Monday, August 25, 2025
spot_img

முதல் படைப்பு: யாரிடம் பேசும்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.  இரண்டாவது படைப்பு: குதிரையிடம் பேசிய வார்த்தைகளை கவனியுங்கள்! 

பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர்.

இரண்டு நபர்கள் சந்தித்து கொள்கிறார்கள் ஒருவர்: நீ எங்கே வேலை செய்கிறாய்? மற்றவன்: இன்னாரின் நிறுவனத்தில். அவன் : எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்? இவன்: 30 ஆயிரம் தான். அவன்: ஓ…ஹ்! இந்த வேலைக்கு இது போதாதே! உன் முயற்சியை அவர்கள் மதிப்பதில்லை போல!  வாழ்க்கை செலவுகளை எப்படி சமாளிக்கிறாய்? என்ற வார்த்தை குண்டை போட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான். இவனோ அவன் சொல்வது சரிதான், என்று கருதி வேலையில் ஆர்வம் குறைந்து, சலிப்புடனே மறுநாள் வேலைக்கு செல்கிறான். நிறுவன உரிமையாளரிடம் சம்பளம் கூட்டிக் கேட்கிறான். உரிமையாளரோ  “முடியாது” என்கிறார். இவன் வேலையை விட்டு விடுகிறான். இப்போது இவன் வேலை இன்றி வெட்டியாக இருக்கின்றான்.

இரு பெண்கள் சந்திக்கின்றனர். ஒருவள்: உன் கணவன், உனக்கு குழந்தை பிறந்ததற்காக உனக்கு என்ன அன்பளிப்பு செய்தார்? மற்றவள்: எதுவும் தரவில்லை. அவள்: ஏன் இப்படி! உன்னைப் பற்றி அவரிடம் எந்த  மதிப்பும் இல்லையா…?’ பாசம் இல்லையா? என்று அவள் சின்ன புகைச்சலை போட்டுவிட்டு  சென்றுவிடுகிறாள். இவளின் மனதிலோ கணவனை பற்றிய மதிப்பு குறைகிறது. கவலையடைகிறாள். கணவன் வந்தவுடன்  கோபத்துடன் தர்க்கம் செய்கிறாள். அதனால் சன்டை முற்றி அவன் அவளை விவாகரத்து செய்துவிடுகிறான். இப்போது இவள் விதவையாகிவிட்டாள். 

இது போன்றே, இரு நண்பர்களுக்கு மத்தியிலும், தந்தை மகனுக்கு மத்தியிலும் இப்படியான கிண்டல் கிளறல்களை உண்டாக்கி பிரிவை உண்டாக்கும் நயவஞ்சகர்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஏன் இன்னும் இதனை வாங்கவில்லை? ஏன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை? எவ்வளவு காலம்தான் இவரை சகித்துக் கொள்வாய்? இப்படி ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இப்படிச் செய்யலாமா???  அப்படிச் செய்யலாமா??? இப்படி சிலரின் தேவையற்ற கேள்விகள், விவரமற்ற வார்த்தைகள், கிண்டிப் பார்க்கும் ஆர்வங்கள், கிளறிப் பார்க்கும் பழக்கங்கள் கேட்க அழகாகவும், பார்க்க புண்ணியம் போன்றும் தோன்றும்…  

ஆனால், அவைகளே வார்த்தை வடிவில் அவதாரம் எடுத்து சைத்தான்களாக வந்து, குடும்பங்களில் பெரும் வெடிப்பை தோற்றுவிக்கிறன, உறவுகளுக்குள் நீண்ட விரிசல்களை உண்டாக்கிவிடுகின்றன. சொந்த பந்தங்களை இன்னுமின்னும் பிரித்து வைத்துவிடுகின்றன. 

எனவே, பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர். வீடுகளுக்குச் சென்றால் குருடனாகவும் வெளியே வந்தால் ஊமையாகவும இருந்து விடுங்கள்! நீங்கள் உங்கள் சுய சிந்தனையோடு இருங்கள்.

வெற்றிக்கு தன்னையும், தோல்விக்கு பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்

அது இங்கிலாந்தில் இருக்கிற கிராமம். அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. ‘பட்டீ’ (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். 

அவர் உட்கார்ந்ததும், ‘சூடாக டீ குடிக்கிறீங்களா?’ என்று கேட்டார். வந்தவர், அவசரமாக ‘வேண்டாம்’ என்று சொன்னார்.  ‘சொல்லுங்க, என்ன விஷயம்?’ விவசாயி கேட்டார். ‘ஒண்ணுமில்லை. நான் லண்டன்லேயிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று…

‘ரொம்பப் பெரிய காரா?’ என்று கேட்டார் விவசாயி. ‘இல்லை, இல்லை. சின்ன கார்தான்’ என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.  விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். 

கார் சிறியதாகத்தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு, ‘எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்’ என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ‘பெய்லி (Bailey) இழுடா ராஜா’ இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை. ‘டேய் மேண்டி (Mandy) வேகமா இழு’ மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.

‘என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா’ என்றார். அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க? அதுதான் எனக்குப் புரியலை.’ ‘என் பட்டீக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு!’

அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம். இதை பிரெஞ்ச் கணிதவியலாளரும் தத்துவவியலாளருமான  பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.  வார்த்தைகளின் மகிமை அபாரமானது. அதனால் தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது, கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறார் வள்ளுவர். வெற்றிக்கு தன்னையும், தோல்விக்கு பிறரையும், அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்.

(படித்ததில் பிடித்தது) 

…..முழுமையாக படிக்க…… → இங்கே தொடவும்… →… 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles