பங்காளிகள் யார்?
ஓர் ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஆதி மூலமான ஓர் ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஓர் ஆணையும் சேர்த்து அடங்கும் பங்காளிகள் கூட்டத்தை ஒரே குலத்தினர் அல்லது ஒரே கூட்டத்தினர் என்று அழைக்கின்றனர். பங்காளி என்பது தந்தை வழி உறவுகளையும் அங்காளி என்பது தாய்வழி உறவுகளையும் குறிப்பதாகும்.
உடன் பங்காளிகள்
ஓர் ஆண் வழியாக தோன்றும் ஏழு தலைமுறையினர் குடும்பங்களில் உள்ள அனைத்து ஆண்களும் உடன் பங்காளிகள் ஆவார்கள். உடன் பங்காளிகளின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்த குடும்பத்தில் உள்ள அப்பா, பெரியப்பா, சித்தப்பா, சகோதரர்கள், சகோதரிகள், மகன்கள், மகள்கள் போலவே உடன் பங்காளிகளின் குடும்பங்களில் உள்ளவர்கள் கருதத்தக்கவர்கள் ஆவார்கள்.
பங்காளிகளின் சிறப்பு
ஒவ்வொரு பங்காளி குடும்பத்திலும் குழந்தை பிறப்பு, திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் மரணம் உள்ளிட்ட துயர நிகழ்வுகளிலும் அனைத்து பங்காளிகளும் முன்னின்று ஒற்றுமையாக குடும்ப நிகழ்வை நடத்திக் கொடுப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இத்தகைய குடும்ப நிகழ்வுகளில் பங்காளி வீடுகளில் பிறந்த பெண்களையும் அவரது கணவன் வகையில் வந்த மாமன், மைத்துனர்களையும் விருந்தினர்களாக அழைத்து குடும்ப நிகழ்வுகளை நடத்துவதும் தமிழர்களின் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.
உறவுகள்
ஒரு பங்காளியின் வீட்டில் ஒரு சுப நிகழ்வு நடக்குமானால் அனைத்து பங்காளிகளும் சுப நிகழ்வு வீட்டிற்கு வருகை தந்து சிறப்பிப்பதோடு ஒவ்வொரு பங்காளிகளின் வீடுகளில் பிறந்த பெண்களும் அவர்களது கணவர் மற்றும் வாரிசுகளும் உறவினர்களும் வருகை தந்து உறவுகளோடு உன்னதமான மகிழ்ச்சியை உருவாக்குகின்றனர். இத்தகைய மரபுகளை கொண்டிருந்த தமிழர் பாரம்பரியம் தடம் மாறுகிறதோ? என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது. சொந்தங்கள் இடையே ஒவ்வொருவருக்கும் நிலவும் ஒற்றுமை அனைவரின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை மறுக்க இயலாது. உறவும் நட்பும் ரயில் தண்டவாளங்களைப் போல இணைந்த கோடுகள் ஆகும். இரண்டையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து விட முடியாது. நட்பை பேணிக் காப்பது அவசியம் என்றாலும் உறவின் மகத்துவத்தை மறந்து விடக்கூடாது.
குலதெய்வ வழிபாடு
ஒவ்வொரு பங்காளிகளின் கூட்டத்துக்கும் தமிழகத்தில் ஆதிகாலம் முதலே குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. குலதெய்வ வழிபாடு சொந்தங்களுடைய வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையை மேலோங்க செய்யும். ஒவ்வொரு பங்காளிகளின் கூட்டத்துக்கும், அதாவது ஒவ்வொரு குலத்துக்கும், காவல் தெய்வமாக குலதெய்வம் பார்க்கப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, ஆடி பதினெட்டு, தை அமாவாசை போன்ற தினங்களில் குலதெய்வ கோவில்களில் ஒன்று சேரும் பங்காளிகள் ஒற்றுமையுடன் குலதெய்வத்தை தரிசித்து மகிழ்கின்றனர். இவ்வாறு பங்காளிகள் ஒன்று சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வதில் சமீப காலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாட்டு சந்திப்புகளை தவிர்ப்பதன் காரணமாக பங்காளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பங்காளி வழியில் வந்த பெண் வழி குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே அறிமுகமில்லாத சூழலும் தோன்றத் தொடங்கி இருக்கிறது.
அருள்மிகு வீரக்குமார் கோவிலில்
பங்காளிகளிடையே ஒற்றுமையும் உறவும் மேம்பட தமிழர்களின் பாரம்பரியமான குலதெய்வ வழிபாட்டை பங்காளிகள் ஒன்றாக இணைந்து ஆண்டுக்கு ஒரு முறையாவது திருவிழாவாக நடத்துவது அவசியமானதாகும்.
இந்த வகையில் வரும் 9 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை அன்று வெள்ளகோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வீரக்குமார் சுவாமிகள் குலதெய்வமாக கொண்டுள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின் ஒரு பிரிவான தென்முக ஆந்தை குலத்தினர் பங்காளிகள் திருவிழாவை அவர்களது குலதெய்வ கோவிலில் கிடாவெட்டி குலதெய்வ தரிசனம் செய்து கொண்டாட உள்ளனர்.
நீங்க?
இதைப்போலவே ஒவ்வொரு ஆண்மகனும் சார்ந்துள்ள சகோதரர்கள், சித்தப்பா, பெரியப்பா ஆகியோர் அடங்கிய பங்காளிகளின் திருவிழாவை பெண் வழி உறவுகளை அழைத்து நடத்தி குலதெய்வ வழிபாடு செய்து தங்களுடைய ஒற்றுமையை வளர்க்க செய்வது அவசியமானதாகும்.