Advertisement

யார் இந்த ரையீசி? ஏன் இந்த பதட்டம்? கொலையா?

மத்திய கிழக்கு

இஸ்லாமிய பிராந்தியமான மத்திய கிழக்கு நாடுகள் ஒற்றுமை இன்றி இருப்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இஸ்லாமியத்தில் ஷியா மதப் பிரிவை பின்பற்றும் நாடுகள் ஒரு பக்கமும் சன்னி மதப் பிரிவை பின்பற்றும் நாடுகள் ஒரு பக்கமும் பிரிந்து நிற்கின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஜோர்டன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் பெட்ரோலிய வணிகத்தை பராமரித்துக் கொண்டு அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளன. ஈரான், ஈராக், சிரியா, லெபனான் குவைத், கத்தார் போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டவையாக உள்ளன. மற்ற மத்திய கிழக்கு நாடுகள்   அமெரிக்காவுடனும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடனும் சம அளவில் உறவை பேணி வருகின்றன.

ரையீசி

இப்ராகிம் ரையீசி (Ebrahim Raisi) என அழைக்கப்படும் இப்ராகிம் இரைசல் சதாத்தி 1961 டிசம்பரில் பிறந்தவர். சட்ட அறிஞராக விளங்கிய இவர் ஈரானிய   நீதித்துறையில் பல்வேறு பொறுப்புகளை  வகித்துள்ளார். 1980 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் துணை  வழக்கறிஞராக ஈரான் தலைநகரில் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரணத் தண்டனை வழங்க காரணமாக இருந்த விசாரணை குழுவில் இருந்த நான்கு பேரில் ஒருவராக இருந்தவர் ரையீசி. இதனால் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளால் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

2004-2014 ஆம் ஆண்டுகளில் துணை தலைமை நீதிபதி, 2014-2016 ஆம் ஆண்டுகளில் தலைமை சட்ட அதிகாரி, 2019-2021 ஆம் ஆண்டுகளில் தலைமை நீதியரசர் ஆகிய பதவிகளில் ரையீசி பணியாற்றினார். பழமை மதவாத கொள்கையாளராக அறியப்பட்ட ரையீசி கடந்த 2017 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டதில் மிதவாத தலைவரான ஆசன் ரூகானியிடம்  மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  ஈரான் அரசியலமைப்புபடி அதிபரை விட அதிக அதிகாரம் படைத்த தலைமை மதகுருவான ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் ஆதரவாளராகக் கருதப்பட்ட ரையீசி 2021 நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஈரானின் எட்டாவது அதிபர் ஆனார். அடுத்ததாக அதியுயர் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரையீசி நேற்று முன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

மூன்றாம் உலகப்போர்

ரையீசி அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை அணி சேர்ப்பதில் தீவிரம் செலுத்தினார். பாலஸ்தீனத்துக்கும் கமாஸ் உள்ளிட்ட இஸ்ரேல் எதிர்ப்பு தீவிரவாத குழுக்களுக்கும் மிகுந்த ஆதரவளித்தார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் ஈரானின் பரம எதிரியாகவும் இருந்து வந்த சவுதி அரேபியாவுடன்  நல்லுறவை மலரச் செய்தார். ரையீசியின் காலத்தில் ஈரான் அணு ஆயுதத்துக்கு அவசியமான யுரேனியம் செறிவூட்டலை தீவிரப்படுத்தியது. உக்ரைனுக்கு எதிரான   போரில் ரஷ்யாவுக்கு ஈரான் ஆதரவளித்தது. 

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஈரானை எச்சரிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் முதல்  நாளில்   சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.  இதில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதி உட்பட பலர்  உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஏப்ரல் 13 அன்று இஸ்ரேல் மீது 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி   வான்வழி தாக்குதல் நடத்தியது ஈரான்.  அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான தாக்குதலை அப்போது நடத்தியதால் மூன்றாவது உலகப்போர் தொடங்கி விடுமோ என்ற பதட்டம் கடந்த மாதம் ஏற்பட்டது.

மரணம்

இத்தகைய அரசியல் சூழலில் ஈரான், அஜர்பைஜான் எல்லையில் நாடுகளின் எல்லையில் இரு நாடுகளாலும் கூட்டாக கட்டப்பட்ட  அணை (dam) திறப்பு விழாவிற்கு அஜர்பைஜான் அதிபருடன் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில்   ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரையீசியும் வெளியுறவுத் துறை அமைச்சரும் பாதுகாப்பு மற்றும் அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர். இஸ்ரேலுடன் நட்புக் கொண்டுள்ள அஜர்பைஜானுடன் கருத்து வேறுபாடு இருந்த போதிலும் நட்பின் சின்னமாக அணை திறப்பு நிகழ்விற்கு ஈரான் அதிபர் சென்றதாக கூறப்படுகிறது.

தூதரக உறவுகளை ஈரானுடன் முறித்துக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கும் ஈரானின் பரம எதிரியாக கருதப்படும் இஸ்ரேலுக்கும் மகிழ்ச்சியையும் அமெரிக்க எதிர்ப்பு மத்திய கிழக்கு நாடுகளிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் நட்பால்  சங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பில் முழு உறுப்பினர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஈரான் அதிபரின் இறப்பை சீனாவும் ரஷ்யாவும் உற்று கவனிக்கின்றன. உள்நாட்டு பிரச்சினைகளில் எதிர்ப்பை  தெரிவித்த மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதால் உள்நாட்டு மக்களில் பலருக்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உள்நாட்டு   யுத்தம் ஏற்படுமா? என்ற அச்சமும் உள்ளது. மொத்தத்தில் ரையீசியின் மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.  

கொலையா?

ஒவ்வொரு நாட்டிலும் உளவுப்படைகள் (intelligence forces) நாட்டின் நிர்வாக தலைவர்களின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதிலும் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வைக்கின்றன. இந்தியாவில் இண்டலிஜென்ஸ் ஐ.பி., (I.B.,) என அழைக்கப்படும்  உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் ரா (R.A.W.,) என அழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் அனலைசிங் விங் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கும் முக்கிய உளவு அமைப்பாகவும் செயல்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஐபி உளவு பிரிவு அதிகாரிகள் தங்கள் யாரென வெளியில் தெரியாமலேயே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ரா உளவு பிரிவு அதிகாரிகள் உலகம் முழுவதும் இந்தியாவிற்காக பணியாற்றி வருகிறார்கள். இந்திய ராணுவத்தில் எம்.ஐ., (M.I.,) என அழைக்கப்படும் மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் உளவு பிரிவும் இதைப் போலவே ஒவ்வொரு துறைவாரியான உளவு பிரிவுகளும் செயல்படுகின்றன. 

அமெரிக்காவில் சிஐஎ-வும் (Central Intelligence Agency) ரஷ்யாவில் கேஜிபி-யும் (Komitet Gosudarstvennoy Bezopasnost – Committee for State Security)  பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ-யும் (Inter-Services Intelligence) உளவு அமைப்புகளாக சர்வதேச விவகாரங்களில் பெரும் பங்காற்றி வருகின்றன. இஸ்ரேலின் மொசாத் (Central Institute for Intelligence and Special Operations) உளவு பிரிவு அமெரிக்கா, ரஷ்யா நாடுகளின் உளவு பிரிவுகளை விட வலுவானதாக கருதப்படுகிறது. இஸ்ரேலின் மூச்சை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களாக இருந்தாலும் சாதாரண மனிதர்களாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள் விதைக்கும் நபர்களாக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து ரகசியமாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மொசாத் அமைப்பு இதுவரை 500-க்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஈரானின் அதிபர் மரணம் நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மொசாத்தின் கொலையா? என்ற சந்தேகம் இஸ்லாமிய நாடுகள் இடையேயும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளிடையையும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடையையும் வலுவாக எழுந்துள்ளது. கனடா வாழ்  சீக்கியர் ஒருவரை இந்திய உளவு பிரிவு திட்டமிட்டு கொலை செய்ததாக இந்தியா மீது கனடா சில மாதங்களுக்கு முன்பு பழி சுமத்திய நிலையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த அமெரிக்க தற்போது வாய் மூடி மௌனமாக நிற்கிறது. எவ்வாறு இருப்பினும் அமைதியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசுகள் அனைத்து நாடுகளிலும் அமையும் வரை ரகசிய படுகொலைகளும் உள்நாட்டு கலவரங்களும் போர்களும் தவிர்க்க இயலாதவை.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles