Advertisement

இந்தியாவில் உள்ளது நியாயமற்ற தேர்தல் முறையா? குறைந்த மக்களின் ஓட்டு – ஆனால் பிரதமர் சீட்டு

இந்திய தேசத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள்வது யார்? என்பதை முடிவு செய்வதற்கான உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. இந்தியாவில் 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் மொத்த மக்களின் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறாத கட்சியே பிரதமர் பதவியைப் பெற்று நாட்டை ஆட்சி செய்துள்ளது.

ஒரு ஊரில் நூறு மக்கள் இருந்தால் குறைந்தது 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஆதரிக்கும் நபரே பெரும்பான்மை மக்களின் ஆதரவு  பெற்றவர் (அதாவது ஐம்பது சதவீதத்துக்கு மேலான மக்கள்) எனக் கூற இயலும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. 

இந்தியாவில் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  பிரதமர் சார்ந்து இருக்கும் அரசியல் கட்சி நாட்டில் உள்ள மொத்த மக்களின் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்ற கட்சியாக இருந்தால் மட்டுமே பிரதமர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஆதரிக்கப்படக் கூடியவர் என கருத இயலும்.

2019 ஆம் ஆண்டில் அதிக மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த போதிலும் அக்கட்சி நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 39.7 சதவீதம் மட்டும் ஆகும்.  2014 ஆம் ஆண்டில் அதிக மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த போதிலும் அக்கட்சி நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 31 சதவீதம் மட்டும் ஆகும்.  2004 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதிலும் அந்த கட்சி 26.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.  2009 ஆம் ஆண்டில் 28.6 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று அக்கட்சி இந்தியாவில் ஆட்சி அமைத்தது. 

இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் கடந்த 20 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சி நடத்திய எந்த ஒரு கட்சியும் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்காளர்களின் ஆதரவை பெற்றிருக்கவில்லை என்பதாகும். அதாவது, பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாமல் குறைந்த சதவீத (less than 50%)  அளவிலான மக்களின்  ஓட்டுக்களை பெற்ற கட்சி பிரதமர் பதவியை பெற்று ஆட்சி புரிகிறது என்ப து இதன் கருத்தாகும்.

பிரான்ஸ் உள்ளிட்ட  நாடுகளில் ஒரு தொகுதியில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு எந்த ஒரு     வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் கிடைக்கவில்லை எனில் முதல் இரண்டு இடங்களை பெறும்  வேட்பாளர்களுக்கு  இரண்டாவது முறை தேர்தல் நடத்தப்பட்டு 50 சதவீதத்துக்கு மேலான வாக்குகளை பெறும் வேட்பாளர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுகிறார்.  

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மக்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு 50 சதவீத மக்கள்  கூட ஆதரிக்காத நிலையில் உள்ள கட்சிகள் பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் ஆதரவை பெற்றவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வர தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? வாக்காளர்களே! நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பீர்களா?.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles