Advertisement

தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் மறு ஜென்மம் பெறுமா?

கடந்த 2005 ஆம் ஆண்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு தேசிய அளவில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் வரையறுக்கப்பட்டது.

சட்டம் இயற்றப்பட்டாலும் பல மாநிலங்கள் மாநில  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவவில்லை. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்கு பின்னர் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையங்கள் மாநிலங்களில் நிறுவப்பட்டன. இவ்வாறே தமிழகத்திலும் சட்டம் இயற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, குழந்தைகள் தொடர்பான எந்த ஒரு அமைப்பையும் ஆய்வு செய்வது மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை விசாரிப்பது உள்ளிட்ட வானளாவிய அதிகாரங்களை பெற்ற குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2022 மார்ச் முதல் தமிழகத்தில் செயல் இழந்து விட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற போதிலும் சுமார் ஓர் ஆண்டுகள் கழித்து 2021 ஜனவரி மாதத்தில்தான் ஆணையத்துக்கு தலைவர் மற்றும்  உறுப்பினர்களை 3 ஆண்டு காலத்துக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில்   தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பதவி நீக்கத்துக்கு தடை விதித்தது. 

தனி நீதிபதியின் தடைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ததில் இரு   நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தடையை ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 3 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு தாக்கல் செய்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரின் தரப்பிலும் அரசின் தரப்பிலும் வாதங்கள் கேட்கப்பட்டு இறுதி உத்தரவுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. 

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தமிழக அரசு ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணையத்தின்  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் 2024 ஜனவரி மாதத்தில் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள்   ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. 

மூன்று ஆண்டுகள் பதவியில் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 13 மாதங்களே பணியாற்றி உள்ளார்கள்.  எஞ்சிய 23 மாதங்கள் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆணையத்தின் தலைவர்  மற்றும் உறுப்பினர்களாக அவர்களால் பணியாற்ற இயலவில்லை. அவர்களது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தில் முடிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.  இந்த வகையில் கடந்த 27 மாதங்களாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள்  ஆணையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தகைய போக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் மிகுந்த ஆபத்தானதாகும்.

குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தும் தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தகுந்த ஆணைகளை பெற்று வெற்றிடமாக உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்துக்கு மறு ஜென்மம் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles