Advertisement

சைபர் குற்றவாளிகள் உங்களிடம் பணத்தைப் பறிக்க கையாளும் தந்திரங்களை அறிந்துகொள்ளுங்கள்!

01. வங்கிகள் வாடிக்கையாளர்களை ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ஓடிபி, நெட் பேங்க் பாஸ்வேர்டு, ஏடிஎம் அட்டை மற்றும் கடன் அட்டை எண் போன்ற விபரங்களை கேட்பதில்லை. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி இது போன்ற விவரங்களை எவரேனும் கேட்டால் வழங்கி விடாதீர்கள். இந்தத் தகவல்களை தங்களிடமிருந்து பெற்று தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சைபர் குற்றவாளிகள் பணத்தை அபகரித்து விடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

02. காவல் துறையில் இருந்து அல்லது சுங்கத்துறையில் இருந்து அல்லது வருமான வரி துறையில் இருந்து பேசுவதாக யாரேனும் தங்களை தொலைபேசி மூலம் அழைத்து வங்கி கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ஓடிபி, நெட் பேங்க் பாஸ்வேர்டு, ஏடிஎம் அட்டை மற்றும் கடன அட்டை எண் போன்ற  விபரங்களை கேட்டால் அதனை நம்பி மேற்படி விவரங்களை அவர்களுக்கு வழங்கி விடாதீர்கள். 

உதாரணமாக, சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும் தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை சேகரிக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறோம் என பேசலாம். மற்றொரு உதாரணமாக, தங்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் எனக் கூறி அதற்காக விவரங்களை கேட்கிறோம் என்பார்கள். மறந்தும் மேலே சொல்லப்பட்டு விவரங்களை அவர்களுக்கு வழங்கி விடாதீர்கள்.

03. உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது அல்லது உங்களுக்கு கடன் அனுமதி வங்கியால் வழங்கப்பட்டிருக்கிறது அல்லது உங்கள் கணக்கில் இவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது என்பது போன்ற விவரங்களை அனுப்பி மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என  உங்களது மொபைலுக்கு வரும் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்பி மோசடியாளர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்து விடாதீர்கள். அதன் மூலம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட்டு தங்களது வங்கியில் இருந்து பணம் அபகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

04. தங்களது ஏடிஎம் அல்லது கடன் அட்டை தொலைந்து போனால் முடிந்தவரை வங்கிக்கு சென்று அதனை பிளாக் செய்யவும். இணையதளத்தில் வங்கிகளின் பெயர்களில் போலியான கஸ்டமர் சர்வீஸ் எண்களும் வலம் வருகின்றன.   நேரடியாக வங்கிக்கு செல்ல முடியாத நிலை உள்ளவர்கள் தங்களது வங்கியின் கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண்கள் சரியானதா? என்பதை உறுதி செய்து கொண்டு அதனை பயன்படுத்துங்கள்.

05. அதிக பணத்தை வைத்துக் கொண்டுள்ள வங்கி சேமிப்புக் கணக்குகளில் முடிந்தவரை ஏடிஎம், கூகுள் பே, பே டிஎம் போன்ற வசதிகளை இணைக்காமல் தனி வங்கிக் கணக்கில் (seprate account) இது போன்ற வசதிகளை இணைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கணக்கு, ஏடிஎம் மற்றும் கடன் அட்டை போன்றவற்றின் பாஸ்வேர்டுகளை எவருக்கும் வழங்காதீர்கள். அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்ளுங்கள். பல கணக்குகள் இருக்குமாயின் எல்லா கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை வைத்து விடாதீர்கள்.

06. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளிவரும் மோசடியான லிங்குகளை கிளிக் செய்து அதன் மூலம் தேவையற்ற வகையில் தங்கள் சொந்த தகவல்களை அதில் அப்டேட் செய்து தங்களது பணத்தை இழக்க தாங்களே காரணமாக   இருந்து விடாதீர்கள்.

07. தங்களுக்கு தெரியாதவர்கள் யாரேனும் வீடியோ கால் மூலம் தங்களை அழைத்தால் பேசி விடாதீர்கள். அழைப்பவர் நிர்வாணமான பெண்மணியாக கூட இருக்கலாம். நீங்கள் எடுத்துப் பேசினால் ஸ்க்ரீன் ஷாட் செய்து அதை தங்களுக்கு அனுப்பி சமூக ஊடகங்களில் பரப்பாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டி தங்களது பணத்தை அபகரிக்கும் முயற்சியாக தங்களுக்கு வரும் வீடியோ கால் இருக்கலாம்.

08. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரைவேட் செட்டிங்கில் உங்களது நண்பர்கள் மட்டும் உங்களது பதிவுகளை பார்க்கும்படி செய்து கொள்ளுங்கள். நண்பர்கள் அல்லாதவர்களும் பொது வெளியில் பார்க்கும்படி உங்கள் பதிவுகளை பார்க்கும்படி இருந்தால் உங்களது சமூக ஊடக கணக்கில் இருந்து உங்கள் புகைப்படத்தை எடுத்து உங்களுடையது போலவே உங்கள் புகைப்படத்தை பதிவு செய்து உங்கள் பெயரில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள ஊடக போலி கணக்கை (face account) உருவாக்கி உங்கள் நண்பர்களிடம் மோசடியாளர்கள் பணம் பறிக்க முயற்சிப்பார்கள்.

09. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மூலமாக உங்கள் நண்பரின் கணக்கை உருவாக்கி அந்த போலி கணக்கின் மூலமாக உங்கள் நண்பர் கேட்பது போல உங்களிடம் பணம் கேட்டு வரும் தகவல்களை ஒருபோதும் நம்பாதீர்கள். உண்மையானது போல இருக்குமோ என நினைத்தால் உங்கள் நண்பருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசியில் பேசி உறுதிப்படுத்தி பணத்தை அனுப்ப வேண்டும்.

10. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவசியமில்லாமல் தங்களது அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்யாதீர்கள். குறிப்பாக, தாங்கள் எப்போது வெளியூருக்கு செல்கிறீர்கள்? எத்தனை நாள் செல்கிறீர்கள்? எப்போது திரும்ப வருகிறீர்கள்? என்பது போன்ற விவரங்களை பதிவு செய்யும்போது சைபர் குற்றவாளிகள் உங்களது நடவடிக்கைகளை கவனித்து தாங்கள் ஊரில் இல்லாத போது குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. 

11. பொது இடங்களில் வைக்கப்பட்ட சார்ஜர்களில் (USB) மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவதை இயன்ற வரை தவிர்க்கவும்.  இத்தகைய இடங்களில் உங்களது மொபைல் போனில் உள்ள தகவல்களை ஜூஸ் ஜாக்கிங் (juice jacking) என்ற முறையில் திருடி மோசடியில் குற்றவாளிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. நீண்ட பயணமாக இருக்கும் போது முடிந்தவரை   தங்களது சொந்த பவர் பேங்க் உபகரணம் மூலம் மொபைல் சார்ஜ் செய்ய முயற்சி செய்யுங்கள். இதே போலவே பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் ஒய்பை சேவைகளில் தங்களது மொபைல், லேப்டாப் போன்றவற்றை இணைக்கும் போது கவனமாக இருப்பது அவசியமாகும். தேவையில்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

12. தாங்கள் இணைந்துள்ள பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் போன்றவை மூலமாகவும் தங்களுக்கு கடன் வழங்குவதாகவும் வேலை வழங்குவதாகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பதாகவும் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய செய்தால் அதிக கமிஷன் தருவதாகவும் வரும் தகவல்களை கண்டு ஏமாந்து விடாதீர்கள். சில நேரங்களில் அவை போலியான விளம்பரங்களாகவும் போலி இணையதளங்களாகவும் இருக்கக்கூடும் அவற்றில் உள்ளே சென்று பார்க்கும் போது முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என கேட்கக்கூடும். இது போன்ற பணம் கேட்கும் கும்பல்களிடம் ஏமாந்து விடாதீர்கள். ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் செய்தி லிங்களுக்கு பின்னால் தகவல் / பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கிறார்கள்

13. தங்களது மொபைல் போனில் தேவையில்லாத செயலிகளை (ஆப்புகளை) பதிவிறக்கம் செய்து பிரச்சனைகளை தேடிக்கொள்ளாதீர்கள். எந்த ஒரு செயலியையும் (ஆப்பையும்) பதிவிறக்கம் செய்யும்போது அதன் முழுமையான விவரங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

14. வேலை தரப்படும் என ஆசையை துண்டும் விளம்பரங்கள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. பணம் செலுத்தும் முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அவர்களால் வேலை பெற்றவர்கள் விபரங்களை கேட்டு பெற்று வேலை பெற்றவர்கள் இல்லத்துக்கே சென்று உறுதி செய்யுங்கள்.

15. சமூக ஊடகங்களில் உங்களது வீட்டு முகவரி, அலுவலக முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை அனைவரும் பார்க்கும்படி பதிவு செய்யாதீர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக அறிமுகமான நபர்களை நேரடியாக பெற்றோரின் அனுமதி இல்லாமல் சந்திக்கக் கூடாது.

16. அச்சுறுத்தும் வகையில் இமெயில் மூலமாக அல்லது வாட்ஸ் அப் மூலமாக வரக்கூடிய தகவல்களுக்கு பதில் அளிக்காதீர்கள். பலருக்கு டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்படுவதாக தகவல் வருகின்றன. தொடர்பு கொள்ளாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தல்கள் வருகின்றன. இவற்றை உடனே நம்பி பதிலளித்து விடாதீர்கள் பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான ஆன்லைன்/சோசியல் மீடியா உரையாடல்களை நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டு இருப்பவை சில வகையான சைபர் குற்ற மோசடிகள் ஆகும். இதே போலவே பல வகையான சைபர் குற்றங்களை குற்றவாளிகள் செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் மொபைல், இணையதளம், வங்கி பரிவர்த்தனை செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles