தமிழகத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். சட்டப்படிப்பு முடித்தவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்வது மற்றும் வழக்கறிஞர்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பது போன்றவற்றிற்கு சட்டபூர்வமான அமைப்பாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். முதலாவதாக, சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக தொழில் புரிபவர்களின் நலன்களுக்காக செயல்படும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், உயர் நீதிமன்ற மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். இரண்டாவதாக, சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றங்கள், எழும்பூர் வளாக நீதிமன்றங்கள், ஜார்ஜ் டவுன் வளாக நீதிமன்றங்கள் உள்ளிட்ட சென்னை மாநகரில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் செயல்படும் வழக்கறிஞர்கள் சங்கங்கள், மூன்றாவதாக, தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் செயல்படும் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் தாலுகாக்களில் செயல்படும் கிழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் (District and Subordinate Courts Bar Association at district headquarters ad taluk headquarters) ஆகியனவாகும்.
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களிலும் செயல்படும் மாவட்ட நீதிமன்ற மற்றும் கிழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளார்கள். சில மாவட்டங்களிலும் சில தாலுகாக்களிலும் வழக்கறிஞர்கள் ஒரே சங்கமாக செயல்பட்டு வருகின்றனர். சில மாவட்டங்களிலும் சில தாலுகாக்களிலும் ஒரே ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் சங்கங்களும் இருந்து வருகின்றன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களை இணைத்து தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர்களின் நலன்களுக்காகவும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது அதில் உள்ள குறைகளை திருத்தவும் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2002 ஆம் ஆண்டில் சிவில் நடைமுறை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை முக்கியமான ஒன்றாக குறிப்பிடலாம். இந்த போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் பணிகளில் தொய்வு ஏற்பட்டு சரிவர செயல்படவில்லை என குற்றம்சாட்டி அதிலிருந்து விலகிய சில தலைவர்கள் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (JAC) தொடங்கினார்கள். இதன் காரணமாக தமிழகத்தின் மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல வழக்கறிஞர்கள் சங்கங்களும் தாலுகாக்களில் செயல்பட்டு வந்த பல வழக்கறிஞர் சங்கங்களும் கூட்டமைப்பிலிருந்து விலகி கூட்டு நடவடிக்கை குழுவில் இணைந்தனர். வழக்கறிஞர்களின் கூட்டு நடவடிக்கை குழுவும் வழக்கறிஞர்களின் நலன்களுக்காகவும் புதிதாக கொண்டுவரப்படும் சட்டங்கள் பொதுமக்களுக்கு எதிராக இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவும் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் தமிழகத்தின் மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் பல வழக்கறிஞர்கள் கூட்டமைப்பிலும் பல வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவிலும் அங்கம் வகிக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கம் உள்ள மாவட்டங்களிலும் தாலுகாக்கிலும் ஒரு வழக்கறிஞர் சங்கம் கூட்டமைப்பிலும் ஒரு வழக்கறிஞர் சங்கம் கூட்டு நடவடிக்கை குழுவிலும் பிரிந்து இருப்பதாகவே காணப்படுகிறது.
இருந்தபோதிலும் கூட்டமைப்பு வழக்கறிஞர்களை நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் காலத்தில் கூட்டு நடவடிக்கை குழு அவ்வாறான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காவிடிலும் மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் ஒரு சங்கம் கூட்டமைப்பிலும் ஒரு சங்கம் கூட்டு நடவடிக்கை குழுவிலும் இருந்தாலும் கூட்டமைப்பின் கீழ் உள்ள சங்கம் நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி நிற்கும் போது கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள சங்கங்களும் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
இதைப் போலவே, கூட்டு நடவடிக்கை குழு வழக்கறிஞர்களை நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் காலத்தில் கூட்டமைப்பு அவ்வாறான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காவிடிலும் மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் ஒரு சங்கம் கூட்டமைப்பிலும் ஒரு சங்கம் கூட்டு நடவடிக்கை குழுவிலும் இருந்தாலும் கூட்டு நடவடிக்கை குழு கீழ் உள்ள சங்கம் நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி நிற்கும் போது கூட்டமைப்பின் கீழ் உள்ள சங்கங்களும் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் இரண்டு அமைப்புகளில் உள்ள சங்கங்கள் இருந்தாலும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட போராட்டங்களில் எந்த அமைப்பு அழைப்பு விடுத்தாலும் வழக்கறிஞர் சங்கங்கள் ஒன்றாக செயல்படுகின்றன. அதே சமயத்தில் கூட்டமைப்பு அல்லது வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பிலான சங்கங்கள் மட்டுமே இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் கூட்டமைப்பு அல்லது வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு அழைக்கும் போராட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு நிலவுகிறது.
இதன் காரணமாக, மாநில அளவிலான போராட்டங்களை கூட்டமைப்பு மேற்கொள்ளும் போது கூட்டு நடவடிக்கை குழுவின் கீழான சங்கங்கள் மட்டுமே உள்ள மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் வழக்கறிஞர் போராட்டங்கள் நடைபெறுவதில்லை. இதைப்போலவே, மாநில அளவிலான போராட்டங்களை கூட்டு நடவடிக்கை குழு மேற்கொள்ளும் போது கூட்டமைப்பின் கீழான சங்கங்கள் மட்டுமே உள்ள மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் வழக்கறிஞர் போராட்டங்கள் நடைபெறுவதில்லை. இரண்டு வகையான மாநில வழக்கறிஞர்களின் அமைப்பு இருப்பதன் காரணமாக மாநில அளவிலான வழக்கறிஞர் சங்கங்களின் போராட்டங்கள் பிளவுபட்டு நிற்பதாகவே கருத முடிகிறது.
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு அரசு இதழில் வெளியிடப்பட்டு கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம் ஆகியவற்றை எதிர்த்து கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகாக்களிலும் நீதிமன்றங்களில் விசாரணைகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி முதல் நீதிமன்ற பணிகளுக்கு செல்வது என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. ஆனால், வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் போராட்டம் நியாயமானதா? நியாயமற்றதா? என்பதை பற்றி அல்ல இந்த கட்டுரை. இத்தகைய சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவும் வெவ்வேறான முடிவுகளை மேற்கொண்டுள்ளது வழக்கறிஞர்கள் சங்கங்கள் இடையேயான பிளவை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
சட்டங்களை எதிர்ப்பது என்ற கருத்தில் ஒரே நோக்கத்தை கொண்டுள்ள வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது வழக்கறிஞர் சங்கங்களுக்கு மட்டுமல்ல வழக்கறிஞர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது தமிழகத்தில் நிலவும் பழமொழி. ஒற்றுமையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வழக்கறிஞர் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். ஒற்றுமைக்கு என்ன வழிகள் என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.
முதலாவதாக, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவும் ஒன்றாக இணைவது சிறப்பான ஒற்றுமையாக அமையும். இரண்டாவதாக, இரண்டு அமைப்புகளின் ஒன்றிணைப்பு உடனடியாக செயல்படுத்த முடியாத நிலை இருக்குமானால் இரண்டு அமைப்புகளின் தலைவர்களும் மாநில நிர்வாகிகளும் கூட்டுக் கூட்டத்தை நடத்தலாம். இரண்டு அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கலாம். இரண்டு அமைப்புகளும் இணைந்து கூட்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்தி போராட்ட வடிவங்களை முடிவு செய்யலாம். மேற்கண்ட இரண்டு திட்டங்களும் நடைபெற தவறினால் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் தங்களது ஊரில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி ஒரே மாநில அமைப்பின் கீழ் அணி வகுக்க வேண்டும்.
உடனடியாக வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஒரே அமைப்பின் கீழ் இணைவது அல்லது மாநில அமைப்புகள் கூட்டுக் குழுவை உருவாக்கி செயல்படுவது என்ற நிலையை மேற்கொள்ளாவிட்டால் வழக்கறிஞர்களின் ஒற்றுமை கேள்விக்குறியாகிவிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரே ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் இயங்கி வந்தால் அவை தங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துக் கொள்வதும் ஒற்றுமைக்கு மிக அவசியமானதாகும். எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஒற்றுமையா? அல்லது வேற்றுமையா? என்பதை காலம் முடிவு செய்து விடும் என்றே கருதப்படுகிறது. கூட்டமைப்பா? கூட்டு நடவடிக்கை குழுவா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதல்ல வழக்கறிஞர் சங்கங்களிடையே எழுந்துள்ள கேள்வி. ஒற்றுமையா? வேற்றுமையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதுதான் கேள்வியாகும்.