Advertisement

உச்ச நீதிமன்ற தீர்ப்பு:  வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது…. மருத்துவர்கள் மீது ….? நீதிமன்றம் நியமித்த அமிகஸ் கியூரியின் வழக்கறிஞர்களுக்கு எதிரான கருத்து நிராகரிப்பு … விரிவான விவரங்கள்

டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றுபவரின் மீது அவரது கட்சிக்காரரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் என அழைக்கப்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழக்கறிஞர்களின் சேவை குறைபாடுகளை குறித்து விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று (in consumer complaint) தீர்ப்பளித்தது (1998).

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் (first appeal) வழக்கறிஞர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின்   வரையறைக்குள் வருவதில்லை என தீர்மானிக்கப்பட்டது (2006).

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் தீர்ப்பு அளித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழக்கறிஞர்களின் சேவை குறைபாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் நுகர்வோர் ஆணையங்களுக்கு   உண்டு என்று (in revision) தீர்ப்பளித்தது.

வழக்கறிஞர்களும் நுகர்வோர் ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டவர்கள் என்ற தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்   இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய பார் கவுன்சில் உள்ளிட்டோர்  மேல்முறையீடு (civil appeal) தாக்கல்  செய்திருந்தனர். மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (14-05-2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் திரு. நரேந்தர் ஹூடா, திரு. குரு கிருஷ்ண குமார், திரு. மனோஜ் ஸ்வரூப், திரு.மனன் மிஸ்ரா, திரு. ஜெய்தீப் குப்தா, திரு. சேகர் நபாடே, திரு. விகாஸ் சிங் மற்றும்   திரு. டி.கே. சர்மா ஆகியோர் வழக்கறிஞர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க தக்கவர்கள் அல்ல என்ற வாதத்தை விரிவாக முன் வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையில்  உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக அமிகஸ் கியூரியாக (Amicus Curiae) மூத்த வழக்கறிஞர் திரு. வி. கிரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது அமிகஸ் கியூரி முன்வைத்த வாதம் பின்வருமாறு. “வழக்கறிஞர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதலாவது வகை வழக்கறிஞர்கள் எவரெனில் கட்சிக்காரர்களால் வக்காலத்து மூலம் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் வழக்கு நடத்துவதற்காக நியமனம் செய்யப்படுபவர்கள். இரண்டாவது வகை வழக்கறிஞர்கள் எவரெனில் நீதிமன்றத்துக்கு வெளியில் சட்ட கருத்துரை (legal opinion)   வழங்கும் மற்றும் தேவையான வரைவுகளை (drafting) தயாரித்து வழங்கும் வழக்கறிஞர்கள். இதில் முதலாவது வகை வழக்கறிஞர்களை சேவை வழங்குபவர்களாக கருதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர இயலாது.  இரண்டாவது வகை வழக்கறிஞர்களை சேவை வழங்குபவர்களாக கருதி நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விசாரணைக்கு கீழ் உட்படுத்தலாம்”.  இரண்டாவது வகை வழக்கறிஞர்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழ் கொண்டு வரலாம் என்ற வாதத்தை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்   மூன்று   கேள்விகளை எழுப்பி பதிலளித்துள்ளது. (1) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கிய பாராளுமன்றம் தொழில் முறை வல்லுனர்களை (Professionals) அல்லது தொழில் முறை வல்லுநர்கள் வழங்கும் சேவைகளை (service provide by professionals) நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர எண்ணியதா? (2)  சட்ட தொழில் தனித்துவம் வாய்ந்ததா? (3)  நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விலக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட சேவைக்கான ஒப்பந்தம் (personal contract service) என்ற பிரிவில் வழக்கறிஞர்களின் சேவை உள்ளதா?

ஒரு பொருளின் உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களும் ஒரு பொருள் தொடர்பான சேவை வழங்குபவர்களும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை மேற்கொள்ளக் கூடாது  என்ற எண்ணத்தில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியுள்ளது. மாறாக வணிகர்கள் வழங்கும் சேவை  வழக்கறிஞர்கள் வழங்கும் சேவைக்கு இணையாக கருத இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள் வழங்கும்  சேவைகளில் நடத்தை குறைபாடு (professional misconduct), தொழில்  தர்மத்தை தவறுதல் (professional ethics) போன்ற நிலைகளில் அதனை விசாரிக்க பார் கவுன்சில்கள், மெடிக்கல் கவுன்சில்கள் போன்றவை உள்ளன. இந்நிலையில் சட்டத்தை  உருவாக்கியவர்களால் (legislature) தொழில்முறை வல்லுநர்கள் (professionals) மீதான குற்றச்சாட்டுகள் நுகர்வோர் சட்ட வரையறைக்குள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் (intention) கொண்டுவரப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தீர்மானித்துள்ளது.

வழக்கறிஞர் தொழிலை மற்ற தொழிலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்பதோடு நீதிமன்றத்திற்கும் எதிர் தரப்பினருக்கும் கடமைப்பட்டவர்களாகவும் விளங்குகிறார்கள் என்றும் வழக்கறிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்ற நிலையில் இத்தகைய தொழில் புரிபவர்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேவை குறைபாட்டிற்காக விசாரிக்க இயலாது என்றும் அமெரிக்காவில் சில மாகாணங்களிலும்  ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்   விசாரிக்கப்படுவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் தொழில் மற்ற தொழில்களை காட்டிலும் வேறுபட்டது என்றும் இத்தொழிலை தனி நபர்களின் தொழிலாக பார்க்க கூடாது என்றும் நீதி நிர்வாகத்தின் (administration of justice) பங்களிப்பாகவே பார்க்க இயலும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் தொழில் தனித்துவம் மிக்கது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சேவை என்பதற்கு வரையறை வழங்கப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட சேவை  ஒப்பந்தத்திற்கு விலக்கு (personal contract service) வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களுக்கு வழங்கும் சேவை என்பது தனிப்பட்ட ஒப்பந்தம் என்பதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை என்பதிலிருந்து விலக்கு  வழக்கறிஞர்களால் வழங்கப்படும் சேவைக்கு உள்ளது என்றும் இதனால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேவை குறைபாடு (deficiency of service) என்ற குற்றச்சாட்டுக்கு வழக்கறிஞர்களை உள்ளாக்க முடியாது என்றும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய மூன்று கேள்விகளுக்கும் வழக்கறிஞர்களுக்கு சாதகமாக பதில்களை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் இறுதியாக வழக்கறிஞர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வது நிலை நிற்கத்தக்கதல்ல (not maintainable) என்று கூறி  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஆணையிட்டுள்ளது.

தொழில்முறை வல்லுனர்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என  கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மருத்துவர்கள்  மீதும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சேவை குறைபாடு தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வது சரியானது அல்ல  என்ற கருத்தையும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் முன்மொழிந்துள்ளது. 

இந்திய மருத்துவம் சங்கம் //எதிராக// வி.பி. சாந்தா & மற்றவர்கள்( Indian Medical Association vs. V.P. Shantha & Others – (1995) 6 SCC 651) என்ற வழக்கில் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் மருத்துவர்கள் மீது சேவை குறைபாட்டிற்காக – மருத்துவ அலட்சியத்துக்காக நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்ற தீர்ப்பை அதிக நீதிபதிகள் (larger bench) அடங்கிய   அமர்வில் மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை   இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அதே சமயத்தில் தொழில் முறை வல்லுனர்கள் மீது எவ்வித வழக்கும் தாக்கல் செய்யக்கூடாது என்ற கருத்தை தாங்கள் முன்மொழியவில்லை என்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும் தகுந்த அமைப்புகளில் அல்லது நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தடை ஏதும் இல்லை என்றும் தீர்ப்பில்   நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு அனைத்து தரப்பு வழக்கறிஞர்களாலும் வரவேற்கப்படும் நிலையில்   மக்கள் மத்தியில் சில அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles