ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி என்ற அழகிய நகரம். ஒரு புறம் இந்திய பெருங்கடலையும் மற்றொருபுறம் வங்காளப் விரிகுடாவும் அமைந்து நடுவே இந்த நகரம் இயல்பாகவும் இயற்கையாகவும் இயங்கிக் கொண்டிருந்தது. நகரத்தில் அலுவலகங்கள், பள்ளிக்கூடம், தபால் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், துறைமுகம் என அனைத்து வசதிகளையும் பெற்று நிம்மதியான வாழ்க்கை முறையை இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.
தனுஷ்கோடியின் வடிவம் வில் போன்று வளைந்த கடற்கரை இருப்பதால் இதற்கு தனுஷ் கோடி (வில் முனை) என்று பெயர் வந்தது.. சங்ககாலத்தில் தனுஷ்கோடியை பாண்டியர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் உள்ளது. தனுஷ்கோடி மிகவும் பழமையான வரலாறு சிறப்புமிக்க சுவடுகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு காலத்தில் கடற்கரை வாணிபத்தில் மிகவும் சிறப்புற்று இருந்ததற்கான சுவடுகள் உள்ளன. முத்துக்குளித்தல் தனுஷ்கோடியின் முதன்மையான தொழிலாக விளங்கியது. கருப்பு முத்து என வைரத்தின் மதிப்பிற்கும் அதிகமாக உள்ள ஒரு வகையான முத்து தனுஷ்கோடி கடற்பரப்பில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை முத்தாகும். மதுரை மாகாணத்திலேயே அதிக பொருளாதார நகரமாகவும் திகழ்ந்துள்ளது. சேர, சோழ, பாண்டியர் காலத்திலேயே தனுஷ்கோடி புகழ்பெற்ற வியாபார ஸ்தலமாகவும் இருந்திருக்கிறது.
ஆழிப்பேரலை
1964 அன்று டிசம்பர் 22 ஆம் நாள் தெற்கு அந்தமான் கடலில் சிறு காற்று அழுத்தம் உருவானதாக ஐந்து நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு நிலை 1964 டிசம்பர் 19ஆம் தேதி புயலாக மாறிய நிலையில் 1964 டிசம்பர் 22 ஆம் நாள் இரவு அதிக வேகமான காற்றும் 7 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் அதிக வேகத்துடன் தனுஷ்கோடியை வந்தடைந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நகரமும் நீரில் மிதந்தது. 7 மீட்டர் உயரம் என்பது ஏறக்குறைய 23 அடி ஆகும். இப்பேரலையில் சுமார் 1800 பேர் இறந்திருக்க கூடும். இந்தியா, இலங்கை என இரண்டு பகுதிகளுமே பாதிப்புக்கு உள்ளானது. அதே வேளையில் பாம்பன்- தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில் தனுஷ்கூடியை நெருங்கிக் கொண்டிருந்தது அப்பொழுது கடல் நீர் முழுவதுமாக ரயிலை தண்ணீரில் அடித்துச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மூன்று கிராமங்கள் முழுமையாக கடல் நீரில் மூழ்கி விட்டது. அந்த காலகட்டத்தில் தகவல் அறியும் தொழில் நுட்பங்கள் போதுமான அளவு இல்லாததாலும் இருந்து தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தனுஷ்கோடி எத்தகைய தொடர்பும் இல்லாமல் இருந்தது. மீதமுள்ள மக்களை காப்பாற்ற ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டது. இத்தகைய பேரழிவு ஏற்பட்டு 60 வருடங்கள் கடந்து விட்டன. கடல் அலைகள் கொண்டு சென்றது போக மிச்சம் மீதி சுவடுகள் தனுஷ்கோடியில் இன்னும் இடிந்த சுவர்களாக உள்ளது.
பாம்பன் பாலம்
இந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கடல் இணைப்பு பாலமாக பாம்பன் பாலம் புகழ்பெற்ற திகழ்கின்றது. ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் இது. இந்த பாம்பன் பாலம் பொறியாளர்களால் ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஆழிப்பேரலையின் போதும் இப்பாலம் சேதமடைந்தாலும் அடுத்த 48 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. மும்பையில் காணப்படும் பாந்திரா – வெரளி பாலத்திற்கு பிறகு இரண்டாவது மிக நீண்ட பாலமாக இது உள்ளது.
சுற்றுலா தளம்
தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் காண வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா இடையில் அழகிய கோதண்ட ராமர் ஆலயம் உள்ளது. மூண்டிரம் சத்திரம் என அழைக்கப்படும் தனுஷ்கோடி கடற்கரை 15 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகள் விளையாடுவதற்கு பாதுகாப்பானதாக உள்ளது. வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் என இரண்டு கடல்களும் இணையும் இடம் அரிச்சல் முனை என்று அழைக்கப்படுகின்றது. இதுவே ராமேஸ்வரம் முடியும் இடமாகும். இந்த இடத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இலங்கை அமைந்துள்ளது. இத்தகைய இயற்கை எழில் மிக்க காட்சிகள் இங்கு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. புயலால் அழிந்த ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளது ராஜகாளியம்மன் ஆலயம். இங்கே தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்று உள்ளது. இங்கு உள்ள “பைப்கோரல்” எனப்படும் ஒரு வகையான பவளப்பாறை கற்கள் கடல் நீரில் மிதப்பது அதிசயத்தை ஏற்படுத்துகிறது.
ஆண் மற்றும் பெண் கடல்
பெண் கடல் என்று உள்ளூர் மக்களால் வழிபடப்படும் வங்காள விரிகுடா நீல நிறத்தில் காணப்படுவதோடு எப்போதும் மிகுந்த அலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதே வேளையில், இதற்கு மாறாக, ஆண் கடல் என்று உள்ளூர் மக்களால் வழிபடப்படும் இந்திய பெருங்கடல் பச்சை நிறத்தில் காணப்படுவதோடு அலைகள் இன்றி அமைதியாக காணப்படும். வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் சங்கமிக்கும் இடம் தனுஷ்கோடியில் அழகை மேலும் கூட்டுகிறது. ஒருமுறை தனுஷ்கோடி சென்று வாருங்கள்! அழிந்த நகரில் எஞ்சியுள்ள அழகை பாருங்கள்! பெண் கடலின் சீற்றத்தையும் ஆண் கடலின் அமைதியையும் சங்கமிக்கும் அழகையும் கண்டு களியுங்கள்!
தெங்குமரஹாடா: அழகிய, அதிசய, காண வேண்டிய தமிழக கிராமத்துக்கு செல்ல அனுமதி பெறுவது எப்படி? கிராமம் முழுமையும் இடமாற்றமா?https://theconsumerpark.com/thengumarahada-tamilnadu-miracle-village