Advertisement

என்று முடியும் போக்குவரத்து நெரிசல்கள்?

இன்றைக்கு உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அதிகரித்த மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வாகனங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

அதிகரிக்கும் நெரிசல்

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்பட பல்வேறு இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை நாம் பார்த்தும் இருக்கலாம், கேள்விப்பட்டும் இருக்கலாம்.  உதாரணமாக சொல்வதென்றால் ஓசூரில் இருந்து   40 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரில் உள்ள இந்திரா நகர் பகுதிக்கு செல்வதற்கு மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டியதாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் இத்தகைய போக்குவரத்து நெரிசல் நிலை தற்போது நடுத்தர மற்றும் சிறிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. 

போக்குவரத்து நெரிசல் என்பது நகரங்களில் மட்டுமல்லாது நெடுஞ்சாலைகளிலும் அதிகரித்துள்ளது.  வாகனங்கள் மிக அதிகமாக பயணிப்பதால் சாலைகளை குறுக்காக கடப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை  ஏற்படுவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். உதாரணமாக சொல்வதென்றால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு செல்லும் சாலையில் பழனிக்கு முன்பே எட்டாவது கிலோ மீட்டரில் உள்ள கணக்கன்பட்டி கிராமத்திலிருந்து பழனிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் காரில் பயணிப்பதற்கு மாலை நேரங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் செலவாகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை நாம் உணர முடிகிறது.  இதே போன்ற போக்குவரத்து நெரிசல் பிரச்சனை  தமிழகத்தின் சாதாரண நகரங்களில் கூட ஏற்பட தொடங்கிவிட்டது.

காரணங்கள்

வாகன போக்குவரத்து நெரிச்சலுக்கு அதிகமான கார் பயன்பாடுதான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவில் பத்து சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே கார் வைத்துள்ளனர். அதிலும் சுமார் நான்கு சதவீதத்தினர் மட்டுமே தங்களது அன்றாட தேவைக்கு கார்களை பயன் படுத்துகின்றனர். சுமார் 54 சதவீதத்தினர் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். 

1990 க்கு முன்பு, அதாவது பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு இந்தியாவில் சுமார் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களில் மட்டுமே கார்கள் இருந்தன. இருசக்கர வாகனம் வைத்துள்ள நடுத்தர வருவாய் பிரிவினர் கார்களை நோக்கி நகர்ந்து வருகிற கின்றனர். 1990 -களுக்கு பிறகு நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவின் எழுச்சி காரணமாக சொந்தமாக கார் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப கார் கம்பெனிகளும் அவர்களை குறி வைத்து மலிவு விலை கார்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தின. தங்களுக்கு தேவையே இல்லை என்றாலும் கார் உள்பட சில பொருட்களை பெருமைக்காக வாங்கும் ஒரு நுகர்வு கலாச்சாரம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. 

சிறு தொழில்கள் முதற்கொண்டு பெருந்தொழில்கள் வரை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த தொழில் களுக்கான மூலப்பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கனரக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 

போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் தொகை பெருக்கமும் முக்கிய    காரணியாகும். வாகன பெருக்கத்திற்கு ஏற்ப திட்டமிடப்படாத நகரங்களின் உள்கட்டமைப்பும், மேம்படுத்தப்படாத சாலைகளும்தான் காரணம் என்பதே சரியாகும். 

வேலை பார்ப்பதற்காக மக்கள் நகரங்களை நோக்கி படையெடுப்பதும் இத்தகைய நகரமயமாக்கல் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.   உதாரணமாக, திருப்பூர் மற்றும் கோவை நகரங்களுக்கு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் மக்கள் பயணப்படுவதைச் சொல்லலாம். 

பிரச்சனைகள்

வாழும் இடத்திலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு தினமும் பயணிக்க போக்குவரத்து நெரிசல் கடுமையான சிரமங்களை தருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மக்களுக்கு அதிக நேரம் செலவாவதோடு போக்குவரத்து நெரிசலால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவும்  அதிகரிக்கிறது. உழைப்புக்கு செலவிடப்பட வேண்டிய மனிதனின் நேரம் போக்குவரத்து நெரிசலால் பயண நேர அதிகரிப்பின் காரணமாக வீணடிக்கப்படுகிறது. இதன் காரணமாக     மனித உழைப்பும் எரிபொருளும் வீணாகி பொருளாதாரத்தை பாதிக்க கூடியதாக போக்குவரத்துக்கு   நெரிசல் அமைகிறது என்றால் மிகையல்ல.

எதிர்கால திட்டமிடல்

போக்குவரத்து நெரிசலை நெறிப்படுத்துவது தற்போது அரசின் முன்பு உள்ள முக்கிய சவாலாகும். சாலைகளை திட்டமிட்டு தேவைக்கு ஏற்றவாறு அதிகப்படுத்துவது, போக்குவரத்துக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்துவது, மனிதன் வாழும் இடங்களுக்கு அருகாமையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி நகரமயமாக்களை குறைப்பது,   பொது போக்குவரத்து பயன்பாட்டை  அதிகரிக்கச் செய்வது, வாகன பயன்பாட்டை முறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்த தவறினால் எதிர்கொள்ளும் அபாயங்கள்  எண்ணிலடங்கா பிரச்சனைகளை உருவாக்கும். விழித்துக் கொள்வோம்! தகுந்த வேலை செய்வோம்!!  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles