Advertisement

சென்னை மாநகராட்சி கொடியில் மீன், புலி, வில் அம்பு சின்னம் பொறிக்க காரணமாக இருந்த ம.பொ.சி.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, சென்னை மாநகராட்சியின் கொடியின் சின்னமாக கடலும், படகும் மூன்று சிங்கங்களும், இரண்டு மீன்களும் இருந்தன. மூன்று சிங்கங்கள் ஆங்கிலப் பேரரசைக் குறிப்பதாகவும், கடல், படகு, மீன் ஆகியவை சென்னை கடற்கரையையும், அங்கு நடைபெறும் தொழிலைக் குறிப்பதாகவும் இருந்தது. நாம் சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாநகராட்சி கல்விக்குழுத் தலைவராக ம.பொ.சி. 1952 – ல் பதவி வகித்த போது ஆங்கிலேயர் பயன்படுத்திய மாநகராட்சி கொடியை மாற்றியமைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதன் காரணமாகபாண்டிய, சோழ, சேர மன்னர்களின் சின்னங்களான மீன், புலி, வில் அம்பு ஆகியவை சென்னை மாநகராட்சி கொடியில் பதியப்பட்டது . 

யார் இந்த ம.பொ.சி? தனது  ஏழ்மை நிலை காரணமாக, மூன்றாம் படிவப் படிப்பை பாதியிலிலேயே நிறுத்திய ம.பொ.சி திறன்மிக்க புத்தக படைப்புகளின் மூலம் தன் பட்டறிவை நிரூபித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் இருமுறை உறுப்பினராகவும், மதுரை காமராஜர் பல்கலை கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலை கழகம் ஆகியவற்றில்  செனட் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் எழுதிய சுதந்திரவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய புத்தகங்கள் பின்னாளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. 

ம.பொ.சி என அழைக்கப்படும் மயிலை பொன்னுசாமி சிவஞான கிராமணியார் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சல்வான்குப்பத்தில் 1906 ஜுன் திங்கள் 26ம் நாள் பொன்னுசாமி – சிவகாமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த ம.பொ.சி இளம்வயதில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது சொந்த முயற்சியால் இலக்கியம் பயின்றார். தன்னுடைய எழுத்துக்களில் தெள்ளிய நடையும், தெளிவான பார்வையும் கொண்டிருந்தார். செங்கோல் என்ற பத்திரிகையையும் நடத்தினார். 

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 700 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார். அங்குதான் அவரது இலக்கியப் பயணம் இன்னும் வேகமாகத் தொடங்கியது. பாரதியாரின் அறைகூவல் அவருக்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாக சிலப்பதிகாரத்திலும் அதிக ஆர்வம் காட்ட வைத்தது. பாரதியார் குறித்து ஆராய்ச்சிக்கு உகந்த 10 புத்தககங்களை இவர் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் குறித்து இவர் 13 புத்தகங்கள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் நன்னெறிகள் குறித்து நாடெங்கிலும் பிரசங்கம் செய்தார். சிலப்பதிகாரத்தில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியினைப் பாராட்டி, 1950ல்          ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கினார்.

ம.பொ.சி. தமிழரசுக் கழகம் என்ற இளைஞர் அணியை தமிழகத்தின் எல்லைகளை சரியாக வரையறுக்கும் நோக்கத்துக்காக 1946-ல் தொடங்கினார். சென்னை மாகாணத்தின் நிர்வாகத்திலும் கல்வியிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதும் தமிழ் மக்களுக்கென்று தனித்தமிழ்நாடு வேண்டுமென்பதும் இக்கட்சியின் முக்கிய கொள்கைகளாக இருந்தன.  

ம.பொ.சி   1946 முதல் 1954 வரை இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். பின்பு, தமிழரசு கழகத்தை தனி அரசியல் கட்சியாக மாற்றி, அதன் தலைவரானார். 1957 முதல் 60 வரை மாநில எல்லைகளை வரையறுப்பதில் ஆந்திராவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ‘தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று முழுக்கமிட்டு தமிழர்களை ஒன்று திரட்டி ஆந்திர மக்களின் கோரிக்கையை முறியடித்தார். தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினார். வடக்கெல்லையில் திருத்தணியை இணைக்கவும், தெற்கெல்லையில் மார்ஷல் நேசமணியுடன் இணைந்து போராடி குமரி மாவட்டத்தின் 5 தாலுகாக்களையும், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை  தாலுகாவையும் தமிழகத்துடன் இணைக்கவும் இவர் காரணமானார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார்.

அவரது அரும்பணிகளைக் கருத்திற்கொண்டு  1967-ல் நடந்த பொதுத்தேர்தலின் போது இவரை எல்லா கட்சியினரும் ஒருமனதாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். 1966-ல் இவர் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற புத்தகத்திற்கு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது இலக்கியம் மற்றும் கல்விப் பணியினைப் பாராட்டி 1972-ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 1979-ல் சென்னைப் பல்கலை கழகமும், அண்ணாமலை பல்கலை கழகமும் இவருக்கு இலக்கிய முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1985-ல் இவர் தமிழக அரசின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். அதன்பின் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவராக சிறிது காலம் செயல்பட்டார். 1995 அக்டோபர் 3 ஆம் தேதி இவர் இயற்கை எய்தினார். ம.பொ.சி எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசால் தேசிய உடமையாக்கப்பட்டது. 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles