அரசியல் அறிவியல் அல்லது அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளில் உள்ள பல்வேறு கோட்பாடுகளில் மிக முக்கியமானது இறையாண்மை. அரசியல் கோட்பாடுகளின் ஒரு மையக் கருத்தாக இறையாண்மை விளங்கி வருகின்றது. எவராலும் எதிர்க்கப்பட முடியாத, முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் ‘இறையாண்மை’ என அழைக்கப்படுகிறது.
இறையாண்மை என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்திய ஜீன் போடின் என்பவர் ஆவார். இறையாண்மை குறித்த அவரது கருத்து என்னவெனில், “இறையாண்மை என்பது ஒட்டுமொத்த, மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதீத கட்டளைத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது“.
இறையாண்மை என்கின்ற ஒரு கருத்தாக்கமானது பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இறையாண்மையினுடைய பொருளானது, ஒரு அரசுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்ச அதிகாரம் மற்றும் அரசுக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வமான ஒரு அதிகாரம் என்றும் கூறலாம். எளிமையான நடையில் கூற வேண்டும் என்றால், ஒரு நாட்டில் உள்ள மற்ற அமைப்புகளை காட்டிலும் அரசு அல்லது அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வமான ஒரு உயர்ந்த பட்ச அதிகாரம் இறையாண்மை.
சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகாரங்களையும் உருவாக்குவதற்கும், வேண்டியபோது நீக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் உள்ள தத்துவம் இறையாண்மை எனப்படும். அரசினை உருவாக்குகின்ற நான்கு அடிப்படைக் கூறுகளுள் இன்றியமையாத ஒரு கூறு இறையாண்மை ஆகும். மற்றவை மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றாகும். இறையாண்மை மக்களுக்குரியதாக இருப்பது மக்களாட்சியின் அடிப்படைப் பண்பாக கொள்ளப்படுகிறது. இறையாண்மை என்பது அரசமைப்பைச் சார்ந்துள்ளது. மக்களே அத்தகைய அரசமைப்பின் இறுதி ஆதாரமாக விளங்குகின்றனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மை பற்றி விவரித்து கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு அல்லது அரசாங்கம் முழு இறையாண்மை பெற்ற ஒரு அமைப்பு என்று கூறலாம். அதாவது இந்திய அரசாங்கம் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ கட்டுப்பட்ட அமைப்பு கிடையாது. இந்திய எல்லையில் முழு அதிகாரத்தை செலுத்தக்கூடிய ஒரு அமைப்பை நம் அரசாங்கம் பெற்றுள்ளது. இதை இறையாண்மை அதிகாரம் என்று நாம் கூறலாம். எனவே இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்த அமைப்பிற்கும் இவ்வதிகாரம் வழங்கப்படவில்லை.
இறையாண்மையின் சிறப்புத்தன்மைகள்
- இறையாண்மை முழுமையானது.
- அனைவருக்கும் பொருந்தும் தன்மையுடையது.
- அரசிடமிருந்து பிரிக்கப்பட முடியாத தன்மையுடையது.
- நிலையானது.
- துண்டாக்க முடியாதது.
இந்திய நிலப்பரப்பிற்கு உட்பட்ட நிலங்களை நிர்வகிப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது, இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த அமைப்புகளை பாதுகாப்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு தலையாய கடமையாகும்.
இறையாண்மை ஒரு நிரந்தரமான சட்டபூர்வமான அதிகாரம் என்றும் கூறலாம். அதாவது இந்திய அரசு தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை இவ்வதிகாரமானது இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இறையாண்மை அதிகாரம் உள்ளதால் தான், இந்திய பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுவதும் அவ்வாறு இயற்றிய சட்டங்களை செயல்படுத்துவதும் மற்றும் நல்ல ஆளுகையை இந்தியாவில் வசிக்கக் கூடிய குடிமக்களுக்கு வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு உள்ளது.
ஒருவேளை இறையாண்மை அதிகாரமானது இந்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை என்றால் மேற்கூறிய அனைத்து பணிகளையும் நம் அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியாது. எனவே இந்திய அரசானது எந்த ஒரு வெளிநாட்டின் உடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதற்கு இறையாண்மை அதிகாரம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
இருபத்தோராம் நூற்றாண்டில் இறையாண்மை மற்றும் அதன் உண்மையான அதிகாரங்கள் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள், மனித உரிமைகள் பண்டைய நாடுகளின் அத்துமீறல்கள், உள்நாட்டில் ஏற்படக்கூடிய ராணுவ சம்பந்தப்பட்ட கிளர்ச்சிகள், பிரிவினைவாத இயக்கங்கள் போன்றவைகளால் இந்தியாவின் இறையாண்மையானது சவால்களை சந்தித்து வருகின்றது.
மேற்கூறிய காரணிகளால் இந்தியாவில் உள்ள அரசாங்கம் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட முடியாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே செயல்பட்டு வருகின்றது என்று கூறினால் மிகையாகாது. எனவே இறையாண்மை அதிகாரம் முழுமையாக இந்திய அரசாங்கத்தின் வசம் இருக்கும் வரை ஒரு நல்ல ஆட்சி மற்றும் குடிமக்களுக்கு தேவையான பொதுச் சேவைகளை தங்கு தடையின்றி வழங்கக்கூடிய நிலையில் நம் அரசாங்கம் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் செயல்படும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.