நாட்டில் ஒரு சில பிராந்தியங்கள் முக்கிய நகரங்களை உள்ளடக்கி அதிக வருவாய் ஈட்டி தரும் பொருளாதார மண்டலங்களாக திகழ்கின்றன. நாட்டின் பெரும்பாலான பிராந்தியங்கள் அதிக வருவாயை ஈட்டி தரும் பொருளாதார மண்டலங்களுக்கு இணையான வருமானத்தைக் கொண்டதாக இல்லை. இதே சூழல்தான் மாநிலங்களிலும் நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நகரங்கள் அடங்கியுள்ள மாவட்டங்கள் அதிக வருவாயை ஈட்டி தரும் பொருளாதார மண்டலங்களாக இருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பிராந்தியங்கள் பின்தங்கிய வருவாய் பிராந்தியங்களாக உள்ளன. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
நாட்டில் அல்லது மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பொருளாதார வளர்ச்சி கண்ட பிராந்தியமாக இருக்கும் போது மக்கள் அந்த பிராந்தியங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காகவும் தொழிலுக்காகவும் வணிகத்துக்காகவும் படையெடுக்கின்றனர். இதன் காரணமாக நகரமயமாக்கல் அதிகரிக்கிறது. இதன் மூலம் பொருளாதார மையப் புள்ளிகளாக விளங்கும் மண்டலங்களில் வீடு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தருவதில் அரசுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவையும் நகரமயமாக்கல் காரணமாக அதிகரிக்கின்றன.
நாட்டின், மாநிலத்தின் வருவாய் குறைவாக இருக்கக்கூடிய அனைத்து பிராந்தியங்களையும் வருவாய் அதிகம் ஈட்டி தரக்கூடிய பிராந்தியங்களுக்கு இணையானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலமாக நகரமயமாக்கல் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. இத்தோடு மாநிலத்தின் ஒவ்வொரு பிராந்தியமும் நல்ல வளர்ச்சியை பெறுகிறது. மக்கள் அடர்த்தியாக சில பிராந்தியங்களில் இருப்பது குறைகிறது. ஒவ்வொரு பிராந்தியமும் கிராம தொழிற்சாலைகளை கொண்ட அமைப்புகளாக மாறுவதன் மூலம் பொருளாதாரத்தில் சமச்சீரான பிராந்தியங்கள் உருவாவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை வளர்ச்சி அடைய செய்ய நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பின்மை கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் சாலை, குடியிருப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒற்றுமையும் கலாச்சாரமும் சிறப்பாக வளரும். இதற்கு தேச அளவிலான திட்டத்தை வகுத்து அதனை அமல்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் பொருளாதார சமச்சீரின்மை ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.