இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாக திகழ்வது இணையதள தாக்குதலும் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளும்தான். சர்வதேச அளவில் இணையதள தாக்குதலுக்கு உட்படும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக நம் நாடு இருந்து வருகின்றது.
இணையதள தாக்குதல் என்பது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நாட்டின் மீது தொடுக்கக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தாக்குதல் என்று கருதப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் ஆயுதங்களைக் கொண்டு மற்ற நாடுகள் மீது போர்கள் தொடுக்கப்பட்டது. ஆனால், இன்று இணையதளத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான குற்றங்களை, தாக்குதல்களையும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது தொடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு இணைய தாக்குதல்கள் மேற்கொள்வதற்கு குறைவான செலவுகள் ஆகின்றன. ஆனால், அதே நேரத்தில் அதிக சேதங்களை விளைவிக்க கூடிய வகையில் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை தாண்டி ஒரு நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை பாதிக்கக்கூடிய ஒரு காரணியாக இணைய தாக்குதல்கள் உருவாகி உள்ளது. இணையவழி தாக்குதல்கள் பல்வேறு வகையில் நிகழ்கின்றது. அதில் முக்கிய வடிவங்கள் பின்வருவன.
அரசாங்க தகவல்களை திருடுவது, அரசாங்கம் மற்றும் தனியார் பயன்படுத்துகின்ற இணையதளங்களை முடக்குவது, மிக முக்கியமாக ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் உள்ள தகவல்களை திருடுவது, மிகப்பெரிய தொகைகளைக் கேட்டு இணையதள தாக்குதல்களை நிகழ்த்துவது, அரசு மற்றும் பொதுமக்கள் சார்ந்த ரகசிய தகவல்களை திருடி மற்றவர்களுக்கு விற்பது, சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்கள் இடையே உளவியல் சார்ந்த பயத்தை ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுவிழக்க செய்வது, அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தலைவர்களை அவர்கள் அனுமதி இன்றி பின்தொடர்வது மற்றும் அவர்கள் சார்ந்த தகவல்களை ஊடுருவி பார்ப்பது, தீங்கிழைக்கும் மென்பொருட்களை கணினி மற்றும் கைபேசிகள் வழியாக பயனாளிகளின் அனுமதி இன்றி பதிவிறக்கம் செய்து பாதிப்புகளை ஏற்படுத்துவது, சர்வதேச அரங்கில் ஒரு குறிப்பிட்ட நாடானது பாதுகாப்பில்லாத நாடாக உள்ளது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது,
இனையதளத்தை பயங்கரவாதம், தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது. இவ்வாறு நிகழக்கூடிய இணையதள தாக்குதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பில்லாத சூழ்நிலையை சமாளிப்பதற்கு இந்திய நாடு பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் முக்கியமானவைகளில் ஒன்று, வெளிநாடுகளில் தயாரிக்கக்கூடிய மென்பொருட்கள் மற்றும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க உள்நாட்டிலே தயாரிக்க கூடிய மென்பொருட்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை அரசாங்கத்தினுடைய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது. மேலும் தனி நபர்கள் பயன்படுத்தக்கூடிய கணினியில் உள்ள மென்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, ஒருவேளை இணையதள தாக்குதல்கள் நிகழ்ந்தால் அதை எதிர் கொள்ளக் கூடிய வகையில் இணைய கட்டமைப்பை உருவாக்குவது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் நம் நாடு ஈடுபட்டு வருகின்றது.
எதிர்காலத்தில் இணையத்தை பயன்படுத்தி நடத்தக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கையானது பெருகுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதை எதிர் கொள்ளக் கூடிய வகையில் அரசு மற்றும் அரசு சாராத பொது நிறுவனங்கள், தனி மனிதர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வது இன்றியமையாத ஒரு செயலாக கருதப்படுகிறது.
Good information news park