வணக்கம். இது பிபிசிசியின் இந்திய தேர்தல் சிறப்பு செய்தி அறிக்கை. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வந்த நிலையில் நேற்று அதிக பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம அமைச்சராகவும் அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்றது. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள் குறித்து அரசின் பிரதமர் அமைச்சக அலுவலக செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து விவரித்தார்.
பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடரில் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனை தொழில்களும் அரசுடமையாக்கும் சட்டம் அரசின் முதலாவது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு நாட்டில் இயங்கி வந்த 300-க்கும் மேற்பட்ட லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்களை அரசுடமையாக்கியது போல, 1972 ஆம் ஆண்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களை அரசுடமையாக்கியது போல, தமிழகத்தில் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டது போல இந்த நடவடிக்கை அமையுமா? என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்த செய்தி தொடர்பாளர் இந்த சட்டத்தில், முதலீடு செய்துள்ள எவர் ஒருவருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இழப்பீட்டை அரசு வழங்க திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக நகரங்களை நோக்கி படை எடுப்பதன் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் பெரிய கிராமங்களில் அங்குள்ள சூழலுக்கு ஏற்ற வகையில் கிராமிய தொழிற்சாலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இது குறித்த சிறப்பு சட்டம் முதலாவது கூட்ட தொடரில் இரண்டாவது சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் பிரதம அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விவசாய வளர்ச்சி சட்டம் வரும் கூட்டத்தொடரில் மூன்றாவது சட்டமாக கொண்டு வரப்பட்டு உலகில் விவசாயிகளை காக்கும் அரசாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமைவதோடு விவசாய உற்பத்தியில் உலகில் முன்னிலை நாடாக இந்தியா மாறுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததோடு மூன்று சட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களையும் செய்தியாளர்களுக்கு அவர் தெரிவித்தார்.
ஏதோ சத்தம் கேட்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வாக்காளர்சாமி கண்ணை விழித்துப் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது தான் கனவில் செய்தி அறிக்கையை கேட்டுக் கொண்டிருந்தது.
பூங்கா இதழ்