Advertisement

வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் அறிவியலா? ….. ஆன்மீகமா?

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தனது சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது அவனின் கனவாக உள்ளது. இப்படி கட்டும் வீட்டில் என்னென்ன இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? எந்த முறையில் கட்ட வேண்டும்? என்று யோசித்து வீடு கட்டின பிறகு அதில் நம் மனதிற்கு நல்ல எண்ணத்தையும் நல்ல செயலையும் ஊக்குவிக்கும் வகையில் அமையக்கூடிய பொருட்களை மட்டுமே வைக்க வேண்டும்? என்று நினைக்கிறோம். இதில் வீட்டில் வளர்க்கும் செடிகளை எவ்வாறு தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும்? என்று ஆன்மீகத்தில் வாஸ்துவின் அடிப்படையில் சில செடிகளை மட்டும் பரிந்துரைக்கின்றனர். 

இப்பொழுது உள்ள இளைஞர்களின் மத்தியில் ஆன்மீகத்தை மட்டுமே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள அறிவியலையும் ஆய்வு செய்து பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் போது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள செடிகளில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள்   ஒத்துப் போகின்றன என்பது   கவனிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது.

துளசி

துளசி என்பது பெருமாள் மகாலட்சுமி அவர்களின் மறு உருவமாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. ஒரு வீட்டில் துளசிச் செடியை வளர்த்தால் செல்வம் பெருகும் என்றும் துளசியை வீட்டின் கிழக்குப் பார்த்து வைப்பதால் வீடுகளில் செல்வம் குவியும் என்றும் ஆன்மீகம் தெரிவிக்கிறது. 

அறிவியல் ரீதியாக துளசியை ஆய்வு செய்தால் துளசி ஒரு லேசான டையூரிடிக் மற்றும் நச்சு நீக்கும் முகவராக செயல்படுகிறது, துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையதோடு நோய்த் தொற்றை தடுக்கும் வலிமை உடையது ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வலிமை கொண்டது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் தன்மையும் கொண்டது துளசியாகும். இது காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. பூச்சி கடித்தலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

கற்றாழை

கற்றாழை செடி எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறையான சிந்தனை தரக்கூடியது என ஆன்மீகவாதிகளால் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் ஆலோவேரா (Aloe vera) என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழையில் 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் கொண்டது.. இவை தவிர வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

கற்றாழை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு உடல் எடை குறையும். மாதவிடாய் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள், தோல் நோய்கள் போன்றவற்றை சரி செய்ய ஆற்றல் கற்றாழைக்கு உண்டு.

மணி பிளான்ட்

மணி பிளான்ட் என்கின்ற மிக எளிமையாக வளரக்கூடிய செடி பண வரவை அதிகரிக்கும் என்றும் வடக்கு நோக்கிய திசையில் இந்த செடியை வைக்கலாம் என்றும் ஆன்மீகம் தெரிவிக்கிறது. அறிவியல் ரீதியாக இந்த செடி காற்றில் உள்ள அசுத்தங்களை கட்டுப்படுத்துகின்றது. ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது.

அறிவியல் ரீதியாக, மணி பிளான்ட் செடி காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றினை வெளிவிடும் தன்மை கொண்டதாகும். அதாவது, காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜன் அளவை அதிகரித்து வெளியிடுகிறது.

பாம்பு கற்றாழை

பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் அதிகப்படியான மன நிம்மதியும் செல்வமும் பெருகும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது. அறிவியல் ரீதியாக, இந்தச் செடி காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மோனாக்சைடு மற்றும் குளோரோஃபார்ம் போன்றவற்றை சுத்தப்படுத்துகின்றது. மேலும், அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு இரவு நேரங்களில் உட்கொண்டு அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றது. இதனால், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை மனிதர்களால் பெற இயலும் என கருதப்படுவதால் இந்த செடி படுக்கையறைகளில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. எலேக்ட்ரோனிக் பொருட்களில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சுகளை இது எளிதில் உறிஞ்சுகிறது. ஆகவே லிவிங் ரூம் அல்லது தொலைக்காட்சி போன்ற மற்ற எலேக்ட்ரோனிக் பொருட்கள் இருக்கும் அறையில் இந்த செடியை வளர்க்கலாம்.

அரேகா பாம் 

அரேகா பாம் எனப்படும் தென்னை மர கீற்றைப் போல தோற்றமளிக்கும் ஒரு வகையான செடி வாஸ்து அடிப்படையில் வீட்டு வாசலில் வைக்க வேண்டும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.. இந்த செடி பகல் நேரங்களில் அதிக ஆக்ஸிஜனை தருவதால் நாம் அதிக நேரம் எங்கு செலவிடுகிறோமோ அந்த இடங்களில் இந்த செடியை வைத்தால் நான்கு செடியில் வரும் ஆக்சிஜன் ஒருவருக்கு போதுமானதாக இருக்கும் என்று அறிவியல் ரீதியாக கூறுகின்றனர்.

வாஸ்து ரீதியாக ஸ்பைடர் பிளான்ட், அதிர்ஷ்ட மூங்கில் மற்றும் இன்னும் பல செடிகளை கூறுகின்றனர். இவ்வாறு அறிவில் கூறும் கருத்துக்களையும் ஆன்மீகம் கூறும் தகவல்களையும் நாம் கேட்கும் பொழுது மனதில் சற்று குழப்பம் ஏற்படும்.  எது நமக்கு நல்லது? என்ற   கருத்துக்களை  அறிவியலோ, ஆன்மீகமோ எது கூறினாலும் அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை நாம் வாழ்க்கையில் செயல்படுத்துவதே சிறப்பானதாக அமையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles