Advertisement

போரில்லா உலகம் வேண்டும் என முழங்கும் செஞ்சிலுவைச் சங்கம்

சீன் ஹென்றி டியுனன்ட் ஸ்விட்சர்லாந்தின் தலைநகரமான ஜெனிவாவில் 1828 ஆண்டு மே 8 ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது 26 வது வயதில் வட ஆப்பிரிக்கா மற்றும் சிசிலி நாடுகளில் உள்ள ஒரு வணிக  நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் பின்பு அல்ஜீரியா நிதி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டார். அந்த நிறுவனத்தால் வாங்கப்பட்ட நிலத்திற்கு தண்ணீர் வசதி கேட்டு அப்போது பிரஞ்சு மன்னராக இருந்த மூன்றாம் நெப்போலியனை சந்திக்க பயணித்தபோது  1859 ஜூன் 24 ஆம் தேதி சால்பரினோ என்ற இடத்தில அவர் தங்க நேர்ந்தது. அங்கு ஆஸ்திரிய சார்டீனிய  படைகளுக்கிடையில் 15 மணி நேரம் நடந்த போரில் இரண்டு தரப்பிலும்  சுமார் 40 ஆயிரம் பேர் போர்க்களத்தில் குற்றுயிராகக் கிடந்தனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்க யாரும் இல்லை. டியுனன்ட் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயம்பட்டிருந்த அனைவரும் நம் சகோதரர்கள் என்று கூறி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

ஜெனிவாவுக்குத் திரும்பிய பின் டியுனான்டுக்கு சால்பரினோ போர்க்கள காட்சிகள் அடிக்கடி நினைவுக்கு வந்தது. இது போன்ற நிகழ்வு இப் பூமியில் மீண்டும் தொடரக் கூடாது என்பதற்காக போரில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தனி அமைப்பு தேவை என்பதையும் வலியுறுத்தி 1862-ல் சால்பரினோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் கருத்தாழத்தால் கவரப்பெற்று ஜெனிவா பொது நல சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான   கெஸ்டவ் மாய்னியர் என்பார்   1963 பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த நோக்கங்களைக் கொண்ட சர்வதேச அமைப்பை தோற்றுவிக்க டியுனன்ட் உள்ளடக்கிய ஐவர்   குழுவை அமைத்தார்.  இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் செஞ்சிலுவை சங்கமாகும்.

டியுனன்ட்  . தனது சொந்த செலவில் பல நாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும்  சந்தித்து மனித நேய சர்வதேச அமைப்பு ஏற்படுத்துவதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.  1863 அக்டோபர் 26 முதல் 29 வரை நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 39 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறுதான் மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரத் தன்மை, தொண்டு புரிதல், ஒற்றுமை, உலகளாவிய   வியாபகத் தன்மை ஆகிய ஏழு கடமைகளை கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 1863 ஆம் ஆண்டில் உருவானது.

1863 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டின் நோக்கங்களால் கவரப்பட்ட ஸ்விட்சர்லாந்து அரசு  1864-ல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் 12 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடை நடத்தியது. இக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்க கொடியாக வெண்மைப் பின்புறத்தில் சிவப்பு நிற சிலுவை அடையாளம் கொண்ட கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.  போர்க்காலத்தில் காயம்பட்டவர்களுக்கு மனித நேயத்துடன் உதவுவது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது. 

1874 ஆம் ஆண்டுக்குள் 22 ஐரோப்பிய நாடுகளில் செஞ்சிலுவை சங்கம் உதயமானது. 1876ல் துருக்கியில் நடைபெற்ற போரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் செஞ்சிலுவை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. சிலுவை அடையாளம் தங்கள் மதத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்று கூறி இஸ்லாமிய நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தின் பெயரை செம்பிறை சங்கம் என மாற்றின.  

இவ்வாறாக 1864 முதல் 1914 வரை செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society) மற்றும் செம்பிறை சங்க அமைப்புகள் (Red Crescent Society) உலகில் எங்கெங்கு போர் நடந்தாலும் அங்கெல்லாம் தங்கள் சேவையை சிறப்பாகச் செய்து வந்தன. 1922 -ல் செக்கோஸ்லவாக்கியாவில் போர் நடந்து கொண்டிருந்த போது ஈஸ்டர் திருநாளுக்காக 3 நாட்கள் போரை நிறுத்த வேண்டுமென செஞ்சிலுவை சங்கத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று போரும் நிறுத்தப்பட்டது. 

1948-ல் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த சீன் ஹென்றி டியுனான்ட் பிறந்த தினமான மே 8 ஆம் தேதியை செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்க தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மே எட்டாம் தேதி அன்று செஞ்சிலுவை தினத்தை உலகம் கொண்டாடி வருகிறது. தற்போது  போர்க்களத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பொறுப்பையும் இச்சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. போரில் காயம் பட்டவர்கள், போர்க்கைதிகள் குறித்த விவரங்களை செஞ்சிலுவை சங்க அமைப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசாங்கங்கள் வழங்கிட வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செஞ்சிலுவை சங்கம் வழங்கவும் அனைத்து நாடுகளும்  ஒத்துக்  கொண்டது. 

போரில் காணாமல் போனவர்களை கண்டறிந்து அவர்களின் குடும்பங்களோடு இணைக்கும் பொறுப்பையும் போர் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள திறந்த நிலை கடிதப் போக்குவரத்தையும் இச்சங்கம் செயல் படுத்தி வருகிறது. இது போக உலகில் நடந்த பல இயற்கைப் பேரழிவுகள் மற்றும்  பெருந்தொற்று காலங்களில் இச்சங்கத்தின் பணி அனைவராலும் பாராட்டப் பட்டது.

முதலாம் உலகப்போரின் போது பாதிக்கப்பட்ட போர்  வீரர்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி சிகிச்சையினை  பிரிட்டானிய செஞ்சிலுவை சங்கமும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பும் இணைந்து வழங்கியது. இதனை அப்போது வைஸ்ராய் கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சர் கிளாட் ஹில் ஒருங்கிணைத்தார். முதலாம் உலகப் போர் முடிந்ததும் 1920 மார்ச் 17 அன்று இயற்றப்பட்ட  நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது. 

தற்போது இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொளரவ பதவி வழி தலைவராக இந்திய குடியரசுத் தலைவரும் மாநில செஞ்சிலுவை சங்கங்களின் பதவி வழி தலைவர்களாக மாநில ஆளுநர்களும் மாவட்ட சங்கங்களின் பதவி வழி தலைவர்களாக  மாவட்ட ஆட்சியர்களும்  உள்ளனர். (கட்டுரையாளர், முன்னாள் துணைத் தலைவர் , தமிழ் நாடு மாநில செஞ்சிலுவை சங்க கிளை)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles