Advertisement

அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான அவசியம் தற்போது இல்லை

அரிஸ்டாட்டிலின் அரசியலமைப்பு குறித்த கருத்து என்னவெனில் “அரசியலமைப்பு என்பது அரசு தனக்குத் தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை”.  ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு அரசியலமைப்பை வகுத்துக் கொண்டுள்ளது. இந்த அரசியலமைப்புதான் சட்டம் இயற்றும் அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பாராளுமன்ற முறை அமைப்பு இருக்க வேண்டுமா? அல்லது அதிபர் ஆட்சி முறை இருக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது வகையிலான ஆட்சி முறை இருக்க வேண்டுமா? என்பதையும்   கூட்டாட்சி அரசாங்கமாக இருக்க வேண்டுமா? அல்லது ஒற்றையாட்சி முறை அரசாங்கமாக இருக்க வேண்டுமா? என்பதையும் நீதித்துறையின் அமைப்பையும் தீர்மானிக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த  பேராசிரியர் டைசியின் கூற்றுப்படி, அரசியலமைப்பு என்பது இறையாண்மையின் விநியோகம் மற்றும் பயன்பாட்டை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் விதிகளின் கலவையாகும். பாராளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு இங்கிலாந்து தாயகமாக விளங்குகிறது.  அதிபர் ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டாக அமெரிக்க அரசியலமைப்பு  திகழ்கிறது. கூட்டாட்சி முறைக்கு சிறந்த உதாரணமாக கனடா அரசியலமைப்பும் ஒற்றையாட்சி முறைக்கு சிறந்த உதாரணமாக பிரான்ஸ்  அரசியலமைப்பும் உள்ளன. 

எழுதப்படாத அரசியலமைப்பு செயல்படும் நாடாக இங்கிலாந்து உள்ளது. அரசியலமைப்பை திருத்த மிகக் கடினமான   நடைமுறைகளைக் கொண்ட அரசியலமைப்பாக அமெரிக்காவின் அரசியலமைப்பு உள்ளது.  சில நாடுகளில் எளிதாக  அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வகையிலான அரசியலமைப்புகள் உள்ளன. இந்தியாவில் மூன்று வகையான முறைகளில்   அரசியலமைப்பை திருத்தம் செய்ய தற்போது உள்ள அரசியலமைப்பு வழி வகுத்துள்ளது.

எந்த வகையான அரசியலமைப்பு ஒரு நாட்டில் அமலில் இருந்தாலும் அரசியலமைப்புதான் நாட்டின் இயற்றப்படும் சட்டங்களுக்கெல்லாம் தாய் அமைப்பாகும். அரசியலமைப்பு நாட்டின் முதன்மையான சட்டமாகும். அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவது செல்லத்தக்கதல்ல.

அரசியலமைப்பை மாற்றுவது என்பது திருத்தங்கள் (amendment) மூலம் மாற்றங்களை செய்வது அல்லது முற்றிலுமாக அரசியலமைப்பை நீக்கிவிட்டு (replacement) புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அல்லது திருத்தங்கள் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களை அரசியலமைப்பில் இணைத்து (integration) புதிய அரசியலமைப்பை வரையறுப்பது போன்றவை மூலமாக நிகழ்கிறது.

அமலில் உள்ள அரசியலமைப்பை தூக்கி எறிந்து விட்டு முற்றிலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது ஒரு நாட்டில் புரட்சி (revolution) ஏற்பட்டு   மாற்றம் ஏற்படும் போதும் அடிமை நாடாக இருக்கும் ஒரு நாடு விடுதலை (freedom) அடையும் போதும் அல்லது முற்றிலும் புதிய சூழல் (new environment) ஏற்பட்டு புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற நிலை ஏற்படும் போதும் புதிய நாடு (creation of new country) உருவாகும் போதும் நடைபெறுகிறது.

பல சிறிய ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.      இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் மூன்று முறை அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. பல நாடுகளில் நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அரசியல் அமைப்பு நிலைத்து நிற்கிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பின் முக்கிய உள்ளடக்கங்கள் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றன.  இருப்பினும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கம் எந்த நேரத்திலும் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஒத்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்புகள் மாறாமல் இருக்க முடியாது, அவை அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பிற சூழலில் ஏற்படும் ஆழமான மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலமைப்பை மாற்ற வேண்டிய சூழல் தற்போது எதுவும் இல்லை என்பதுதான் தற்போதைய  நிலவரமாகும். அமலில் உள்ள அரசியலமைப்பை பாதுகாப்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles