ஒரு ஏழை மனிதன் தன் குடும்பத்தினருக்காக ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். அவரது குடும்பம் குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்.
எல்லோரும் ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள். விழாவுக்கு 2 நாள்களுக்கு முன்னால், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து போய் விட்டது.
இது தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச்சென்று இனிப்புகள் வாங்கி, வீடு இடிந்து கிடந்த இடத்திற்குச் சென்றார். அங்கு நிறைய பேர் நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
“ஓ, இந்த ஏழை மனிதருக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்டமான செயல் நடந்துவிட்டதே? மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து அல்லவா இந்த வீட்டைக் கட்டி இருக்கிறார்!” மக்கள் தங்களுக்குள் வித்தியாசமான கருத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஏழை மனிதர் அங்கு வந்து, தனது பையில் இருந்து, இனிப்புகளை எடுத்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். இவரது இந்த செயலைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
அவரது நண்பர்களில் ஒருவர் அவரிடம் கேட்டார், “உனக்கு பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா? உன்னுடைய வீடு முழுவதுமாக இடிந்து போய் விட்டது; உன்னுடைய வாழ்நாள் முழுவதுமாக நீ சம்பாதித்த வருமானமும் அப்படியே வீணாகப் போய் விட்டது. ஆனால், நீயோ மகிழ்ச்சியாக இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறாயே!?”
” நீங்கள் இந்த நிகழ்ச்சியின் எதிர்மறைப் பக்கத்தினை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நேர்மறைப் பக்கத்தை அல்ல. இந்த வீடு இன்றே இடிந்து விழுந்தது நல்லதுதான். இப்படி இல்லாமல், இந்த வீடு இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்தால், முழு குடும்பமும் அதாவது நான், எனது மனைவி, குழந்தைகள் அனைவருமே அல்லவா இறந்து இருப்போம். அது எவ்வளவு பெரிய இழப்பு ?’
எந்த நிகழ்ச்சியோ அல்லது விஷயமோ அவற்றிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு – நேர்மறை அம்சமும், எதிர்மறை அம்சமும். அதை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பொறுத்து, அது நம்மை சார்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையின் விதியும் அதைப் பொறுத்துதான் அமைகிறது.
எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளிலும்,ஏற்றுக் கொள்ளுதல் என்னும் உணர்வு இருந்தால்,அது மிக மோசமான விளைவுகள் எதுவுமே இல்லாமல் காப்பாற்றி,நம்மை முன்னோக்கி செல்ல வைக்கும்.