Advertisement

சிறப்புமிகு சிறுவாபுரி முருகன் ஆலயம்

முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் 2024 ஆகஸ்ட் 23 & 24 ஆகிய இரண்டு நாட்களில் “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை” தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. இந்தத் தருணத்தில் சென்னை அருகே அமைந்துள்ள சிறப்புமிகு சிறுவாபுரி முருகனின் திருத்தலத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

சென்னை அருகே

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தாலுகாவில் உள்ள சிறுவாபுரி காரர்பேட்டை என்னும் இடத்தில் சிறுவாபுரி முருகன் ஆலயம் உள்ளது. சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் தூரம் பயணித்து நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  சிறுவாபுரிலிருந்து உள்ளே மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்தால் இந்த திருத்தலத்தை அடையலாம்.

பெயர் காரணம்

இதிகாச காலத்தில் அஸ்வமேத யாகம் நடத்த ராமர் தனது குதிரையை ஏவி விடுகிறார். அப்பொழுது அந்த குதிரை எல்லா இடங்களுக்கும் சென்று இறுதியாக வால்மீகி அவர்களின் ஆசிரமத்தில் சென்று நிற்கின்றது. வால்மீகி ஆசிரமத்தில் இருந்த லவனும் குஷனும்  அந்த குதிரையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். குதிரையை தேடி வந்த லட்சுமணனையும் கட்டி வைத்து விட்டனர். இதனை அறிந்த ராமர் மிகுந்த கோபத்தோடு இதனை செய்தது தன் பிள்ளைகள் என்று அறியாமல் அங்கு வந்தார். அப்பொழுது எதிரில் இருப்பது தந்தை என அறியாமல் லவனும் குஷனும்  தந்தையின் மீது அம்பு எய்தனர். இப்படி சிறு பிள்ளைகள் போர் தொடுத்ததால் இவ்விடத்தின் பெயர் சிறுவர் போர் புரி என்று வந்தது. இப்பெயரே நாளடைவில் மருவி சிறுவாபுரி என மாறி தற்பொழுது சின்னம்பேடு என அழைக்கப்படுகிறது.

சரித்திரம்

சூரபத்மனை வதம் செய்த பின்னர் புறப்பட்டுச் சென்ற முருகர் சிறுவாபுரியில் இளைப்பாறியதாகவும். இந்திரன் போன்ற தேவர்களுக்கு அமுதளித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.   பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவாபுரியில் வாழ்ந்து வந்த முருகம்மை என்ற பெண் ஒருவர் முருகனின் மீது அதீத அன்பும் பக்தியும் வைத்திருந்தாள்.   முருகன் துதியை பாடியும் நித்தம் முருகனின் கீர்த்தியை எண்ணியும் வாழ்ந்து வந்தால். அவளுடைய பக்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவளுடைய இந்த எண்ணத்தையும் செயலையும் விரும்பாத கணவன் அவளை துன்புறுத்தி வந்தான். தன் கணவனின் வெறுப்பையும் கோபத்தையும் பொருட்படுத்தாது தன்னுடைய பக்தியில் நிலைத்திருந்தார் முருகம்மை. இதனால் கோபமுற்ற முருகம்மையின் கணவன் அவளுடைய கையை வெட்டி விட்டான். வலியில் துடித்த முருகம்மை சிறுவாபுரி முருகனை நாடி “என்னால் வலி தாங்க முடியவில்லை முருகா- எனக்கு உதவு” என்று பிரார்த்தித்தார். தன் பக்தைக்கு வந்த நிலையை சரி செய்து அவளுடைய கையை இணைத்து காயப்பட்ட தழும்பு கூட தெரியாமல் அற்புதம் நடத்தினார் சிறுவாபுரியில் குடிகொண்டுள்ள முருகன் ஸ்ரீ பாலசுப்பிரமணியன் என சிறுவாபுரி முருக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிறப்புகள்

தேவர்களுக்கு முருகப்பெருமான் அமுதலித்த இடமாகவும் லவனும் குஷனும் ராமனுடைய அசுவத்தை (குதிரை) கட்டிய இடமாகவும் ராமனுடன் போர் புரிந்து லவனும் குஷனும் சிறுவாபுரியை வென்ற இடமாகவும் சிறுவாபுரி திகழ்கிறது. மரகத மயில் எனப்படும் பச்சை நிற மரகத கல்லால் செய்யப்பட்ட முருகனின் வாகனம் இங்கு உள்ளது. கலியுகம் போற்றும் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ பால சுப்பிரமணிய முருகன் அருள் பாலிக்கும் இந்த திருப்புகழ் பாடப் பெற்ற தலமாகும். 

திருப்புகழ்

சிறுவாபுரி முருகனின் திருத்தலத்தில் ஒரு திருப்புகழ் பாடினால் சொந்த வீடு, தொழில், சிறந்த குடும்பம், செல்வம், மோட்சம் ஆகிய ஐந்து பெரும் பலன்களை அடையலாம் என முருக பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.   முருகனின் திருவடியை சரணம் என எண்னும் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது சிறுவாபுரி சென்று அவர் புகழ் பாடி முருகனின் திருப்பாதங்கள் பணிந்து இன்புற்று நலமாக வாழலாம்.

ஜிவிடி
ஜிவிடி
நிர்வாக அலுவலர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles