இந்து மதத்தில் இடி, மழை, போர் ஆகியவற்றின் தெய்வமாக கருதப்படும் இந்திரனின் உருவமாக மயில் சித்தரிக்கப்படுகிறது. அறிவுக்கடவுளாக போற்றப்படும் சரஸ்வதியையும் மயிலையும் பிரித்துப் பார்க்க இயலாது. தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனின் வாகனமாக மயில் இருப்பதும் கிருஷ்ண பகவானின் தலையில் மயிலின் இறகு இருப்பதும் மயிலுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பை உணர வைக்கின்றன.
ஆதிகாலத்தில் மயிலை உயிர்த்தெழுதலின் அடையாளமாக கிறிஸ்தவர்கள் கருதினார்கள். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மயிலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமியத்தில் மயில் சொர்க்கத்தின் பறவையாகவும் மக்களின் வாயிற்காப்பாளராகவும் வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு மதங்களும் மயில் தொடர்பு கொண்டுள்ளது.
1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மயில் தேசியப் பறவை என்று இந்திய அரசு அறிவித்தது. காட்டு உயிர் பாதுகாப்பு சட்டம், 1972 -ன்படி மயிலை வேட்டையாடுவதும் கொல்வதும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழி வகுக்கக் கூடிய குற்றமாகும்.
செடிகளில் விளையும் பழங்களையும் பயிர்களில் விளையும் விதைகளையும் பயிர்களை உற்பத்தி செய்ய விதைக்கப்படும் விதைகளையும் தவளை, புழுக்கள், பூச்சிகள், விஷ பாம்புகளையும் மயில்கள் உண்ணுகின்றன. நரிகள், சிறுத்தைகள், பெரிய காட்டு பூனைகள் போன்றவை மயிலை கொன்று உண்கின்றன.
மயிலை உண்ணும் பெரிய காட்டுப் பூனைகள் போன்ற மிருகங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மயில் மிருகங்களால் வேட்டையாடப்படுவது குறைந்த அளவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மயிலை வேட்டையாடுவது மிக அரிதான ஒன்றாகும். இதன் காரணமாக இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் மயில்களின் இனப்பெருக்க சதவீதம் இன்னும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவை உண்ணும் தவளைகள், பூச்சிகள், புழுக்கள் பாம்புகளின் எண்ணிக்கையின் இருப்பு குறைந்து உணவுச் சங்கிலியை பெரும் அளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக அளவில் மயில்களின் எண்ணிக்கை பெருகி உள்ளதால் விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதாக தெரிகிறது.
விவசாய நிலங்களில் பயிர்களை மயில்கள் நாசம் செய்வதாலும் மண்ணில் விதைக்கப்படும் விதைகளை கால்களால் பறித்து உண்டு விடுவதாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. விவசாயத்துக்கு மயில்களால் பாதிப்பு ஏற்படும் போது உணவு சுழற்சி முறையில் மனிதர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்பது பொதுவான கருத்தாகும். கடந்த 4 நவம்பர் 2023 ஆம் தேதியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் மயிலின் இனப்பெருக்கமும் பிரச்சனைகளும் குறித்து வெளியிடப்பட்ட கட்டுரை கவனிக்கத்தக்கதாகும்.
தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும் இயற்கையின் கொடையாக உள்ள உணவு சங்கிலி முறைக்கும் மயில்களின் இனப்பெருக்கம் ஆபத்தாக அமையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது உடனடி தேவையாகும்.
ஆர்வமான படைப்பு
சிறந்த படைப்பு👏