திண்டுக்கல் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் பழனி மலைத்தொடரில் உள்ள கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 7200 அடிகள் உயரத்தில் உள்ளது. கொடைக்கானலுக்கு வடக்கில் உயரமான மலைகளுடன் கிராமங்களுக்கு செல்லும் பகுதியும் தெற்கே கம்பம் பள்ளத்தாக்கை இணைக்கும் பகுதியும் உள்ளது. மேற்கில் ஆனைமலை – மஞ்சம்பட்டி பள்ளத்தாக்குக்கு செல்லும் பீடபூமியும் கிழக்கில் மலைச்சரிவுகள் குறைந்த பழனி மலைத்தொடரின் பகுதிகளும் உள்ளன. பெருந்தலை சாத்தனார் எழுதிய புறநானூற்றில் கோடைமலை என்ற பெயரில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக தற்போதைய கொடைக்கானல் இருந்துள்ளது என்றும் கடியநெடுவேட்டுவன் என்பவர் மன்னராக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கு முன்பு
அடர்ந்த காடுகளையும் நதிகளையும் சிற்றருவிகளையும் கொண்டு இருந்த கொடைக்கானல் நிலப்பரப்பு யாருக்கும் தெரியாத பூமியாகவே சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. ஆனால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே கொடைக்கானலை சுற்றியுள்ள பழனி மலைப் பகுதி குக்கிராமங்களில் சுமார் 4000 மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். இங்கு வாழ்ந்த பளியன் என்ற வகையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிறுதானியங்களை விளைவிப்பது, வேட்டையாடுவது, தேன் எடுப்பது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளனர்.
ஆங்கிலேயர்கள் வருகை
1821 ஆம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதிக்கு நில அளவை பணியை மேற்கொள்ள ஆங்கிலேய அதிகாரியான பி.எஸ். வார்டு என்பவர் வருகை புரிந்துள்ளார். இவர் தற்போது கொடைக்கானல் அமைந்துள்ள பகுதியை நல்ல தட்பவெட்பம் உள்ள தங்குவதற்கு ஏற்ற இடம் என அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். இந்நிலையில் 1853 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரிகளால் கொடைக்கானல் பகுதியில் ஏழு வீடுகள் கட்டப்பட்டது. 1852 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆளுநர் சார்லஸ் ட்ரெவல்யன் கொடைக்கானலுக்கு வந்து சென்ற பின்னர் 1853 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெரே லெவிங்கே ஆணையின்படி தற்போது படகுத்துறை (boat club) உள்ள நட்சத்திர வடிவிலான செயற்கை ஏரியானது உருவாக்கப்பட்டது.
1872 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் கோக்கர்ஸ் என்பவர் மலைகளின் இடையே நடைபாதை ஒன்றை அமைத்தார். இன்றளவும் அந்தப் பாதை கோக்கர்ஸ் வாக் (cokkers walk) என அழைக்கப்படுகிறது. 1901 -ல் இயற்பியல் கண்காணிப்பகம் (observatory) ஒன்று கொடைக்கானலில் அமைக்கப்பட்டது. 1909-ல் கொடைக்கானல் 151 வீடுகளையும் அஞ்சல் நிலையத்தையும் தேவாலயம், பள்ளி, கடைகளையும் கொண்டு இருந்தது. சாலை வசதி ஏற்படுத்தப்படுவதற்கு முன்னதாக குதிரைகளிலும் மாட்டு வண்டிகளிலும் ஆங்கிலேய அதிகாரிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்துள்ளனர். சில இடங்களில் கூலி ஆட்கள் ஆங்கில அதிகாரிகளை சுமந்து கொண்டு சென்றுள்ளனர். 1914 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது.
கொடைக்கானல் – மூணாறு சாலை
இரண்டாம் உலகப் போரின் போது தப்பித்துச் செல்வதற்காக பயன்படுத்தும் வழியாக கொடைக்கானலில் இருந்து மூணாறு வரை ஆங்கிலேயர்களால் பாதை அமைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு 82 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாதை கைவிடப்பட்டது. கொடைக்கானலில் இருந்து கேரளா எல்லை வரை செல்லும் பகுதியில் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயமும் கேரள எல்லையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் பாம்படம் சோலா தேசிய பூங்காவும் அமைக்கப்பட்டு விட்டதால் இந்தச் சாலையை மீண்டும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இந்தப் பாதை திறக்கப்பட்டால் இந்தப் பாதையின் வழியாக செல்லும்போது இரு பக்கங்களிலும் உள்ள விவசாய நிலங்களுக்கு மிகுந்த உபயோகமாகவும் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகுந்த பயன்பாடாகவும் இருக்கும் என்று பலர் தெரிவிக்கின்றனர்.
பழனியில் இருந்து பறப்போமா?
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் ரோப் கார் பிரிவு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் கடற்கரை ஓரங்களிலும் மலைகளிலும் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் ரோப் கார் பிரிவு சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் கடற்கரை ஓரங்களிலும் மலைகளிலும் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் அமைந்துள்ள பழனி மலை கோவிலில் ரோப் கார் இயக்கப்பட்டு வரும் நிலையில் பழனி அருகே உள்ள தேக்கன் தோட்டம் என்ற மலை அடிவாரத்தில் இருந்து கொடைக்கானல் நகரில் அமைந்துள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயில் வரை ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ரோப் கார் அமைக்கப்பட்டால் 30 நிமிடத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் தூர பயணத்தில் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு பறந்து செல்லலாம். இந்தியாவில் 18 இடங்களில் ரோப் கார் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பழனி – கொடைக்கானல் ரோப் கார் சேவையும் அதில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி கொடைக்கானல் குறுகிய தூர வழி
கொடைக்கானலில் இருந்து மலைப் பகுதியில் சமவெளியாக அமைந்துள்ள பள்ளங்கி என்ற இடத்துக்கு பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது. இங்கிருந்து பழனி அருகே உள்ள கிராமமான பாலசமுத்திரத்திற்கு சாலை வசதி இல்லை. ஆனால், முன்பு பள்ளங்கியில் வாழ்ந்த மக்கள் பாலசமுத்திரம் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல 65 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தின் போது பழனியில் இருந்து பால சமுத்திரம், பாலாறு அணை, ஐந்து வீட்டு அருவி வழியாக கொடைக்கானலில் உள்ள வில்பட்டி என்ற இடத்துக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூர பயணத்திலேயே செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதையை அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயம் செழிப்பதோடு சுற்றுலா பயணிகளுக்கும் உபயோகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை. அதே சமயத்தில் குறுகிய தூரத்தில் கொடைக்கானலுக்கு சென்றடைவதால் தற்போதுள்ள வழியில் செல்ல பயணத்துக்கு ஏற்படும் எரிபொருளும் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என்பதே உண்மையாகும்.
கொடைக்கானல் அமைவிடம், மக்கள் மற்றும் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த கட்டுரையை காண: https://theconsumerpark.com/kodaikanal-consumer-park-publication/