Advertisement

இளங்கலை (பி. ஏ.,) படித்தாலும் சாதிக்கலாம்!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் காலடி பதிக்க விண்ணப்பம் செய்ய தொடங்கி விட்டனர். ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குறிப்பிட்ட பாடத்தை படித்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது சரியானது அல்ல. படிக்காதவர்களும் மேதைகளாக உருவான நாடு இந்தியா. பட்டப்படிப்பில்   இளங்கலை (B.A.,) பட்டத்தை   மட்டும் பெற்று சாதனை படைத்தோர் பலர் உண்டு.

பொருளாதாரம்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் பொருளாதார (Economics) பிரிவு படிக்கும் மாணவர்கள் சிறந்த பொருளாதார நிபுணர்களாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை பொருளாதாரம் (M.A., Economics), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம்.   பொருளாதார பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தேசிய அளவில்   பொருளாதார சேவை (Indian economic services) போட்டி தேர்வுகள் மூலம் இந்திய ஆட்சிப் பணிக்கு (I.A.S.,) இணையான பதவிகளை பெற வாய்ப்புண்டு. பொருளாதார நிபுணத்துவம் இல்லாத எந்த ஒரு நாடும் வெற்றி அடைந்ததாக சரித்திரம் கிடையாது.

பொது நிர்வாகம்

இளங்கலை (B.A.,) பட்ட படிப்பில் பொது நிர்வாகம் (Public Administration) மற்றும் அரசியல் அறிவியல் (Political Science) பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் குடிமை தேர்வுகளில் (Civil Service) வெற்றி பெறுவதற்கான அறிவாற்றலை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை (M.A.,), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம்.   அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் ஆகிய துறைகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஜனநாயக நாடுகளின் மக்களாட்சி தத்துவத்திற்கு உறுதுணையாக இருக்கும். 

சரித்திரம்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் சரித்திர (History) பிரிவு படிக்கும் மாணவர்கள் பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு (competitive examinations) தயாராக உரிய நேரமும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இந்த படிப்பை முடித்துவிட்டு முதுகலை (M.A.,), முதுநிலை வணிக மேலாண்மை (M.B.A.,) உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம்.   வரலாற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு நாட்டின் வளர்ச்சியை காண இயலாது.

மொழி பாடங்கள்

இளங்கலை (தமிழ் ), இளங்கலை (ஆங்கிலம்), இளங்கலை (இந்தி), இளங்கலை (வெளிநாட்டு மொழிகள்) போன்ற படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளிலும் மற்ற   வகைகளிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு பத்திரிக்கை துறையிலும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகத்துறைகளும் சாதனை படைக்க வாய்ப்புகள் உள்ளது ஆசிரியர் பணிக்கும் மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. இளங்கலையில் வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் (Translators) பதவிகள் பெற வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு மொழிகளின் மொழிபெயர்ப்பாளர்கள் பணிகளுக்கு மிகுந்த பற்றாக்குறை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொழிப்பாட படிப்புகள் சிறந்த எழுத்தாளர்களையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

இதழியல்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் இதழியல் (Journalism) பிரிவு படிக்கும் மாணவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெறுவதோடு விளம்பரம் (Advertising), மக்கள் உறவியல் (Public relations), பொதுமக்கள் தொடர்பு (Mass Communication) போன்ற துறைகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.  இந்தப் பாடப்பிரிவு சிறந்த எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கும் வாய்ப்பாக அமையும்.

குற்றவியல்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் குற்றவியல் (Criminology) பிரிவு தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதனைப் படித்து முடித்துவிட்டு முதுகலை குற்றவியல், காவல் அறிவியல்,  காவல் நிர்வாகம், தடய அறிவியல் (Forensic Science) போன்ற படிப்புகளை படிக்கலாம்.  மேலை நாடுகளில் இந்த படிப்பு அதிக  முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.  இதனை படிப்பவர்கள் பலர் இந்திய காவல் பணியில் (I.P.S.,) அல்லது காவல்துறையில் அலுவலர்களாக சேர விரும்புகின்றனர்.

ராணுவ உத்திகள்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் ராணுவ உத்திகள் (Defence Strategies) பிரிவு தமிழகத்தில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் உயர் பதவிகளுக்கு நேரடியாக இணைய விருப்பம் உள்ளவர்களும் ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களும் தேர்வு செய்வதில் முக்கியமான பிரிவாக இளங்கலை ராணுவ உத்திகள் பட்ட படிப்பு உள்ளது.

சமூகவியல்

இளங்கலை (B.A.,) பட்டப்படிப்பில் சமூகவியல் (Sociology) மற்றும் சமூகப்பணி (Social Work) பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கு அரசிலும் தன்னார்வ நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. தன்னார்வ அமைப்புகளை உருவாக்கி சிறந்த சமூக பங்களிப்பை  வழங்கும் வாய்ப்புகளை இந்த படிப்பு வழங்குகிறது.

இன்னும்

இளங்கலை பட்டப்படிப்பில் புவியியல் (Geography), நுண்கலை (Fine Arts), உளவியல் (Psychology), சுற்றுலா (Tourism) போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இளங்கலை படிப்புகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது. இளங்கலை பட்ட படிப்பை படிக்கும் போதே மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடத்தப்படும் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம்.  இளங்கலை படிப்பை படிக்கும் போதே  ஏ.சி.எஸ்., (Company Secretaryship) ஐ.சி.டபிள்யூ.ஏ., (Cost Accountant) சி. ஏ., (Auditor) போன்ற படிப்புகளை பயிலும் மாணவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தலைமை பண்பை உருவாக்கும் தன்மை கொண்ட இளங்கலை படிப்புகளை படித்து பல்வேறு சாதனைகளை படைக்கலாம் – வாழ்வில் வெற்றிகளும் பெறலாம் என்பதில் மாற்றமில்லை.

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles