Advertisement

காவல்துறையின் அமைப்பு முறையை தெரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசுகளின் கீழ் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை போன்ற பல துறைகள் இருப்பினும் காவல்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. உள்ளூரில் உள்ள காவல் நிலையம் முதல் தலைமையகமான டைரக்டர் ஜெனரல் போலீஸ் வரை காவல்துறையின் அமைப்பை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.   

மாவட்ட காவல் அலுவலகம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களால் எஸ். பி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகம் (district police office) செயல்படுகிறது.   மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், பொதுமக்களின் பாதுகாப்பு, மாவட்டத்துக்கு வருகை தரும் அதி முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், குற்ற நிகழ்வுகளை தடுத்தல், குற்றவாளிகளை கண்டறிதல் மற்றும் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் மீது வழக்கு நடத்துதல் உள்ளிட்ட பல பணிகளுக்கு காவல்துறை கண்காணிப்பாளரே மாவட்ட அளவில்   பொறுப்பாளர் ஆவார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரிசர்வ் போலீஸ் எனப்படும் மாவட்ட ஆயுதப்படையின் தலைவராகவும் காவல் கண்காணிப்பாளர் செயல்படுகிறார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை (police control room), மாவட்ட அளவிலான உளவுப் பிரிவு (SP intelligence) ஆகியவற்றையும் நிர்வகிப்பவர் காவல் கண்காணிப்பாளர் ஆவார்.  மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குற்றங்கள்), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்) உள்ளிட்ட ஓரிரு கூடுதல் எஸ். பி. கள் பணியாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்ட காவல் அலுவலகத்திலும் டிஎஸ்பி என அழைக்கப்படும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது நிர்வாகப் பிரிவு (general administration), மாவட்ட குற்ற ஆவண காப்பகம் (district crime records bureau), மாவட்ட குற்றப்பிரிவு (crime branch), மதுவிலக்கு பிரிவு (prohibition enforcement) போன்றவையும் செயல்படுகின்றன.  மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கீழ் ஆய்வாளர் தலைமையில் நுண்ணறிவு பிரிவு, தகவல் தொடர்பு பிரிவு, தீவிரவாத தடுப்பு பிரிவு போன்றவையும் செயல்படுகின்றன

உட்கோட்ட காவல் அலுவலம்

ஒவ்வொரு மாவட்டமும் மக்கள் தொகை மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப மாவட்ட காவல் அலுவலகத்திற்கு கீழ்  காவல் உட்கோட்டங்களாக (sub-division)   பிரிக்கப்பட்டு ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் டிஎஸ்பி என அழைக்கப்படும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை செயல்படுகிறது.    ஒரு காவல் உட்கோட்டத்தின் கீழ் அதாவது ஒரு டி. எஸ். பி. க்கு கீழ் பல காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவருக்கு கீழ் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் போன்றவைகளும்   தேவைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையம்

ஒவ்வொரு காவல் நிலையமும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என அழைக்கப்படும் காவல் ஆய்வாளரின் தலைமையில் இயங்குகிறது. சில இடங்களில் காவல் ஆய்வாளருக்கு கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட காவல் நிலையங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்கள் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சமர்ப்பிக்கும் புகார்களை பெற்று சாதாரண வகை  புகாராக இருந்தால் சமூக பணி பதிவேட்டில் பதிவு செய்து சி.எஸ்.ஆர் (community service register) எனப்படும் ரசீதை வழங்குகிறார்கள். குற்ற நிகழ்வின் தன்மையை பொறுத்து சட்டப்படி முதல் தகவல்  அறிக்கையை காவல் நிலைய அலுவலர் பதிவு செய்கிறார். தேவைப்படும் வழக்குகளில் கைது செய்தல், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில்   ஒப்படைத்தல்,   வழக்குகளை விசாரித்து குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்தல் போன்ற பணிகளை   வழக்கை புலனாய்வு செய்யும் காவல் அதிகாரி (I.O: investigation officer) செய்கிறார். நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்னிலைப்படுத்துவதும் வழக்கை   அரசு வழக்கறிஞர் மூலம் நடத்துவதும் காவல் அதிகாரிகளின் பணிகளில்   முக்கியமானதாகும். தங்களது காவல் நிலைய எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும் குற்றங்களை தடுப்பதும் குற்றப் புலனாய்வு செய்வதும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் பணியாகும்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சப் இன்ஸ்பெக்டர் எனப்படும் சார்பு ஆய்வாளர்களும் ஏட்டையா என்று பொதுமக்களால் அழைக்கப்படும் தலைமை காவலர்களும் இரண்டாம் மற்றும் முதலாம் நிலை காவலர்களும் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஸ்டேஷன் ரைட்டர் எனப்படும்   காவல் நிலைய எழுத்தர்களும் நீதிமன்ற பணியை கவனிக்கும் கோர்ட் டூட்டி காவல் அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள்.

சிறப்பு பிரிவுகள்

ஒவ்வொரு காவல் உட்கோட்ட எல்லைக்கும் மகளிர் காவல் நிலையங்கள், மதுவிலக்கு காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல் நிலையங்கள் போன்றவை இருப்பது மட்டுமல்லாமல் மாநில காவல் தலைமையகத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உளவு பிரிவு அலுவலர்களும் பணியாற்றுகிறார்கள்.  மாநில காவல் துறையின் கீழ் செயல்படும் பிரிவுகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்டெலிஜென்ஸ் பீரோ (IB) எனப்படும் மத்திய அரசின் உளவு பிரிவும் மத்திய அரசின் வேறு உளவு பிரிவுகளும் எத்தகைய அலுவலகங்களும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

ஊரக மாவட்டங்களில் (rural districts) மாவட்ட காவல் அலுவலக அமைப்பு முறையை இந்த கட்டுரையில் பார்த்தோம். மாநகர அல்லது பெருநகர காவல் துறையின் அமைப்பு முறையைப் பற்றியும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மேல் உள்ள காவல் அமைப்பு முறையை பற்றியும் விரைவில் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

Related Articles

1 COMMENT

  1. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles