா?
9. நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக அரசியல் கட்சியில் வாக்குறுதி அளிப்பார்களா?
10. அரசு மற்றும் நீதித்துறையில் பொறுப்பு வகிப்பவர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்போது பதவி விலகிய பின்னர் ஆறு மாத காலத்திற்கு எந்த தேர்தல்களிலும் போட்டியிடக் கூடாது என்ற சட்டத்தை அரசியல் கட்சிகள் உருவாக்க முன்வருவார்களா?
11. திரு டி என் சேசன் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையத்தின் சார்பில் இயங்கிய தேசிய வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் மீண்டும் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டு சிறப்பாக அமல்படுத்த தகுந்த விதிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் முன் வருவார்களா?
அருமையான பதிவு