அதிகாலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் கூறி “என்ன சாமி செய்திகள்” என்றதும் கருத்து மூட்டைகளை அவிழ்க்க தொடங்கினார் வாக்காளர் சாமி.
“நியமனங்கள் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லை.. தற்போது உயர்நீதிமன்றம் பச்சை கொடி காட்டி விட்டதால் அடுத்த மாத இறுதிக்குள்ளாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் வாக்காளர் சாமி.
“சாமி! குழந்தைகள் ஆணையத்துக்கு என்ன வேலைகள்? என விளக்கி கூறுங்களேன்” என்றேன் நான். “குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் (children’s homes), பிஞ்சு குழந்தைகளை பாதுகாக்கும் தத்தெடுப்பு மையங்கள் (adoption centres), மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகள் (district child protection units), குழந்தைகள் உள்ள விடுதிகள் (hostels) உள்ளிட்டவற்றை கண்காணிப்பதும் ஆய்வு செய்வதும் குழந்தைகள் திருமண தடுப்பு (child marriage) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு (child labour) உள்ளிட்ட குழந்தைகள் தொடர்பான அனைத்து விவகாரங்களை கண்காணிப்பதும் ஆய்வு செய்வதும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முக்கியமான பணியாகும். கிராம, வட்டா,ர மாவட்ட அளவிலான மற்றும் பேரூராட்சி. நகர மற்றும் மாநகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (child protection councils) வலுப்படுத்துவதும் மாநிலம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை (awareness) ஏற்படுத்துவதும் குழந்தையில் ஆணையத்தின் மற்றொரு முக்கிய பணியாகும். மேலும், குழந்தைகள் உரிமைகள் மீறல் தொடர்பான அனைத்து புகார்களையும் சிவில் நீதிமன்றம் போல விசாரித்து தகுந்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் அதிகாரமும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார் வாக்காளர் சாமி.
“அப்படி எனில் குழந்தைகள் ஆணையத்தில் பல பிரிவுகளும் பணியாளர்களும் இருக்கிறார்களா? சாமி” என்றேன் நான். குழந்தைகள் ஆணையத்தில் நிர்வாகத்தை கவனிக்க தனி பிரிவும் கண்காணிப்பு மற்றும் ஆய்வை மேற்கொள்ள தனிப்பிரிவும் விழிப்புணர்வை ஏற்படுத்த தனி பிரிவு விசாரணைகளுக்கு தனி பிரிவும் இருக்க வேண்டும். உதாரணமாக, தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நிர்வாக பிரிவில் (administration) ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி (district judge) ஒருவர் செயலாளராக (secretary) உள்ளார். வழக்கு விசாரணை பிரிவில் (adjudication) ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர் பதிவாளராக (registrar) உள்ளார். இதை போலவே புலனாய்வு பிரிவில் (investigation) மாவட்ட கண்காணிப்பாளர் (superintendent of police) ஒருவர் இயக்குனராக நியமிக்கப்படுகிறார் ஒவ்வொரு பிரிவின் கீழும் பிரிவு அலுவலர்களும் பணியாளர்களும் உள்ளார்கள். மாநில குழந்தைகள் ஆணையத்திலும் நிர்வாகப் பிரிவு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பிரிவு புலனாய்வு பிரிவு வழக்கு விசாரணை பிரிவு ஆகிய அமைக்கப்பட்டு அதற்கான தனி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்” என்றார் வாக்காளர் சாமி.
“இவ்வாறு உள்கட்ட அமைப்பை ஏற்படுத்தாவிட்டால் அதிகாரங்கள் இருந்தும் எப்படி குழந்தைகள் ஆணையத்தால் செயல்பட முடியும்” சாமி” என்றேன் நான். “தமிழ்நாடு குழந்தைகள் ஆணையம் அமைக்கப்பட்ட போது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அப்போது குழந்தைகள் ஆணையத்திற்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி இந்த ஆணையத்தில் ஒரு செயலாளர் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதலே தனியாக செயலாளர் நியமிக்கப்படாமல் குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் இயக்குனரே இந்த பதவியை வகித்து வந்துள்ளார். அப்போது உருவாக்கப்பட்ட விதிகளின்படி தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான அலுவலர்களை நியமிக்க வழிவகை செய்யப்படவில்லை” என்றார் வாக்காளர் சாமி.
“இதற்கு என்னதான் தீர்வு? சாமி” என்றேன் நான். “பணிகளை சிறப்பாக செய்வதற்கு வசதியாக விதிகளை மாற்ற வேண்டும் என்பதே தீர்வாகும்? இதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த டாக்டர் வீ. ராமராஜ் (Dr V.Ramaraj) அவர்களை மாதிரி விதிகளை (model rules) தயாரித்து சமர்ப்பிக்குமாறு குழந்தைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரும் புதிய மாதிரி விதிகளை தயாரித்து ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதனை அரசுக்கு ஆணையத்தால் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படவில்லை. டாக்டர் வீ. ராமராஜ் அவர்களின் மாதிரி விதிகளை அரசு பரிசீலிக்கலாம்” என்றார் வாக்காளர் சாமி.
“தேசிய குழந்தைகள் உரிமைகள் கமிஷனிலும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக இருந்து வருகிறார்களே? சாமி” என்றேன் நான். அதனை கவனிக்காதது போல அடுத்த செய்திக்கு தாவினார் வாக்காளர் சாமி.
“கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பழனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இந்நிலையில் பழனி மாவட்டத்தை உருவாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதற்கான அறிக்கைகளை மாநில அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடமும் பழனி கோட்டாட்சியரிடமும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக உருவாக்கப்படும் பழனி, மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், மடத்துக்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கொடைக்கானலை பழனி மாவட்டத்தில் இணைப்பதற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலர் எதிர்ப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இயற்கையாகவே பழனி மலை தொடரில்தான் கொடைக்கானல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பழனி மாவட்டத்தை உருவாக்குவதும் பழனி ஆண்டவர் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் பழனி திருக்கோவிலை மேம்படுத்துவதும் பழனி மற்றும் கொடைக்கானல் பிரதேசங்களில் சுற்றுலாவை ஊக்குவிப்பதும் மிக அவசியமானதாகும். ஒட்டன்சத்திரம் தாலுகாவை இரண்டாக பிரித்து கள்ளிமந்தயம் தாலுகாவையும் பழனி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பழனி ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளையும் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் சில பகுதிகளையும் இணைத்து கணக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்தையும் அமைக்கலாம். எவ்வாறு இருப்பினும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பழனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள் என்றார் வாக்காளர் சாமி.
“தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது? சாமி” என்றேன் நான். “தமிழகத்தில் தற்போது திமுக, பாஜக, விஜய் மற்றும் சீமான் ஆகியோரது கட்சிகள் தீவிரமாக 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டன. ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையிலும் வெளியிலிருந்து வரும் நெருக்கடிகளும் அக்கட்சியை எங்கு கொண்டு செல்லும்? என்பது உறுதியற்ற நிலை நீடிக்கிறது.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது முடிவதாக தெரியவில்லை. இதே போலவே, வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்தது பெரிய பேசு பொருள் ஆகியுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்க மணியும் எடப்பாடி பழனிச் சாமியிடமிருந்து சற்று விலகி இருப்பதாக கூறப்படுகிறது இவர்கள் மூவருமே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இருந்து வருகிறார்கள்.
இதனிடையே ஓபிஎஸ் பிரிவின் முக்கிய தலைவரான வைத்தியலிங்கமும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தினகரனும் சசிகலாவும் சந்தித்திருப்பது அதிமுகவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருப்பது அதிமுக தலைமைக்கு ஆபத்தானதாக இருந்து வருகிறது. பாஜகவும் அதிமுகவை வழிக்கு கொண்டு வந்து கூட்டணியை உருவாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. விஜய்யும் சீமானும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விடக்கூடாது என்பது திமுக மற்றும் பாஜகவின் எண்ணமாக இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக என்னவாக போகிறது? என்பதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டு விடை பெற்று சென்றார் வாக்காளர் சாமி.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் புதிய பாணியில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.