கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறுமாறு நடைபெறும் தமிழக வழக்கறிஞர்களின் போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நீதிமன்றங்களை முடங்கச் செய்துள்ளது. இச்சூழலில் மூன்று கேள்விகளுக்கு பதில் காண வேண்டியது அவசியமாக உள்ளது.
1. தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெறுவது ஏன்?
2. போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கூறும் காரணம் என்ன?
3. போராட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டா?
தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெறுவது ஏன்?
வழக்கறிஞர்களின் சங்கங்கள் நடத்தும் போராட்டங்களை இரண்டு வகையாக பார்க்கலாம். முதலாவதாக, வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு, நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றிற்கான போராட்டம். இரண்டாவதாக, புதிதாக கொண்டுவரப்படும் சட்டங்கள் அல்லது சட்ட திருத்தங்கள் சமூக அக்கரைக்கு எதிரானதாக அல்லது வழக்கறிஞர் நலனுக்கு எதிரானதாக அமையும் போது ஏற்படும் போராட்டம்.
முதலாவது வகை போராட்டத்தை எடுத்துக் கொண்டால் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்படும் பிரச்சனை, நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சனை, வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது ஏற்படும் சூழல் போன்ற போராட்டங்களை கூறலாம். இரண்டாவது வகை போராட்டத்துக்கு உதாரணமாக, கடந்த 2002 ஆம் ஆண்டு சிவில் நடைமுறை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மக்களுக்கு எதிராக அமையும் என்று நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை கூறலாம்.
இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒன்று அல்லது மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கங்களை இணைத்து தமிழக மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு (Federation), தமிழக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAC) ஆகியன செயல்படுகின்றன. இதனால், இந்த மாநில அமைப்புகள் இரண்டும் அறைகூவல் விடுத்தால் தமிழக முழுவதும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் போராட்டத்தில் இணைகின்றன.
வழக்கறிஞர்கள் சங்கங்கள் என்பவை சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருவனாகும். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இவ்வாறு தனித்தனியாக செயல்படும் வழக்கறிஞர்கள் சங்கங்களை இணைத்து மாநில அளவிலான அமைப்பு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. மாநில அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஒருங்கிணைப்பு இல்லை. இதன் காரணமாக வழக்கறிஞர்களின் பிரச்சனைகளிலும் சரி, சட்டங்களை சமூக வளர்ச்சிக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டிலும் சரி, மாநிலம் முழுவதும் போராட்டத்தை மற்ற மாநில வழக்கறிஞர்களால் நடத்த இயலவில்லை. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படும் இரு பெரும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் அமைப்புகளும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன. தற்போது ஏன் தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெறுகிறது என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கூறும் காரணம் என்ன?
நடைபெறும் போராட்டத்துக்கான காரணங்களை தமிழகத்தில் உள்ள இரண்டு மாநில வழக்கறிஞர்கள் அமைப்புகளும் கூறும் காரணங்கள் என்னவெனில், முதலாவதாக, பல மொழிகள் பேசும் இந்தியாவில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மூன்று சட்டங்களின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. இரண்டாவதாக, இந்தச் சட்டங்களில் அரசுக்கு எதிரான குற்றங்களை காவல்துறையினர் சுமத்தும் போது குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். (முன்பு குற்றம் சாட்டும் காவல்துறை குற்றத்தை நிரூபிக்க வேண்டும்). மூன்றாவதாக, வழக்கறிஞர்களிடம் அவர்களது கட்சிக்காரர்கள் தெரிவிக்கும் சங்கதிகளை காவல் துறையினர் கேட்டால் தெரிவிக்க வேண்டும். இதைப் போலவே, மருத்துவர்களுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. (முன்பு வழக்கறிஞர்களிடம் மருத்துவர்களிடம் அவர்களது வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் சங்கதிகளை ரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை இருந்தது).
போராட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டா?
பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று அரசு இதழில் வெளிவந்து நடைமுறைக்கு கொண்டு வந்த பின்னர் இயற்றப்பட்ட சட்டத்தை நிறுத்தி வைக்க இயலுமா? என்பது முக்கியமான கேள்வியாகும். சட்டம் இயற்றப்பட்ட பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் சுதந்திரம் பெற்ற பின்னர் தற்போது வரை பல உள்ளன. சமீபத்திய உதாரணமாக மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றம் இயற்றிய பின்னர் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய போது சட்டத்தை நிறுத்தி வைத்தது நினைவு இருக்கலாம்.
எந்த மாநிலங்களிலும் போராட்டம் நடைபெறாத நிலையில் தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றால் சட்டம் நிறுத்தி வைக்க வாய்ப்பு உண்டா? என்பது அடுத்த கேள்வியாகும். வழக்கறிஞர்களின் போராட்டத்தை மக்களின் போராட்டமாகவும் அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டமாகவும் மற்ற மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர்களை இணைக்கும் போராட்டமாகவும் மாற்றும் சூழலில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டத்தின் காரணங்களை விளக்க வேண்டிய கடமை இரண்டு வழக்கறிஞர்கள் அமைப்புகளுக்கும் உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் முற்றிலும் மூன்று சட்டங்களும் திரும்ப பெறப்படுமா? என்ற அடுத்த கேள்வியை பார்க்கும் போது ஆட்சேபணைக்குரிய பகுதிகளை மட்டும் நிறுத்தி வைக்க பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால், இத்தகைய சூழ்நிலையை அமைய செய்வது வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரின் கைகளில் உள்ளது. இத்தகைய சூழ்நிலை உருவாக தமிழகத்தில் உள்ள இரண்டு மாநில வழக்கறிஞர்கள் அமைப்புகளும் டெல்லியில் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை வழிநடத்துவதிலும் கையாளுவதிலும் உள்ள அம்சங்களை பொறுத்தே வருங்காலத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பான முதல் பகுதி கட்டுரையை படித்து அறிந்து கொள்ள https://thenewspark.in/advocates-strike-in-tamilnadu/