ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அறிவே சற்குரு, சற்குருவே கடவுள், பகுத்தறிவுள்ளவர் தத்துவஞானி ஆவார் என்பவை உள்ளிட்ட கோட்பாடுகளையும் ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்திய சத்குரு சச்சிதானந்தத்தின் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் தலைமையகம் சென்னை -தாம்பரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கேம் ரோடு என்ற இடத்தில் உள்ளது. இதன் கிளை சபைகள் தமிழக முழுவதும் சத்குரு சச்சிதானந்தரின் கோட்பாட்டை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.
சத்குரு சச்சிதானந்தத்தின் கோட்பாடுகளை தீவிரமாக வலியுறுத்தும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த முதல் சபையானது கடந்த 1938 ஆம் ஆண்டு கணக்கன்பட்டியில் நிறுவப்பட்டது. பழனியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கணக்கன்பட்டி. இந்த கிராமம் சிறந்த ஆன்மீக தலமாகவும் சிந்தனையாளர்களின் பிறப்பிடமாகவும் திகழ்கிறது. வரும் மே 30 அன்று கணக்கன்பட்டி கிராமத்தின் வட எல்லையில் அமைந்துள்ள பெட்டகம்பதியில் நடைபெற உள்ளது. அதே நாளில் கணக்கன்பட்டி கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையிலும் ஆண்டு குரு பூஜை நடைபெற உள்ளது.
1936 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பட்டி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலுக்கு திடீரென வந்த சுவாமிகளின் முகவசீகரம் கணக்கன்பட்டி மக்களை கவர்ந்தது. அவர் எங்கு பிறந்தார்? எங்கிருந்து வந்தார்? என்பது போன்ற அவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை.
அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்தி காட்டியதாக கணக்கன்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றியதாக சாதுக்கள் தெரிவிக்கின்றனர். மீண்டும் தமிழகத்துக்கு வந்து, கணக்கன்பட்டியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938 ஆம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை கணக்கன்பட்டியில் நிறுவினர்.
1945 ஆம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநரின் முகாம் அலுவலரான தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு குருபரன் விதேக முக்தி அடைந்தார்கள். அவரை அடக்கம் செய்த இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் வார குரு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை ஒன்றில் ஆண்டு குரு பூஜை நடத்தப்படுகிறது.
பல சித்தர்களுக்கு ஆசனாக சத்குரு சச்சிதானந்தம் விளங்கியதால் இவரை குருநாதர் என்று அன்பர்கள் அழைக்கிறார்கள். மக்களின் நம்பிக்கை எங்கு உள்ளதோ அந்த இடத்தை தேடி ஆன்மீகப் பயணத்தை மக்கள் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் கணக்கன்பட்டி வடக்கு எல்லையிலும் தென்மேற்கு மூலையிலும் அமைந்துள்ள சத்குரு சச்சிதானந்த குருகுலம் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.