அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் (reciprocal tax) வரி கடந்த ஏப்ரல் 2 முதல்அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது இறக்குமதி செய்யும் நாடுகள் அந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவிற்கு அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது அந்த பொருட்களுக்கு வரி விதிப்பதுதான் அமெரிக்காவின் தற்போதைய ரெசிப்ரோக்கல் வரி என்பதாகும். இதனை மேலோட்டமாக பார்த்தால் இதில் என்ன தவறு இருக்கிறது? என்று என்ன தோன்றும். ஆனால், உண்மையில், அமெரிக்காவின் இந்த கொள்கை பொருளாதாரத்தில் நியாயமற்ற வர்த்தக முறை (unfair trade practice) என்று பொருளாதார நிபுணர்கள் விவரிக்கின்றனர்.
கம்போடியா மீது 49 சதவீதம், வியட்நாம் மீது 46 சதவீதம், இலங்கை மீது 44 சதவீதம், சீனா மீது 34 சதவீதம், இந்தியா மீது 26 சதவீதம், சிங்கப்பூர் மீது 10 சதவீதம் என இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், அமெரிக்காவில் வர்த்தக மந்த நிலையும் (recession) உலக அளவில் வர்த்தக போரும் (world commerce war) ஏற்படும் என்ற அச்சம் உலகம் முழுவதும் தோன்றியுள்ளது
இதன் எதிரொலியாக இந்தியாவில் தேசிய பங்குச்சந்தையில் 3.24 சதவிகிதமும் (742 புள்ளிகள் சரிவு) மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2.95 சதவீதமும் (2227 புள்ளிகள் சரிவு) அதிரடியாக குறைந்தது. இதனால். இந்த பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மூலதன மதிப்பு ரூபாய் 14 லட்சம் கோடி ஒரே நாளில் குறைந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக உள்ள முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்திரி ஜிண்டால் மற்றும் சிவ நாடார் உள்ளிட்ட நேற்று மட்டும் சுமார் ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப்போலவே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளிலும் நேற்று ஒரே நாளில் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன. தைவான் பங்குச்சந்தை 10 சதவீதம், ஜப்பான் பங்குச்சந்தை 9 சதவீதம், சிங்கப்பூர் பங்குச்சந்தை 9 சதவீதம், ஹாங்காங் பங்குச்சந்தை 8.9 சதவீதம், இத்தாலி பங்குச்சந்தை 8.4 சதவீதம், ஸ்வீடன், சீனா மற்றும் சுவிசர்லாந்து பங்குச்சந்தைகள் 7 சதவீதம், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பங்குச்சந்தைகள் சுமார் ஆறு சதவீதம், இங்கிலாந்து பங்குச்சந்தை 5.2 சதவீதம், மலேசியா பங்குச்சந்தை 4.5 சதவீதம், இந்திய பங்குச்சந்தை 4.1 சதவீதம், ஜெர்மனி பங்குச்சந்தை 5 சதவீதம், ரஷ்ய பங்குச்சந்தை 3.8 சதவீதம், சவுதி அரேபியா பங்குச்சந்தை 3.3 சதவீதம், துருக்கி பங்குச்சந்தை 2.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.
சங்காய் கச்சா எண்ணெய் சந்தையில் 7 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதோடு கிரிப்டோ சந்தை குறியீட்டில் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்த பிட்காயின் மதிப்பு 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்று விட்டது. தற்போதைய வரி விதிப்பு போர் தொடர்ந்தால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
சுதந்திர வர்த்தகத்திற்கு அமெரிக்கா அடித்தளமாக விளங்கி வந்தது. அமெரிக்காவின் தற்போதைய கொள்கை காரணமாக உலகமயமாக்கல் (globalization) மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் (free trade) காலம் முடிந்து விட்டது. தற்போது நாம் தன்னிச்சையான மற்றும் ஆபத்தான ஒரு காலகட்டத்தில் நுழைகிறோம். உலக வர்த்தக அமைப்பின் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு நிலைத்தன்மை (stability) உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தற்போது கொண்டு வந்துள்ள சீர்திருத்தம் (reforms) என்ற பெயரிலான மாற்றங்கள் மூலம் உலக வர்த்தக அமைப்பின் முறைகளை அவர்கள் முற்றிலுமாக கைவிட்டு உள்ளார்கள். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பை அமெரிக்கா முழுமையாக நிராகரித்துள்ளது.
உலகில் 1930 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய வர்த்தகப் போர் மெல்ல மெல்ல மாறி இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது என்பதை மறந்து விடக்கூடாது. இத்தகைய சூழலை முறியடிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சர்வதேச அமைப்புகளை தக்க வகையில் சீரமைக்க வேண்டிய நேரம் இதுவாகும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உலக வர்த்தகப் போரை நிறுத்துவதற்கு சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டிய தருணம் இதுவாகும்.