Advertisement

ஏமாத்த ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சார்ந்த சரளா திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் கணவரோடு வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இவர் கடந்த ஆண்டு பேஸ்புக்கில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.  அதில் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் பல லட்சங்களை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சம்பாதிக்கலாம் என இருந்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தில் வசிக்கும் சரளாவிற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் இந்த விளம்பரம் அவருக்கு பிடித்து போனது.  விளம்பரத்தில் உள்ள கம்பெனிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் அவருக்கு உள்ள விருப்பத்தை தெரிவித்த போது விளம்பரம் செய்த கம்பெனி தங்களின் மொபைல் ஆப்பை Mobile App) டவுன்லோடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். 

பங்கு வர்த்தகத்துக்கு டீமேட் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமா? என கேட்டபோது தாங்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின்   துணை நிறுவனம் என்றும் தாங்கள்   கூறும் பங்குகளை வாங்குவதற்கு தாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் போதுமானது என்றும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு அந்த கம்பெனி பிரதிநிதி  சரளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்தால் பணம் கிடைக்கும் என சொன்னதை நம்பி ஆறு ஏழு முறை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

பின்னர் மூன்று முறை தான் முதலீடு செய்த பங்கு விலை உயர்ந்துள்ளது எனக் கூறி அதனை விற்றுத் தருமாறு சரளா கேட்டபோது அந்த   நிறுவனத்தினரும் அதனை விற்று விட்டதாக கூறி 15 நிமிடங்களில் சரளாவின் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி உள்ளனர்.  இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூபாய் 5 லட்சத்தை ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு சரளாவிடம் அந்த   நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

சரளா நிறுவன அலுவலர்களை நேரடியாக சந்திக்க விரும்பியும் நிறுவனத்தினர் சரளாவை சந்திக்க அனுமதிக்கவில்லை. மேலும், டீமேட் அக்கவுண்ட் மூலமாக அல்லாமல் தொடர்ந்து தனி  நபர்களின் வங்கி கணக்குகளுக்கு நிறுவனத்தினர் பணம் அனுப்பக் கூறியதால் சந்தேகம் அடைந்த சரளா உடனடியாக அந்த நிறுவனத்தினர் மூன்று முறை பணம்   செலுத்திய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றி விட்டு அந்த நிறுவனம் கூறியது போல பங்கு எதையும் வாங்கவில்லை. 

பிரச்சனை எதுவும் இல்லாமல் தப்பித்து வெளியில் வந்து விட்டதாக சரளா நினைத்துக் கொண்டிருக்கையில் கோவையிலிருந்து போலீசார் போன் செய்து சில நாட்களுக்கு முன்பு   சரளாவின் கணக்கிற்கு ரூபாய் ஒரு லட்சத்தை தமது தந்தை செலுத்தியுள்ளதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்   என தெரிவித்துள்ளனர். அதே நாளில் தெலுங்கானாவில் இருந்து போலீசார் தொடர்பு கொண்டு ரூபாய் 93  ஆயிரத்தை உங்கள் கணக்குக்கு ஒருவர்   அனுப்பி வைத்து ஏமாந்ததாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அப்பாவி பெண்ணின் மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டனர். தற்போது பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்மணி அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன்  பெறவும் வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும்   அலைந்து கொண்டு உள்ளார்.  இது உண்மைச் சம்பவம்.  பாதிக்கப்பட்ட பெண்மணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உண்மை என்னவெனில் பேஸ் புக்கில்   மோசடியான விளம்பரத்தை செய்த நிறுவனம் எந்த பங்குகளை  வாங்கித் தரவும் இல்லை. விற்றுத் தரவும் இல்லை.  இவர்களிடம் வாடிக்கையாளராக இணையும் நபர்களிடம் குறிப்பிட்ட பங்கை வாங்கினால் சிறந்தது எனக் கூறி நம்ப வைத்து அதற்கான பணத்தை மூன்றாம் மனிதர்களின் கணக்கில் செலுத்துமாறு தெரிவிக்கின்றனர். பணம் செலுத்துபவர்களுக்கு தனி மனிதர்களின் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என்பது தெரிவதில்லை. சில பங்குகளை விற்றால்   லாபம் வரும் என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும்போது   மோசடி கம்பெனியின் வாடிக்கையாளர்களாக உள்ள நபர்களை பங்கை விற்க விரும்பும் நபர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு   கூறி 15 நிமிடத்தில் பணத்தை  வங்கி கணக்கில் சேர்க்கிறார்கள்.   இவ்வாறான நம்பிக்கை ஏற்பட்ட பின்பு அதிக தொகையை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள்

இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டவர்களின் பதிவுகளை பார்க்க:  https://www.reddit.com/r/Scams/comments/192epn7/ally_world_wealth_training_camp/?rdt=53838.  மோசடியான விளம்பரங்களை நம்பி எதையும் விசாரிக்காமல் பணத்தை இழந்து விடாதீர்கள். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும்  பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்கவும் தகுந்த புலனாய்வு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

வெ.ஜீவகுமார்
வெ.ஜீவகுமார்
வெ.ஜீவகுமார், வழக்கறிஞர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles