Advertisement

தேர்தலில் வெற்றி பெற்று ஆறு மாத காலத்துக்குள் சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?

கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்தியது.  இதன்படி பொதுமக்கள் கேட்கும் தகவலை 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படாவிட்டால் மேல்முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய பொதுமக்களுக்கு உரிமை உண்டு. மேல்முறையீட்டு அலுவலரின் பதிலில்  திருப்தி இல்லாவிட்டால் மாநில தகவல்  ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீடை பொதுமக்கள் செய்ய முடியும்.  இதைப் போலவே மத்திய அரசின் துறைகளில் தகவல் பெற பொது தகவல் அலுவலர்களும் மேல்முறையீட்டு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு மத்திய தகவல் ஆணையமும்   செயல்பட்டு வருகிறது.

தகவல் உரிமை சட்டத்தை போல சேவை உரிமை சட்டம் இயற்றப்பட்டால் பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவி பெறும் அமைப்புகளில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளைப் பெற விண்ணப்பம் செய்யும் போது காலதாமதம் ஏற்படுவது முற்றிலும் அகற்றப்படும்.  குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் சேவை வழங்கும்  அலுவலரிடம் புகார் செய்ய இயலும். சேவை உரிமை சட்டத்திலும் மேல்முறையீட்டு அலுவலர்களை நியமிக்கவும் மாநில மற்றும் மத்திய சேவை ஆணையங்களும் அமைக்கப்பட இச்சட்டம் வழி வகுக்கும்.

உதாரணமாக, மாநில அரசின் அலுவலகத்தில் பிறப்புச் சான்று கேட்டு விண்ணப்பம் செய்து அதனை குறிப்பிட்ட நாட்களில் வழங்க வேண்டும் என்று நடைமுறை உள்ள நிலையில் அதனை வழங்க தவறினால் சேவை வழங்கும் அலுவலரிடம் முறையீடு செய்ய இயலும், மற்றொரு உதாரணமாக, மத்திய அரசின் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யும் போது பாஸ்போர்ட்   வழங்கப்படாமல் இருக்குமாயின் அல்லது ஒரு தொழிலை தொடங்க விண்ணப்பம் செய்யும் போது உரிமம் வழங்கப்படாமல் இருக்குமாயின் சேவை வழங்கும் அலுவலரிடம் முறையீடு செய்ய இயலும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் போல சேவை உரிமை சட்டத்தை கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், புதுடெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,   உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்  இயற்றி செயல்படுத்தி வருகின்றன.  இதைப் போலவே தேசம் முழுவதும் சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு சட்டமுன் வடிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.  தற்போது வரை இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆகும்.

நடைபெறும் தேர்தல் திருவிழாவில் வெற்றி பெற்று மத்தியில் புதிய ஆட்சியை அமைக்கும் அரசு ஆட்சி அமைத்த ஆறு மாதங்களுக்குள் சேவை உரிமை சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா?

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles