Advertisement

தமிழர்களின் திருமண கலாச்சார முறை தடம் மாறுகிறதா?

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும் தமிழர்களின் பண்பாடும் உலகப் புகழ்பெற்றதாகும்.  தமிழர் பண்பாட்டில் திருமண மரபுகள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் திருமண கலாச்சாரம் மாற்றத்தை நோக்கி நகர்வதை அறிய முடிகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும்பாலான தமிழர் திருமணங்கள் அவர்களது வீடுகளில் அல்லது கோயில்களில் நடைபெற்றது. இத்தகைய தருணங்களில் உறவினர்களும் நண்பர்களும் மூன்று நாட்கள் திருமண வீடுகளிலும் அருகாமையில் உள்ள உறவினர் வீடுகளிலும் தங்கி திருமணத்தை முன் நின்று வெகு சிறப்பாக நடத்தியுள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண நிகழ்வுகளில் மணமகனின் – மணமகளின் அனைத்து வகை உறவினர்களும் திருமண வீடுகளில் – திருமண மண்டபங்களில் பந்தல் அமைப்பது, உணவு தயாரிப்பது, உணவை பரிமாறுவது உட்பட அனைத்து வேலைகளையும் முன்னின்று   செய்து திருமணத்துக்கு வரக்கூடிய ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்று உணவு  பரிமாறி உபசரித்தனர். திருமண நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் மகிழ்ச்சியான விளையாட்டுகள் மற்றும் பெரியவர்களின் கலந்துரையாடல்கள் உண்மையான மகிழ்ச்சியை வழங்கின.

கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலான திருமண  நிகழ்வுகளுக்கான பணிகள்  அனைத்தும் ஒப்பந்தம் (காண்ட்ராக்ட்) மூலமாக திருமணத்திற்கு தொடர்பு இல்லாத நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .  உணவு தயாரிப்பது, திருமண மேடை தயாரிப்பது, சிகை அலங்காரம், ஒலிபெருக்கி. வீடியோ போன்றவற்றுக்கு ஒப்பந்தங்கள் மூலம் பணிகளை வழங்கினால் கூட பரவாயில்லை என்று பார்க்கும்போது சமீப காலமாக திருமண மண்டபத்தில் வரவேற்புக்கு நிற்பதற்கு கூட நன்கு அலங்காரம் செய்து அழகிய உடைகளை அணிந்த பெண்களை (welcome girls) நிறுத்தி வைக்கும் கலாச்சாரம் தொடங்கி இருக்கிறது. மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் சகோதர – சகோதரிகள், மாமன்- மைத்துனர்கள், உடன் பங்காளிகள் வரவேற்பில் நின்று திருமணத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் வரவேற்ற காலம் சற்றே மாறத் தொடங்கி இருக்கிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் அதிகம் சந்தித்துக் கொள்வதும் பேசிக் கொள்வதும் திருமணத்துக்கு முன்பே வெளியில் செல்வதும் கிடையாது. இத்தகைய தன்மை  மாறி இருந்தாலும் காலத்தின் சூழல் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சி என எடுத்துக் கொள்ளலாம். தற்போது அதற்கும் மேல் ஒரு படி போய் திருமணத்துக்கு முன்பே திருமண நிகழ்வில் வீடியோவில் காட்ட  திருமணம் நிச்சயக்கப்பட்ட ஆணும் பெண்ணும்  ஆடுவது போலவும் பாடுவது போலவும் இயற்கை எழில் கொஞ்சம் இடங்களில் கொஞ்சுவது போலவும் வீடியோ எடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

திருமணத்தை மூன்று நாள் விமர்சையாக கொண்டாடி வந்த கொங்கு நாட்டுப் பகுதிகளில் திருமணத்தை உற்றார் உறவினருடன் குலதெய்வம் அல்லது பிடித்தமான தெய்வம் உள்ள கோவிலில் வைத்துக் கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியை திருமண மண்டபங்களில் வைத்து நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து ஒரு நேர பிரமாண்ட சாப்பாடுடன் நடத்த தொடங்கி விட்டனர். இதனை கூட நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவே உள்ளது. 

காலத்தின் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் திருமண நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஏக்கத்தக்கவாக இருப்பினும் திருமணத்துக்கு முன்னதாக ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுப்பது சரிதானா? என்ற கேள்வி எழுகிறது. திருமணத்துக்கு முதல் நாள் திருமண வரவேற்பு என்பது சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. திருமண நிகழ்வுகளில் மது கலாச்சாரம் (party culture) வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூற முடியாது. மிக வேகமாக வளர்ந்து விட்டது என்று கூற முடியும். இதனை முற்றிலும் ஒழிக்காவிட்டால் உறவும் நட்பும் ஒழிந்து விடும்.

மணமகளை அழகுப்பொருள் போல ஆட விடுவதும் அழகு பார்ப்பதும் நம் கலாச்சாரம் அல்ல. திருமண நிகழ்வுகளில் மணமகளும் அவரது நண்பர்களும் ஆடும் பாடும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அதிகரித்து இருக்கிறது. திருமணத்துக்கு வரும் உறவினர்களிடம் நண்பர்களிடம் பேசி மகிழ வேண்டிய தருணத்தில் மணமகளை ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது உறவின் வளர்ச்சிக்கு தடையாகவே அமையும் என்றால் மறுக்க இயலாது.

மாற்றங்களை ஏற்பதில் தவறில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்பதில் தவறில்லை. அவற்றை உட்கொண்டு தமிழர்களின் மரபுகளை மாற்றுவது சரியானதா? என்பதை கேள்வியாகும். திருமண நிகழ்வு என்பது உறவினர்களையும் நண்பர்களையும் இணைக்கும் பாலம் என்பதை மறந்து விட்டு ஒரு சடங்காக அல்லது தங்களது பண பலத்தை காட்டும் படமாக (show) மாறிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் பண்பாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. தமிழர் மரபையும் தமிழர் பண்பாட்டையும் பராமரித்து தமிழர் என்ற அடையாளத்தை இழக்காமல் இருப்போம்.

கே செல்வராஜ்
கே செல்வராஜ்
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள பிரபலமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ள வல்லக்குண்டா புரத்தில் வசிக்கும் விவசாயி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles