Advertisement

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடினால் போதுமானதா?

கடந்த 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதியை உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினமாக பிரகடனம் செய்தது.  இதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக  ஒவ்வொரு ஆண்டும் மே மூன்றாம் தேதி அன்று உலக பத்திரிகையாளர் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  இந்தியாவிலும் வழக்கம் போல இந்த ஆண்டும் மத்திய அரசின் செய்தி துறையும் மாநில அரசின் செய்தி துறையும் இந்த நிகழ்வை   கொண்டாடி முடித்துள்ளன. இந்த   கொண்டாட்ட நாளில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் முழு பத்திரிக்கை சுதந்திரம் உள்ளதாக பெருமிதம் அடைந்துள்ளார். சட்டமன்றம் – நாடாளுமன்றம், அரசாங்கம், மற்றும் நீதித்துறைக்கு அடுத்த நான்காவது தூணாக ஜனநாயக நாட்டில் ஊடகம் வழங்கினால்தான் ஜனநாயகம் செழித்து நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.  

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கு இந்தியாவின் பிரதமர் சுற்றுப்பயணம் செய்யும்போது தேர்வு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள்- ஊடகவியலாளர்கள் பிரதமரோடு பயணிப்பார்கள். பொது நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நாட்டின் பிரதமர்  பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். பொதுவாகவே ஊடகத்துடன் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் நல்ல தொடர்பில் இருப்பது வழக்கமாக நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பது அபூர்வமான ஒன்றாகிவிட்டது இதைப் போலவே மாநிலங்களிலும் மாநில முதலமைச்சர்கள் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வும் தொடர்ச்சியாக   நடைபெறுவதில்லை. வெளிப்படையான நிர்வாகம் (transparent administration) என்பது ஜனநாயகத்தின் அடிப்படை குணங்களில் ஒன்றாகும் பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்திப்பதன் மூலம் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த இயலும்.

ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டால் மட்டும் போதுமானது அல்ல.  ஒவ்வொரு மாதமும் பிரதம அமைச்சரும் மத்திய அரசின் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களையும் அழைத்து சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும்.  நடுநிலை அல்லது ஆளுங்கட்சி ஆதரவு அல்லது எதிர்க்கட்சி ஆதரவு செய்தியாளர் என்ற பாரபட்சத்தை பார்க்காமல் அனைவரின் கேள்விகளுக்கும் இந்த சந்திப்பில் பதில்களை வழங்க வேண்டும். 

இதைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சரும் அமைச்சர்களும் தனித்தனியாக ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.   பிரதம அமைச்சரும் மத்திய அமைச்சர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்த ஓரிரு நாட்களில் எதிர் கட்சித் தலைவர்களும் ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.  மாநிலங்களிலும் எதிர்கட்சித்   தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை வெளிப்படுவதுடன் லஞ்சம், ஊழலுக்கு எதிரான அம்சங்கள் வெளிப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு மக்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் பாலமாகவும் அமையும் எனலாம்.  இந்த சந்திப்புகள் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக் கூடியதாக அமையும். 

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறை தலைவர்களும் அரசின் சார்பிலான இதர அமைப்புகளின் தலைவர்களும் மனித உரிமைகள், குழந்தைகள் உரிமைகள் போன்றவற்றிற்கு  அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் (commission) தலைவர் அல்லது செய்தி தொடர்பாளர் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles