Advertisement

மாதவிடாய் கால சானிட்டரி நாப்கின்கள் – வரமா? சாபமா?

இந்தியாவில் பெண்கள் தங்களுடைய மாதவிடாயை (mensuration period) நிர்வகிக்க தீவிர போராட்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை அறியாத பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களின் கருப்பையில் இருந்து ரத்தம் மற்றும் திசுக்கள்  வெளியில் வந்து பிறப்புறுப்பின் வழியாக உடலை விட்டு வெளியேறும் காலத்தையே மாதவிடாய் காலம் என்று அழைக்கிறோம்.  இத்தகைய இயற்கையின் சுழற்சியை ஒரு ‘சாபம்’, ‘தூய்மையற்றது’ மற்றும் ‘அழுக்கு’ என்று அறிவியல் பூர்வமாக முன்னேறிய தற்போதைய சமூகத்திலும்   பெரும்பாலானவர்கள் கருதுவது வேதனை அளிக்கிறது.

பெண்களின் மாதவிடாய் கால உரிமைகளை (Right of Mensuration Period) அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளாலும் தனிநபர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதையே அருவருப்பான செயலாக பலர் கருதுவது கோபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.  ஸ்பெயின் நாட்டில் அரசாங்கம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது மூன்று நாட்கள் வரை விடுமுறை  அளித்துள்ளது. இதைப் போலவே ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், தென் கொரியா, ஜாம்பியா மற்றும் வியட்நாம் நாடுகளிலும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில்  “பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான அணுகல் உரிமை மசோதா”  பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவரால் தனிநபர் மசோதாவாக கொண்டு வந்தும் சட்டமாக்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டின் இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 33 கோடி  மகளிர் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் ஏழு    நாட்கள் வரை மாதவிடாய்  காலத்தில் வாழ்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்லும் பெண்கள் ஆகியோருக்கு மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் மாதவிடாய் பட்டை உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு வசதியான இடங்களும் இதற்கு முன்னதாகவும் பின்னதாகவும் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளும் அகற்றப்பட்ட கழிவை வைப்பதற்கான வசதிகளும் இருக்க வேண்டியது பெண்களின் அடிப்படை உரிமைகள் ஆகும். இவற்றுக்கு இணையான மற்றொரு உரிமை என்னவெனில் சந்தையில் விற்கப்படும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பட்டைகள் உள்ளிட்டவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இல்லாமல்   இருக்க வேண்டும் என்பதாகும்.  

மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் வணிக ரீதியாக  விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்  உள்ளிட்ட மாதவிடாய் கால  பொருட்கள் மூலமாக பெண்களுக்கு தீங்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2015-2016 மதிப்பீட்டின்படி, இந்தியாவில் உள்ள 336 மில்லியன் மாதவிடாய் பெண்களில் சுமார் 121 மில்லியன் (சுமார் 36 சதவீதம்) பெண்கள் உள்நாட்டில் அல்லது வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். 

சானிட்டரி பேட் பாக்கெட்டுகள் மருத்துவ பொருட்கள் என்ற வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளதால் சானிட்டரி பேட் பாக்கெட்டில் அவை எந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுவதில்லை. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு இணையாக உள்ள பெண்கள் பயன்படுத்தும்   மாதவிடாய் கால சானிட்டரி பொருட்களில் அவை   எவற்றால் தயாரிக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது அவசியமானதாகும். இந்திய சந்தைகளில் விற்கப்படும் சரியான ஆராய்ச்சியும் தொடர் கண்காணிப்பும் நடத்தப்பட்டதாக   அல்லது நடத்தப்படுவதாக தெரியவில்லை. இப் பொருட்களில் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் உள்ளிட்ட மூலக்கூறுகள் சேர்க்கப்படுவதாக பலர்  தெரிவிக்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் கடைகளில் பெரும்பாலும் கிடைக்கும் பொதுவான சானிட்டரி  நாப்கின்களையே பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.    இவற்றை தயாரிக்க பெத்தலைட்ஸ்,கார்சினோஜன், டைஆக்சிங் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.  சானிட்டரி நாப்கின்களில் பாரபின்ஸ், சுற்றுச்சூழல் பினால்கள், வாசனை ரசாயனங்கள் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்த மூலப் பொருள் கேன்சரை உருவாக்குவதில் ஒரு காரணியாக இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய கருத்து உண்மையானது என கூறப்படும் நிலையில் பொதுவாக கடைகளிலும் மற்ற இடங்களிலும் கிடைக்கும் சானிட்டரி நாப்கின்களில் பெண்களுக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் இல்லாமல்   விற்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். 

சிலிக்கானால் செய்யப்பட்ட காகிதமானது ஒரு சானிட்டரி பேடின் செயல்திறன் உறிஞ்சும் திறனை கொண்டது என்பதால், உறிஞ்சக்கூடிய மையத்தில் சூப்பர்அப்சார்பண்ட் பாலிமர்கள் (SAPs) பயன்படுத்தப்படுகிறது.  நாப்கின்களில் இத்தகைய ரசாயன உபயோகத்தால் இடுப்பு அழற்சி நோய்,  கருப்பை புற்றுநோய், நோய் எதிர்ப்பு அமைப்பு சேதம், பலவீனமான கருவுறுதல் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை உருவாக்குகிறது. 

பெரும்பாலான கடைகளில் பொதுவாக  கிடைக்கும்   நாப்கின்களை தவிர காட்டன் பேட்ஸ், ஆர்கானிக் காட்டன் பேட்ஸ், மென்சுரல் கப்ஸ், டேம்பான்ஸ்  போன்றவையும் தற்போது இந்தியாவில் பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. காட்டன் சானிடரி பேடை  பயன்படுத்துவது மிகவும் எளிது. அந்த பேடை 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றவும் பின்னர் அதை துவைத்து வெயிலில் காய வைத்து பின்னர் உபயோகிப்பது சிறந்தது – சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. சுற்றுச்சூழலை பாதிக்காத மறுசுழற்சி செய்யப்பட்ட காகித கூழ், ஆர்கானிக் பருத்தி, ஆர்கானிக் மூங்கில், வாழை மரத்தின் தளிர்கள் அல்லது யூகலிப்டஸ் மரங்களிலிருந்து ஆர்கானிக் ரேயான் ஆகியவற்றிலிருந்து ஆர்கானிக் பேட்கள் தயாரிக்கப்படுகிறது.   சாதாரண சானிட்டரி பேடுகளை விட சிறந்தது   எனினும் இதன் விலை சற்று அதிகமாகவே உள்ளது.

மாதவிடாய் காலத்தில் மென்ஷுரல்  கப்பை உபயோகிக்கும் பழக்கமும் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், வேலை செய்யும் பெண்கள் இதனை பயன்படுத்தும் போது உட்கார்ந்து எழுவது சிரமமாக உள்ளது என்றும் சில நேரங்களில் சேகரிக்கப்படும் ரத்தமானது படுக்கும் போது தலைகீழாக வந்த இடத்துக்கு சென்று விடுவதால் ஆபத்து நிறைந்தது என்றும் கூறுகிறார்கள். டேம் பாண்ட்ஸ் என்ற வகை மாதவிடாய் கால சாதனத்தை பயன்படுத்தும் போது  வெளியேறும்   ரத்தத்தில் உள்ள நீரை மட்டும்தான் இந்த டேம்போன்கள் உறிஞ்சும். அதனுடன் வரும் கழிவுகள் மற்றும் கட்டிகள் இதனை எல்லாம் அதில் உறிஞ்சிக் கொள்ளாது  என்பதால் இந்த வகை சாதனங்கள் நாளடைவில் பெண்களுக்கு பெரிய பிரச்சினையை விளைவிக்கும். மென்சுரல் டிஸ்க் என்ற வகை மாதவிடாய் கால சாதனத்தை பயன்படுத்தும் போது சிலருக்கு தொற்று நோய் ஆபத்தும் ஒவ்வாமையும் ஏற்படலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் கால உரிமைகளையும் வழங்குவதோடு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் இதர சாதனங்கள் எவ்வகையிலும்  பெண்களின்  உடல் நலத்திற்கு தீங்கிழைக்காதவாறு இருப்பதை  உறுதிப்படுத்த தக்க நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தக்சினா.சி
தக்சினா.சி
நுகர்வோர் பூங்கா பயிற்சி ஆய்வாளர் / நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவி

Related Articles

7 COMMENTS

  1. அரசின் பொறுப்பை உணர்த்தும் பதிவு👏பாராட்டுக்கள் சகோதரி💥👏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles