அமைவிடம்
கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் மன்னவனூர். கடல் மட்டத்திலிருந்து 1880 மீட்டர் (6170 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ள 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1437 வீடுகள் கொண்ட இக்கிராமத்தில் 5927 மக்கள் வசிக்கிறார்கள். மன்னவனூர் ஊராட்சியில் மன்னவனூர், மஞ்சம்பட்டி, கீழானவயல், கவுஞ்சி, கும்பூர் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன. இந்த இடம் காய்கறி சாகுபடிக்கும் பெயர் பெற்றது. மன்னவனூர் பகுதியில் கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி, பிரெஞ்ச் மற்றும் பட்டர் பீன்ஸ் போன்ற பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
வழித்தடம்
கொடைக்கானலில் இருந்து இந்த ஊருக்கு சாலை மார்க்கமாக பயணிக்க சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் ஆகும்.மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கொடைக்கானலில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தான். கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படும். பேருந்தை விரும்பாதவர்களுக்கு வனத்துறை சார்பில் வாகன வசதியும் ஏற்படுத்தி தருகின்றனர். கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் செல்லும் வழி இயற்கை அழகு நிறைந்து காணப்படுவதோடு விதவிதமான பறவைகளின் சத்தத்துடன் இருக்கும். போகும் வழியில் பழனி மலை காட்சி முனையை (வியூ பாயிண்ட்டை) காணலாம். மன்னவனூருக்கு செல்லும் வழியிலும் மன்னவனூரிலும் சின்ன சின்ன தேநீர் கடைகளும் ஓரிரு உணவகங்கள் சில தங்குமிட வசதிகளும் மட்டுமே உள்ளன.
பூம்பாறை
இயற்கை எழில் கொஞ்சும் மன்னவனூர் மலைக் கிராமத்துக்கு செல்லும் வழியில் பூம்பாறை என்ற கிராமம் உள்ளது. எல்லாப் பக்கங்களிலும் வலிமை மிக்க சிகரங்களால் காக்கப்படும் பூம்பாறை என்ற வினோதமான கிராமம், நகர்ப்புற வாழ்க்கையின் ஆரவாரத்திலிருந்து வெகு தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் வளமான விவசாய நிலங்களால் மணம் வீசும் அமைதியான, பரபரப்பற்ற சூழலைக் கொண்ட ஒரு அழகிய குக்கிராமம் பூம்பாறை,. இந்த பூம்பாறை. அன்றாட வாழ்வின் ஏகபோகத்திலிருந்து தப்பித்து, நீங்கள் வனாந்தரத்தில் புத்துணர்ச்சியூட்டும் பயணத்தை மேற்கொள்வதற்கான சரியான இலக்கு. இந்த மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணத்தின் மூலம் வனப்பகுதியை ஆராய்வது, பறவைகளின் சத்தம் மற்றும் வன விலங்குகளின் குரல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பது மலையேறுபவர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும்.
மன்னவனூர் ஏரி
மன்னவனூர் ஏரியின் அழகிய படிக நீல வண்ணத்தில் தோற்றமளிக்கும் நீர் மற்றும் அதன் அமைதியான சுற்றுப்புறங்கள் குடும்பங்களோடு மற்றும் நண்பர்களுடன் விடுமுறைக்கு வருபவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா இடமாகும். இந்த அழகிய நன்னீர் ஏரி, உருளும் மலைகளின் மடியில் சிறப்பாக இயற்கையால் அமைக்கப்பட்டுள்ளது. மன்னவனூர் ஏரியில் படகு சவாரி வசதியும் இப்பகுதியில் குதிரை சவாரி வசதியும் உள்ளது.
புல்வெளி
மன்னவனூரில் சூழல் சுற்றுலாப் புல்வெளி 150 ஹெக்டேர் பரப்பளவில் மன்னவனூர் ஏரியைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் நீளத்தில் நடைபாதை இரு மரப்பால இணைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மன்னவனூர் கைக்காட்டி சூழல் சுற்றுலா குழுவினர் மூலம் இது பாரமரிக்கப்பட்டு வருகிறது. கண்ணை கவரும் இந்த புல்வெளிகளில் அமர்ந்து இயற்கையையும் அமைதியையும் ரசிக்கலாம்.
செம்மறியாடு உரோம ஆராய்ச்சி
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால், ராஜஸ்தான் மாநிலத்தின் டோங் மாவட்டத்தில் உள்ள மத்திய செம்மறியாடு உரோம ஆராய்ச்சி நிலையத்தின் (The Central Sheep and Wool Research Institute) தென்மண்டலக் கிளை மன்னவனூரில் கடந்த 1965 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உரோம ஆடுகள் மற்றும் முயல்கள் பண்ணையாக தோன்றும் இந்த ஆராய்ச்சி மையம் 1346.88 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு வளர்க்கப்படும் ஆடுகளில் இருந்து ரோமங்கள் வெட்டி சேகரிக்கப்பட்டு அவை கம்பளி ஆடை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மையத்தை பார்வையிட அனுமதி பெற வேண்டும். கல்வி நிலையங்களில் இருந்து இந்த மையத்தை பார்வையிட வருபவர்களுக்கு உள்ளே தங்க அனுமதி வழங்கப்படுகிறது. முயல் பண்ணையில் பல்வேறு அரிய வகை முயல்களின் இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையத்தில் சுத்தமான நீலகிரி தைலம், முயல் ரத்த கூந்தல் தைலம், மூட்டு வலி தைலம் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
தமிழகத்தின் சுவிட்சர்லாந்து
மன்னவனூர் வட்டாரத்தில் யானை, குரைக்கும் மான், காட்டெருமை, சாம்பார், நீலகிரி லங்கூர், நீலகிரி தஹ்ர் மற்றும் காட்டுப் பூனைகள், 165 வகையான பட்டாம்பூச்சிகள், 15 வகையான குஞ்சுகள், மரப் புறா மற்றும் நீலகிரி பைபிட் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதிகளில் மலையேற்றம் செய்ய சுற்றுலாப் பயணிகள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் மன்னவனூர் பகுதிகளில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. மன்னவனூர் பகுதியில் ஒரு அழகான நீர்த்தேக்கம் உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பெரிய சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு வனத்துறையின் சார்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையும் அமைதியும் கலந்து நேசிக்கும் சுற்றுலா வாசிகளுக்கு சொர்க்கமாக திகழும் மன்னவனூர் தமிழகத்தின் சுவிட்சர்லாந்து என சொல்லலாம்.
மன்னவனுரை மேம்படுத்த
கொடைக்கானலில் இருந்துதான் மன்னவனூருக்கு பயணம் செய்ய வேண்டும். மாற்றுப்பாதை எதுவும் கிடையாது. மன்னவனூரில் இருந்து கீழான வயல் வரை 8 கிலோ மீட்டர் தார் ரோடு உள்ளது. கீழான வயலில் இருந்து சின்னாறு சாலை வரை 20 கிலோ மீட்டர் மண் ரோடு உள்ளது. கீழான வயலில் இருந்து மஞ்சம் பட்டி ரோடு ஒத்தையடி பாதையாக உள்ளது. கீழானவயல்- மஞ்சம்பட்டி இடையே ரோடு வசதி இல்லாமல் விளைபொருட்களை விவசாயிகள் நடை பயணமாக சென்று வருகின்றனர். மன்னவனூரில் இருந்து மஞ்சம்பட்டி வழியாக 80 கிலோ மீட்டர் நீளத்தில் உடுமலைப்பேட்டைக்கு சாலை அமைக்க வழி வகைகள் உள்ளன. கொண்டை ஊசி வளைவு இல்லாமல் தரைப்பகுதி ரோடாகவும் இந்த ரோடு அமைகிறது. இவ்வாறு மன்னவனூருக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டால் சுற்றுலா மேம்படுவதோடு மேல்மலை மக்களின் வாழ்வாதாரம் உயரமும் விவசாயம் செழிக்கவும் உதவிகரமாக அமையும்.
1994-ல் மேற்கு தொடர்ச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கி பணிகள் துவங்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் நிதி வீணடிக்கப்பட்டு திட்டமும் கிடப்பில் போடப்பட்டதாகவும் இந்த ரோட்டை அமைக்குமாறு 30 ஆண்டு காலமாக மக்கள் கோரி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த ரோடு அமையும் பட்சத்தில் மூங்கில்பள்ளம், மஞ்சம்பட்டி, தழுஞ்சி, சின்னாறு, உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு ரோடு வசதி கிடைக்கும்.
மன்னவனூரை சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் கொடைக்கானலுக்கு உடுமலைப்பேட்டையில் இருந்து செல்லும் வகையில் மாற்று சாலையாகவும் மேல் மலை கிராம மக்களுக்கு இணைப்பு சாலையாகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து மன்னவனூருக்கு சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.