மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து என்ற பெயர் கொண்ட ஆற்றின் அருகே பத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவிலுக்குள் பல குகைகள் உள்ளன. முருகன் கோவில் அமைக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் இந்த குகைகளில் மலேசிய பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள திருமலை நாயக்கன் பட்டிணத்தை சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி தொழில் செய்து வந்துள்ளார். இவரது மகன் தம்புசாமி பிள்ளை கடந்த 1891 ஆம் ஆண்டில் பத்துமலை குகையில் அருள்மிகு சுப்பிரமணியர் சிலையை நிறுவினார். இதனைத் தொடர்ந்து 1892 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. முருகன் கோவிலுக்கு செல்லும் வழி நூறு மீட்டர் உயரத்தில் ஒற்றையடி பாதையாக இருந்த நிலையில் கடந்த 1920 ஆம் ஆண்டில் கோவிலுக்கு செல்ல மரக்கட்டைகளில் 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன.
பத்துமலை முருகன் கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டில் 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் போது பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பத்துமலை முருகனை தரிசிக்கின்றனர். மலேசியாவில் மூன்று கோடி இஸ்லாமியர்களும் எழுபது லட்சம் சீனர்களும் 20 லட்சம் இந்தியர்களும் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் சீனர்களும் தைப்பூச திருவிழாவின் போது கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்தியாவில் இருந்து அலுவலக பணிக்காகவும் சுற்றுலாவுக்காகவும் செல்லும் மக்கள் பத்துமலை முருகனை தரிசிக்க தவறுவதில்லை.