Advertisement

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வது எப்படி?

இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையமானது தேசிய மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி கடந்த 12 அக்டோபர் 1993 அன்று அமைக்கப்பட்டது.  மனித உரிமைகளை பாதுகாப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், மனித உரிமை மீறல்கள் மீதான புகார்களை விசாரித்து தகுந்த   பரிந்துரைகளை வழங்குவதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முக்கிய பணிகள் ஆகும்.

அமைப்பு 

உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியை தலைவராக கொண்டு இயங்கும்  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஐந்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு உறுப்பினராகவும் உயர்நீதிமன்றம் ஒன்றில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு உறுப்பினராகவும் மனித உரிமைகளில் அனுபவமும் அறிவும் கொண்ட நிபுணர்கள் மூவர் உறுப்பினர்களாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இருக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது.

மனித உரிமைகள்

வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனிமனித கௌரவம் ஆகியவை தொடர்புடைய உரிமைகளை மனித உரிமைகள் என்று மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மனித உரிமைகள் மீறப்படும் போதும், அரசின் நலத்திட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்டவைகளில் உரிமைகள் மறுக்கப்படும் போதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்   புகார் தாக்கல் செய்யலாம். புகார்களின் மீது விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு தண்டனை வழங்கவும் தகுந்த பரிந்துரைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்குகிறது.

மனித உரிமைகள் மீறல்கள்

அரசு அலுவலர் அல்லது அரசு உதவி பெறும் அமைப்புகளில் அலுவலர் சட்டபூர்வமாக செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறுதல் (omission of duty) அல்லது செய்யக்கூடாத செயலை செய்தல் (commission of unlawful work) போன்றவற்றின் மூலம் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எத்தகைய செயல்கள் மனித உரிமை மீறல்கள்? என்பதற்கு சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உதாரணங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

  • சட்ட விரோதமாக காவலில் வைத்தல், உண்மைக்கு புறம்பாக வழக்கில் இணைத்தல், காவல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வன்முறை நிகழ்த்துதல், சட்டவிரோதமாக கைது செய்தல் மற்றும் காவல் துறையின் சட்டவிரோதமான அத்துமீறல்கள்.
  • என்கவுண்டர் மரணங்கள், காவல் துறையின் அல்லது சிறையின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு நிகழும் மரணங்கள், சிறைவாசிகள் மீதான துன்புறுத்தல்கள்
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நலத்திட்டங்களை மறுத்தல்
  • வரதட்சணை கொடுமை மரணங்கள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணங்கள்
  • புகார்களை பதிவு செய்ய மறுக்கும் அரசு அலுவலர்களின் செயல்கள், ஆட்களை சட்டவிரோத லாபத்துக்காக கடத்துதல், பசியால் இறப்பு ஏற்படுதல் மற்றும் லஞ்சம்  தொடர்புடையவை.
  • சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுச்சூழல், மருத்துவ வசதிகள், தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதிகள், கல்வி உரிமை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ்   பொருட்கள் வழங்குதல், உணவுக்கான உரிமை, முதியோர் ஓய்வூதியம் போன்ற சமூக நல திட்டங்களை மறுத்தல்
  • சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்,   ஜாதி மற்றும் மத அடிப்படையிலான வன்முறைகள், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றை தடுப்பதற்கான   புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறுதல்.

யார் புகார் செய்யலாம்?

மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் மற்றவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யலாம். தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனித உரிமை மீறல் குறித்து தாமாக முன்வந்து புகாரை விசாரிக்கும் அதிகாரமும் உள்ளது. சமர்ப்பிக்கப்படும் புகார்கள் ஆங்கிலத்தில் கீழ்க்கண்டவாறு குறைந்தபட்ச விவரங்களை கொண்டிருக்க வேண்டும்.

01.  புகார் செய்பவரின் பெயர்: 

02.  பாலினம்:  

03.  கடிதத்திற்கான முழுமையான முகவரி:

04.  பின் குறியீடு, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்: 

05. பாதிக்கப்பட்டவர்கள் பெயர், முகவரி:

06.  பாதிக்கப்பட்டவர் எங்கே இருக்கிறார்?

07.  பாதிக்கப்பட்டவரின் பாலினம்: 

08.  இருப்பிடத்தின் பின் குறியீடு: 

09.  பாதிக்கப்பட்டவரின் இயலாமை : 

10.  பாதிக்கப்பட்டவரின் வயது:

11.  பாதிக்கப்பட்டவரின் மதம்: 

12.  பாதிக்கப்பட்டவரின் சாதி: 

13.  சம்பவம் நடந்த இடம்:  

14.  சம்பவம் நடந்த மாவட்டம்: 

15.  சம்பவம் நடந்த   மாநிலம்:  

16.  சம்பவ தேதி: 

17.  சம்பவ வகை:

18.  சம்பவத்தின் துணை வகை,:

19.  சம்பவத்தின் உண்மைகள்/குற்றச்சாட்டுகள்:

20. ஏதேனும் நீதிமன்றம்/மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

21. மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படும் அரசு ஊழியர்/அதிகாரியின் பெயர், பதவி மற்றும் முகவரி:

22.  மனித உரிமை மீறலுக்கு எதிராக கோரப்படும் நிவாரணம்:

 முகவரி 

புகார்களை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: National Human Rights Commission, Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, INA, New Delhi-110023. புகார்களை nhrc.nic.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

தகுதியற்ற புகார்கள்

சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு பின்பு செய்யப்படும் புகார்களையும் நீதிமன்றத்தில் அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவற்றையும் தவறான நோக்கத்தை கொண்ட புகார்களையும் அரசு பணிகள், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் சம்பளம் தொடர்புடைய புகார்களையும் சொத்து, குடும்ப பிரச்சனைகள் தொடர்பான புகார்களையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பதில்லை.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles