Advertisement

தங்கள் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்

இலக்கு

தங்களது இலக்கு (goal) என்ன? என்பதை நிர்ணயம் செய்வது வெற்றிக்கு முதல் படியாகும். வாழ்க்கையில் தாம் எதை அடைய வேண்டும்? என்ற நோக்கத்தை முடிவு செய்யாமல் வெற்றியாளராக ஒருபோதும் மாறிவிட முடியாது. தனிநபர்கள் இலக்குகளை   நிர்ணயம் செய்யும்போது அவற்றை குறுகிய கால இலக்குகள் (short term goal), நடுத்தர கால இலக்குகள் (mid-term goal) மற்றும் நீண்ட கால இலக்குகள் (long term goal) என்று வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளி பருவ மாணவர்கள் குறைந்தபட்சம் தங்களது குறுகிய கால இலக்கை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, வகுப்பில் அல்லது பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராக   திகழ்வது, பள்ளி விளையாட்டு அல்லது கலை – இலக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது மற்றும் உடல்நலத்தை நல்ல முறையில் பேணுவது. கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தங்களது  வாழ்க்கைக்கான நீண்ட கால இலக்கு, நடுத்தர கால இலக்கு மற்றும்   குறுகிய கால இலக்குகளை இறுதி செய்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும். 

வாழ்க்கையை வாழ்வதே சவாலாக இருந்து விட்டது என்பதால் நடுத்தர வயதை கடந்து விட்ட சூழலில் இனி இலக்கை நிர்ணயித்து பயணிக்க இயலாது என்று பலரும் கருதுகின்றனர். பெரும்பாலான மனிதர்களுக்கு இத்தகைய சூழலே   நிலவுகிறது என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். இதனால்   இதுவரை இலக்கை முடிவு செய்யாமல் பயணித்திருந்தாலும் எந்த வயதிலும் இலக்கை முடிவு செய்து அதனை நோக்கிய பயணத்தை தொடங்கலாம். ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு அடியில்தான் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தாம் எந்த இலக்கை நோக்கி   பயணிக்க வேண்டும்? என நிர்ணயம் செய்யும் போது ஓரிரு பிரதான இலக்குகளையும் (primary goal) ஓரிரு மாற்று இலக்குகளையும் (alternative goals) நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இலக்கை நோக்கிய பயணத்தின் போது ஓரிரு துணை இலக்குகளையும் (ancillary goals) ஏற்படுத்திக் கொள்வது சிறப்பானதாகும். 

நிர்ணயம்

இலக்கை நிர்ணயம் செய்யும்போது கவனிக்கத்தக்கவை: இலக்கானது பொதுவானதாக இல்லாமல் குறிப்பிட்ட (specific) ஒன்றாக இருக்க வேண்டும். அந்த இலக்கானது அளவிடக்கூடிய/அர்த்தமுள்ள (Measurable/Meaningful) வகையிலும் அடையக்கூடிய வகையிலும் (attainable) இருப்பது அவசியமானதாகும் நிர்ணயிக்கும் இலக்கானது தங்களுக்கு பொருத்தமானதாகவும் (relevant) அதனை காலக்கெடு (time-bound) அமைத்து செயல்படுத்த தக்கதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் (SMART – specific, Measurable/meaningful, attainable, relevant and time-bound). இலக்கை நிர்ணயம் செய்து விட்டால் அதனை உள் மனதில் அழிக்க இயலாத அளவுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.  முயற்சித்தால் எத்தகைய இலக்கையும் அடைய முடியும் என்ற உறுதியை மனதில் கொள்ள வேண்டும். 

(1) வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள்? போன்ற வாழ்க்கைக்கான (life time carrier) இலக்குகளைத் தீர்மானியுங்கள்.

(2)  இலக்கை அடைய எத்தகைய கல்வியைப் (education) பெற வேண்டும்? எத்தகைய திறன்களை (skills) பெற வேண்டும்? என்பதை உறுதி செய்யுங்கள். கல்வி என்பது பள்ளிகளிலும் கல்லூரிகளில் மட்டும் படிப்பதல்ல. நமது இலக்குக்கேற்ப அறிவையும் திறனையும் அடைவது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

(3) எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? தங்களது இலக்குகளை அடைய எத்தகைய வருமானத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்பதை தீர்மானியுங்கள். 

வகைகள்

வாழ்க்கையின் இலக்குகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். ஒருவருக்கு மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் என்பது ஆசையாக இருக்கலாம். மற்றொருவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக தினமும் வாழ வேண்டும் என்பது எண்ணமாக இருக்கலாம். இன்னொருவருக்கு  பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம். மற்றொருவருக்கு ஆன்மீக பணியில் ஈடுபட வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம்.  

இதுவரை எந்த ஒரு இலக்கையும் நோக்கி பயணிக்காமல்   மனம் போன போக்கில் பயணித்துக் கொண்டிருந்தால் அதனை மாற்றி இன்றே இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்! வெற்றிக்கான முதல்  படியை இன்றே நிர்மாணியுங்கள்!

(இலக்கை நோக்கிய பயணத்துக்கான திட்டமிடல் மற்றும் அமலாக்கம் குறித்த கட்டுரைகள் விரைவில்  வெளியாக உள்ளது)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles