Advertisement

கண்ணாடி இல்லையா-  கைது செய்?

இன்று மதியம் ஒரு வழக்கு விசாரணைக்காக மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த   கோர்ட்டில் பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளேன். இன்று மதிய உணவுக்காக நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு காரில் வளாகத்தில் நுழையும் போது   வழி  தவறி வந்து விட்டோமா என்ற அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

எப்போதும் நடைபெறும் விசாரணைகளை தவிர வழக்கமாக மதிய நேரங்களில் பெட்டி கேஸ்களுக்காக (petty case) 10, 20 நபர்கள் தினமும்   கோர்ட்டுக்கு வருவார்கள்.  நான்கைந்து போலீசார் இருப்பார்கள். ஒவ்வொருவரின் வழக்கும் அழைக்கப்படும் போது   அவர்களைப் பார்த்து உன் மீது   ஹெல்மெட் போடவில்லை என கேஸ் போட்டுகிறார்கள்.   ஒத்துக் கொள்கிறாயா? என்பது போன்ற குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து மேஜிஸ்ட்ரேட்   கிளர்க் கேட்பார். அவர்  ஆமாம் என சொல்ல மேஜிஸ்ட்ரேட்   அபராத தொகையை எழுதி கையொப்பம் செய்து கொடுப்பார். மேஜிஸ்ட்ரேட் கிளர்க் வந்தவரை பார்த்து 200 ரூபாய் அபராதம் கட்டி விட்டு செல் என்பார்.  

வழக்கமாக மூன்று மணிக்கு தான் மேஜிஸ்ட்ரேட்   கோர்ட் ஹாலுக்கு வருவார். நான்   கோர்ட்டுக்குள் சென்று அமர்ந்து போது இரண்டரை மணிதான். நான் அமர்ந்த உடனே சைலன்ஸ்! சைலன்ஸ்! என்ற சத்தம் எனக்கு வியப்பை தந்தது. இரண்டரை மணிக்கே  மேஜிஸ்ட்ரேட் விசாரணை மன்றத்துக்கு வந்து விட்டார். பக்கத்தில் இருந்த சக வக்கீலிடம் என்ன பிரச்சனை? ஏன் இந்த கூட்டம்? என கேட்கலாம் என நினைத்தேன். அப்போது மேஜிஸ்ட்ரேட் பேச ஆரம்பித்தார்.

என்ன சிட்டில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எல்லாம் வந்து இருக்கீங்க? கூட்டம் வேற அதிகமா இருக்கு? என போலீசார் இருந்த   திசையை பார்த்து கேட்டார். ஐயா! உங்களுக்கு தெரியாதது கிடையாது. நேத்து சிட்டிலயும் சிட்டிக்குள்ள வர்ற ஹைவேஸ்லிம்   ஆறு ஆக்சிடென்ட். அதுல மூணு பேர் இறந்துட்டாங்க. ரெண்டு பேர் சீரியஸ் இதனால பேப்பர்ல போக்குவரத்து விதி மீறல்கள்தான் விபத்துக்களுக்கு காரணம் – போலீஸ்தான் பொறுப்பு என தமிழ்நாடு முழுவதும் பேப்பர்ல வந்துருச்சு என பதில் அளித்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.   

தெளிவா சொல்லுங்க. அதுக்கும் இங்கே இவ்வளவு கூட்டம் வந்து இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் என  கேட்டார் மேஜிஸ்ட்ரேட். ஐயா போக்குவரத்து விதி மீறல்கள்தான் இறப்புகளுக்கு காரணம் என மீடியால பெரிய அளவில் வந்துவிட்டதால்   உள்துறை செயலாளர் நேரடியாகவே சிட்டி போலீஸ் கமிஷனரை அழைத்து திட்டி விட்டார். சிட்டி போலீஸ் கமிஷனர் எங்களை அழைத்து இன்று காலை 10 மணியிலிருந்து முதல் 12 மணி வரை ட்ராபிக் கேஸ் போடச் சொன்னார்.  போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மீது கேஸ் போட்டு கோர்ட்ல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் என்று சொல்லிட்டார் என பதில் அளித்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.

ஐயா! நாங்க சிட்டி முழுவதும் ரெண்டு டைப்ல போக்குவரத்து விதி மீறல்ல ஈடுபட்டவர்கள் மேல மட்டும் கேஸ் போட்டு இருக்கோம். செல்போன் பேசிகிட்டு இரு சக்கர வாகனத்தை 360   ஓட்டுனவங்க பேர். 130 பேர் இரு சக்கர வாகனத்தில் பின்னாடி வர்ற வண்டிய பாக்குறதுக்கு வேண்டிய கண்ணாடியே இல்லாமல்  இருந்தவங்க என்றார் இன்ஸ்பெக்டர். 

பெஞ்ச் கிளர்க்  ஒவ்வொருவர் பெயராக   அழைத்து செல்போன் பேசிகிட்டு வண்டி ஓட்டுனியா? அல்லது கண்ணாடி இல்லாமல் வண்டி ஓட்டுனியா?  என  கேட்க அவர்களும் போலீசார் சொல்லி வைத்தது போல ஆமாங்கய்யா   என  கூறியதும்  போலீசார் அவர்களை வெளியில் அழைத்துச் சென்று வரிசையில் நிறுத்தி வைத்தனர். அப்போது ஒரு போலீசார் மற்றொருவரின் காதில்   “என்ன ஆளுக்கு நூறு ரூபாய்   அபராதம் விதிப்பார். நாளைக்கும் இவங்க இதையே திரும்பவும் செய்வாங்க” என   முணுமுணுத்தது எனது காதில் விழுந்தது.

“தலைய வளைச்சு செல்போனை பேசி   அடுத்தவங்க உயிரை எடுக்க நினைச்ச நபர்களின் செல்போன்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் இப்போதே ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். தப்பு செஞ்சவங்க 24 மணி நேரம் கழித்து அதாவது நாளைக்கு மாலை 5 மணிக்கு ஒப்புகை சீட்டை  கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம். இருசக்கர வாகனத்தில் பின்புறம் பார்க்க தேவைப்படும் கண்ணாடிகள் இரண்டும் இல்லாமல் இருசக்கர வாகனத்தை   ஒட்டியவர்கள் வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட வேண்டும். நாளை 5 மணிக்குள் கண்ணாடிகளை வாங்கி வந்து   வாகனத்தில் பொருத்தி விட வேண்டும். நாளை மாலை 5 மணிக்கு ஒப்புகை சீட்டை  கொடுத்து வாகனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்” என மேஜிஸ்ட்ரேட் சொன்னதும் அதிர்ச்சிக்கு உள்ளானது போக்குவரத்து விதி மீறலுக்கு  அபராதம்  செலுத்தி விட்டு சென்றுவிடலாம் என்று வந்தவர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நீதிமன்றம்தான்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles