அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “நீண்ட நாட்களாக வரவில்லையே சாமி? என்ன சாமி செய்திகள்” என்றேன் நான்“. “பொங்கல் விடுமுறையில் 9 நாட்கள் நானும் ஓய்வெடுத்துக் கொண்டேன்” எனக் கூறி விட்டு செய்திகளை வீசத் தொடங்கினார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ரூ.40 ஆக இருந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ரூபாய் மதிப்பு ரூ 86.70 என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் டாலருக்கு நிகரான மதிப்பு விரைவில் ரூ100 எட்டி விட கூடும். இத்தகைய போக்கு ஏற்கனவே உயர்ந்து நிற்கும் விலைவாசியை மீண்டும் உயர கொண்டு போகும் சூழல் ஏற்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“இதனால்தான் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் புதிய பணத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்களே?” என்றேன் நான்.
“இந்தியா, ரஷ்யா, பிரேசில், சைனா தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் அங்கம் வைக்கும் பிரிக்ஸ் அமைப்பில் டாலருக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது உண்மைதான். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதையும் கவனிக்க வேண்டும் அல்லவா?” என்றார் சாமி.
“ஒவ்வொரு நாடும் தமது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படலாமே! இதில் ஏன் அமெரிக்கா தலையிடுகிறது?” என்றேன் நான். “அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய நாணய முறை அமல்படுத்தப்பட்டால் அமெரிக்காவுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக போலீஸ்காரனாக அமெரிக்கா மற்ற நாடுகளை மிரட்டுவதாகவே பல நாடுகள் கருதுகின்றன. கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாற்றும் முயற்சியிலும் கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் முயற்சியிலும் பனாமா கால்வாயை பனாமா நாட்டிலிருந்து கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் புதிய அதிபர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பலரும் அமெரிக்காவில் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அமெரிக்க குடியுரிமை பெற்றுவிடுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது. இதனை மாற்றும் வகையில் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பிறப்பால் இனிமேல் வழங்கப்பட மாட்டாது என்ற சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து செய்துள்ளது அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“அமெரிக்க அரசுடனும் அமெரிக்க நிறுவனங்களுடனும் ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகையை வழங்காவிட்டால் இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான வரி விதிக்கவும் அதிபர் ட்ரம்ப் தயாராக உள்ளார். ட்ரம்பின் நடவடிக்கைகளால் இந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூபாய் 8.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்திலிருந்தும் சர்வதேச காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு நிறுவனத்தில் இருந்தும் அமெரிக்க வெளியேறியுள்ளது. இத்தகைய அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையை அசைத்துப் பார்க்கும் செயலாக உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி என்று கருதினாலும் உலகில் அதிகம் கடன் பெற்றிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளது. என்றேன் நான். “பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகத்தான் பல்வேறு அரசுத் துறைகளை மூடிவிடும் முடிவில் அமெரிக்க அதிபர் இருக்கிறார். தனியார் நிறுவனங்களே அரசு செய்யக்கூடிய பணிகளை செய்து கொள்ளட்டும் என்றும் ஆட்சி மற்றும் சர்வதேச கட்டுப்பாடுகளை மட்டும் அமெரிக்க அரசு செய்தால் போதும் என்றும் மனநிலையில் அவர் உள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் அரசின் கட்டுப்பாடுகளை விட தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம்தான் உள்ளது. தற்போது அமெரிக்க அரசு இன்னும் கூடுதலாக அரசு செய்யும் கடமைகளை விலகிக் கொள்ள தொடங்கினால் மீண்டும் மன்னராட்சி முறைக்கு செல்ல வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்று ஜனநாயக கோட்பாட்டாளர்கள் அஞ்சுகிறார்கள்” என்றார் வாக்காளர் சாமி.
“தலை சுற்றுகிறது சாமி! உள்ளூர் செய்திகளுக்கு வாருங்கள்” என்றேன் நான். “பிஜேபி கட்சியில் மாநில தலைவர் தேர்தலுக்கு முன்பாக நடந்து முடிந்துள்ள மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல்களில் கட்சிக்குள் கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தி உள்ளதாக பிஜேபி கட்சியினரே தெரிவிக்கிறார்கள். எவ்வாறு இருப்பினும் ஓரிரு நாளில் மாநிலத் தலைவர் பதவியை பிடிக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும். காங்கிரஸ் கட்சி டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயை நோக்கி அம்பு விட்டுருப்பது மாநில ஆளும் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கிறது. நீதிபதிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? என்று சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது. சமீபத்தில் திருச்செங்கோட்டில் பேசிய பிஜேபி மாநில தலைவர் இலவசங்கள் கொடுப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆனால், பிஜேபி கட்சியே டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இலவசங்கள் வழங்குவதற்கான வாக்குறுதியை நீண்ட பட்டியலாக வழங்கியுள்ளது சாமி” என்றேன் நான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி பாணியில் தலையாட்டிவிட்டு அடுத்த செய்திக்கு தாவினார் வாக்காளர் சாமி.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ் தொடர்கிறது)
“மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சம்பளம் கொடுப்பது, செலவுகளை செய்வது எல்லாம் நாங்கள். மாநில சட்டமன்றங்கள் இயற்றிய சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஏன் ஆளுநர் தொடர வேண்டும்? நாங்கள் பணம் கொடுக்கும் நிறுவனங்களில் ஏன் துணைவேந்தரை ஆளுநர் நியமிக்க வேண்டும்? என்ற முழக்கத்தை இந்தியாவும் முழுவதும் கொண்டு சென்றுள்ளார் தமிழக முதலமைச்சர். தமிழகத்தில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்ற தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது போல நேற்று கேரளா சட்டமன்றத்திலும் இயற்றப்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“அஇஅதிமுக தலைமைக்கு மத்தியில் இருந்தும் இரண்டாம் கட்ட தலைவர்களிடமிருந்தும் நெருக்கடி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை அவர் எப்படி கையாள்வார்? 2026 சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலை ஏற்படும்? என்று அக்கட்சியின் தொண்டர்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளார்கள். அதே சமயத்தில் ஓபிஎஸ் பக்கம் உள்ள வைத்தியலிங்கத்தின் ரூபாய் 100 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது ஓபிஎஸ் அணியினரையும் கடுமையாக திகிலடைய செய்துள்ளது. சசிகலாவும் தினகரனும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரிய அரசியலை செய்வதாகவும் தெரியவில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“சீமான் இலங்கைக்கு சென்று பிரபாகருடன் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படும் புகைப்படம் போட்டோ ஷாப்பிங் மூலம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்ற அதனை எடிட் செய்தவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஏன் காவல்துறை இவ்வாறு கூறியவரை அழைத்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தக்கூடாது? என்றார் வாக்காளர் சாமி
“பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அங்குள்ள கிராம மக்களை சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதோ தேர்தல் பிரச்சாரம் மூலம் வாகனத்தில் சென்று உரையாற்றி வந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது இன்னும் அவர் மக்களோடு மக்களாக கலந்து அரசியல் செய்ய தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.” என்றேன் நான்.
“லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளதை ஆளுநர் விரும்பவில்லை என்றாலும் முழுமையான சட்டம் நடைமுறைகளை பின்பற்றி நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையிலும் அவர் உறுதியாக உள்ளார். இந்நிலையில் முழுமையாக சட்ட நடைமுறைகள் முடிந்து விட்டதாக கருதி விரைவில் நியமன உத்தரவுகளை இந்த பதவிகளுக்கு பிறப்பிக்க கூடும் என்று கருதப்படுகிறது” எனக் கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
“நுகர்வோர் பூங்கா” படிக்க இங்கே தொடுங்கள்! (Click here)
பூங்கா இதழ் நுகர்வோர் பூங்கா வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்! இணைய இங்கே தொடவும். Click Here!
எங்களது வெளியீடுகள் (Our Current and Upcoming publication) – இதழ்களின் பெயரை தொட்டால் இதழ்களின் இணையதளத்துக்கு செல்லலாம் (Click the heading of journals, see the concern website) |
வெகுஜன வெளியீடுகள் (Popular Park) |
நுகர்வோர் பூங்கா (தமிழ்) – இணைய இதழ் |
நுகர்வோர் பூங்கா (ஆங்கிலம்) – இணைய இதழ் |
பூங்கா இதழ் (தமிழ்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் (ஆங்கிலம்) – இணைய இதழ் |
தி நியூஸ் பார்க் மொபைல் பயன்பாடு (Mobile App) – soon |
ஆராய்ச்சி வெளியீடுகள் (Research Park) |
சட்டம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி இதழ் |
சர்வதேச நிறுவனங்கள், அரசியலமைப்பு சட்டம், ஆட்சியியல் ஆராய்ச்சி இதழ் |
குற்றங்கள், விபத்துகள், குற்றவியல் சட்டம், பாதிக்கப்பட்டோரியல் ஆராய்ச்சி இதழ் |
அமைதி உத்திகள் மற்றும் ஆராய்ச்சி இதழ் |
விண்வெளி, கடல், ஆகாயம் ஆராய்ச்சி இதழ் |
வாக்காளரியல் (Voterology) ஆராய்ச்சி இதழ் |