இந்திய நாடு தேர்தல் திருவிழாவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக அரசறிவியல் (political science) பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர் – முனைவர் பி. சக்திவேல் அவர்களிடம் பூங்கா இதழ் நேர்காணல் நடத்தியது.
அரசறிவியல் என்பது என்ன?
அரசு மற்றும் அரசாங்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலையைப் பற்றி படிக்கக்கூடிய ஒரு அறிவியல் பூர்வமான படிப்பு அரசறிவியல் (political science). இப்பாடத்தின் தொடக்கமானது மேற்கத்திய நாடுகள் என்று கூறினாலும், திருவள்ளுவரின் திருக்குறள் மற்றும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களில் அரசு மற்றும் அரசாங்கங்களை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மனித சமூகத்திற்கு அரசறிவியல் எவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் அரசு, அரசாங்கம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி தெரிந்து கொள்வது என்பது இன்றியமையாத ஒரு செயலாகும். மனிதனுடைய ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல். அரசறிவியல் பாடத்தின் தந்தையாக கருதக்கூடிய அரிஸ்டாட்டில் இப்பாடத்தை பற்றி கூறும் பொழுது மனிதன் அன்றாடம் இயங்குவதற்கு தேவைப்படக்கூடிய ஒரு பாடம் அரசறிவியல் என்று கூறினார். இன்று மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு இந்தியா வரை பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு பாடமாக அரசறிவியல் இருந்து வருகின்றது.
அரசறிவியல் படிப்பில் எத்தகைய கல்வி போதிக்கப்படுகிறது?
ஆரம்பக் காலத்தில் அரசு மற்றும் அரசாங்கத்தை பற்றி படித்த ஒரு பாடமாக இருந்த அரசறிவியல், இன்று சர்வதேச உறவுகள், மனித உறவுகள், ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பு, அரசாங்கத்தினுடைய அன்றாட செயல்பாடுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள், தேர்தல்கள் தொடர்பான ஆராய்ச்சிகள், கருத்துக் கணிப்பு, எதிர்காலத்தில் அரசாங்கங்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் பற்றிய கணிப்பு என்று அரசறிவியல் பாடத்தின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றது.
எவ்வாறு அரசறிவியல் போட்டித் தேர்வுகளுக்கு பயன்படுகிறது?
இன்று மத்திய மற்றும் மாநில அளவில் நடத்தக்கூடிய அனைத்து போட்டித் தேர்வுகளில் (competitive examinations) அரசறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் பாடம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. உதாரணமாக, யுபிஎஸ்சி மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் நான்கில் ஒரு பங்கு வினாக்கள் அரசறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் பாடத்திலிருந்து கேட்கப்படுகின்றது. எனவே மாணவர்கள் இப்பாடங்களைப் படித்து நிபுணத்துவம் பெறுவதும் போட்டி தேர்வுகளின் பார்வையில் கட்டாயமாகிறது. யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் நேர்முகத் தேர்வுகளில் அதிகப்படியான கேள்விகள் அரசறிவியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து தான் கேட்கப்படுகிறது. எனவே இப்பாடங்களைப் படித்து இன்றைய அரசியலைப் பற்றி புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
அரசறிவியல் பாடங்களை படிப்பதனால் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகள் எவை?
முன்பே கூறியது போல போட்டித் தேர்வுகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவில் இப்பாடத்தை படிப்பதனால் உருவாகும். இரண்டாவதாக மத்திய, மாநில பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பேராசிரியர்களாக பணிபுரியக்கூடிய வாய்ப்புகளும் உண்டு . மூன்றாவதாக இன்று வளர்ந்து வரக்கூடிய ஒரு துறையான பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. நான்காவதாக அரசு சாராத நிறுவனங்களில் பொதுக் கொள்கைகளை உருவாக்கக்கூடிய அளவிலும் பணி புரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அரசறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்களை நடத்தக்கூடிய ஆசிரியர் பணிக்கும் இப்பாடத்தை படிப்பதன் மூலமாக வாய்ப்புகள் உருவாகும். அடுத்ததாக, பன்னாட்டு நிறுவனங்களில் சட்ட மற்றும் அரசியல் ஆலோசர்களாக பணிபுரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏராளமாக வாய்ப்புகளும் உண்டு. இதைக் காட்டிலும் ஒரு பொறுப்பு மிக்க குடிமக்களாக உருவாவதற்கு அரசறிவியல் பாடம் இன்றிமையாததாக உள்ளது.
அனைவரும் அரசறிவியல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களா?
விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய குடிமக்களால்தான் இந்திய மக்களாட்சி தலைத்தோங்கும். எனவே அரசறிவியல் பாடத்தை படிப்பதும், அரசியலமைப்பை புரிந்து கொள்வதும் ஒவ்வொரு குடிமக்களின் மிக முக்கியமான கடமையாகும். பொறுப்புள்ள குடிமக்களாகவும் அரசாங்கத்தைப் பற்றி புரிந்து கொண்டு மக்களாட்சியையும், அரசாங்கத்தை நெறிப்படுத்தக்கூடிய குடிமக்களாக உருவாவதற்கு அரசறிவியல் பாடம் உறுதுணையாக உள்ளது என்று கூறினாலும் மிகையாகாது.
Good….keep doing great..