Advertisement

மீண்டும் தேவை அறிவொளி இயக்கம் படித்தவர்களுக்காக. 

“புத்தகம் கையில் எடுத்து விடு,

 அதுவே உன் போர்வாள்”

படி, படி அண்ணே படி, படி,

அக்கா நீயும் படி, படி, 

இப்படி ஒன்றாகவே, நன்றாகவே, 

வென்றாகவே படி, படி,

அடி வேர் தொடங்கி நீ படி, 

உன்னுள் சுடரும் தீப ஒளி.

தமிழகம் முழுவதும் 1990 – களின் தொடக்கத்தில் வீதியெங்கும் ஒலித்த முழக்கங்கள் இவை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்த அறிவொளி இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியாளர்களாலும் தன்னார்வ தொண்டர்களாலும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு வீதிகளிலும் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கை குறைந்து எழுத, படிக்க தெரிந்தவர்களின் சதவீதம் அதிகரித்தது. 

அறிவொளி இயக்கம் நடத்திய வீதிக்கு வீதி எழுத்தறிவு மையங்கள், தெரு, தெருவிற்கு நடத்திய நாடகங்கள், கிராமங்கள் தோறும் நடத்தப்பட்ட கலை விழாக்கள், தமிழகம் முழுவதும் வலம் வந்த எழுத்தறிவு பிரச்சார குழுக்கள் உள்ளிட்டவை படிக்காத முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி எழுத்தறிவை பரப்பியது. அறிவொளி இயக்கத்தை எழுத்தறிவை, படிப்பறிவை வளர்த்த கல்வி புரட்சியாக மதிப்பிடலாம்.

படிக்காதவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவசியத்தால் எழுந்த அறிவொளி இயக்கம் மிகச் சிறந்த பலன்களை வழங்கியது   என்ற நிலையில் தற்போது படித்த மக்களுக்காக மீண்டும் அறிவொளி இயக்கத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது. படித்தவர்களுக்கு எதற்கு அறிவொளி இயக்கம்? அவர்களுக்குத்தான் எழுதப் படிக்க தெரியுமே! தமிழ் எழுத்துக்களை அவர்களுக்கு மீண்டும் சொல்லித்தர வேண்டுமா? என்ற வினாக்கள் உங்கள் முன்பு எழலாம். தற்போது தேவைப்படுவது, படிக்காதவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுத் தருவதற்காக அல்ல. மாறாக, எழுத படிக்கத் தெரிந்த படித்தவர்களிடையே குறைந்து கொண்டிருக்கும் வாசிப்பு பழக்கத்தைதமிழகத்தில் மீள செய்வதற்காகத்தான்.

“தலை குனிந்து எனை வாசித்தால் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைப்பேன் என்கிறது புத்தகம்”. தினசரி செய்தித்தாள்களை படித்தல், பாட புத்தகங்களை படித்தல் மற்றும் இதர அறிவு வளர்க்கும் புத்தகங்களை படித்தல் உள்ளிட்ட வாசிப்பு பழக்கங்கள் தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தினமும் குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது போன்று அன்றாட பணிகளில் ஒன்றாக புத்தக வாசிப்பு இருக்க வேண்டும் வாசிப்பு மனிதனுக்கு அறிவை வளர்ப்பதோடு அவனது வளர்ச்சியை உறுதி செய்கிறது.

தினமும் செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் மொழி அறிவும் பொது அறிவு வளர்ச்சியடைகிறது. ஒரு குறிப்பிட்ட பாடம் அல்லது பொதுவான புத்தகங்களையும் இலக்கியங்களையும் படிப்பதன் மூலம் மனிதனுக்கு அறிவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொண்டவர்களும் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறியவர்களும் சாதனை படைத்தவர்களும் எப்போதும் வாசிப்பை கைவிட்டதில்லை. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் நூலகங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த பழக்கம் தற்போது கொஞ்சம் கொஞ்சம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

வாசிப்பு பழக்கம் மிக அதிகமாக குறைந்து இருப்பதற்கு காரணம் மக்கள் சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடுகளை வளர்த்துக் கொண்டு அதில் நேரத்தை அதிகம் செலவிடுவதுதான். சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்கள் முழுமையாக சரியானதாக இருப்பதில்லை என்று தெரிந்தாலும் கூட சமூக ஊடகங்களில் இருந்து மக்களால் வெளிவர முடிவதில்லை. சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பற்றி தரும்போது முழுமையான, வரலாற்று ரீதியான – பயன்பாட்டு ரீதியிலான தகவல்களை வழங்குவதில்லை. வாசிக்கும் பழக்கத்தின் மூலமே எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் என்பதை சமூக ஊடகங்களுக்கு அடிமையான மக்கள் மறந்து விட்டார்கள். இத்தகைய போக்கு நீடிப்பதன் காரணமாகவே அகில இந்திய அளவிலும் அளவில் நடத்தப்படக்கூடிய போட்டித்   தேர்வுகளில் தமிழக மக்கள் மாணவர்கள் அதிகம் வெற்றியை பெற முடியவில்லை.

வாசிக்கும் பழக்கம் காணாமல் போனால் யோசிக்கும் பழக்கம் காணாமல் போகும். தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பல துறை நிபுணர்களையும் ஆய்வாளர்களையும் வழங்கி உள்ளது. வாசிக்கும் பழக்கம் குறையும்போது நிபுணத்துவம் ஆய்வுத் தன்மையும் குறைய தொடங்கி விடுகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் சமூக வளர்ச்சிக்கான பங்களிப்பு குறைவது என்பது இயல்பானதே. 

தற்போது எளிதாக ஒருவரை ஒரு மணி நேரம் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது நிபுணத்துவத்தையும் அறிவுத்திறனையும் வளர்த்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது அவசியமாக உள்ள நிலையில் வாசிப்பு திறன் குறையும்போது தனி மனிதர்களின் சமூகத்தின் வளர்ச்சியும் குறையும் என்பதை மறுக்க இயலாது இத்தகைய சூழலில் வாசிப்பு திறனை மேம்படுத்த தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் மேற்கொள்வது அவசியமான தருணம் இதுவாகும். வாசிப்பை வளர்ப்போம்! நூலகங்களை அதிகப்படுத்துவோம்! வளர்ச்சியை உறுதி செய்வோம்!

பூங்கா இதழ்
பூங்கா இதழ்https://thenewspark.in
பூங்கா இதழின் படைப்பு

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles