Saturday, February 22, 2025
spot_img

மேற்கு தொடர்ச்சி மலை குறித்த வியக்கும் சங்கதிகளை அறிந்து கொள்ளுங்கள்!

புவியியல்

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே, தக்காண பீடபூமியின் மேற்கு எல்லையிலிருந்து தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நீண்டு சென்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பு தோப்பு பகுதியில் அமைந்துள்ள மருந்துவாழ் மலையில் முடிவடைகிறது. 1600 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள அரபிக் கடலுக்கு இணை கோட்டை போல வடக்கு முதல் தெற்கு வரை அதிக இடைவெளிகள் இல்லாத மலை தொடராக (continuous chain of mountains) 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் ஆறு சதவீதம்) அமைந்துள்ளது.

இம்மலைத் தொடர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மலைத் தொடரில் கோவா வரையிலுள்ள வடக்கு பகுதி மலைகள்   900 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை உயரத்திலும் கோவாவிலிருந்து தெற்கே உள்ள இடைப்பட்ட பகுதி  மலைகள் சராசரியாக 900 மீட்டர் உயரத்திலும் இந்த மலைத்தொடரின் தெற்கு பகுதி 2000 மீட்டருக்கு உயர்வாக உள்ள சிகரங்களைக் கொண்டும் விளங்குகிறது. இம்மலைத்தொடரில் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ஆகும். மன்னாமலை சிகரம் 2659 மீ., தொட்டபெட்டா சிகரம் 2640 மீ., மீசபுலி மலை சிகரம் 2637மீ, முகூர்த்தி சிகரம் 2554 மீ. உள்ளிட்ட சிகரங்களும் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன.

தோற்றம்

மேற்கு தொடர்ச்சி மலை இமயமலையை விட பழமையானது என்றும் கோண்ட்வானா என்ற பெயரில் முற்காலத்தில் மிகப்பெரிய கண்டம் இருந்தது என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது என்றும் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது என்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள்  என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீர் ஆதாரம்

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து 1450 கிலோமீட்டர் நீளமுடைய – மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசங்களில் வழியாக கிழக்கு நோக்கி பாயும் கோதாவரி ஆறும் 1300 கிலோமீட்டர் நீளமுடைய – மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா வழியாக சென்று வங்காள விரிகுடாவை அடையும் கிருஷ்ணா ஆறும் கர்நாடகாவில் தோன்றி தமிழகம் வழியாகச் சென்று 800 கிலோமீட்டர் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கும் காவிரி ஆறும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தோன்றி கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளில் முக்கியமானவை ஆகும். இவற்றைத் தவிர தாமிரபரணி உள்ளிட்ட பல சிறு ஆறுகளும் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கே பயணிக்கின்றன. 

பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும்  முல்லை பெரியாறு, சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு உள்ளிட்ட ஆறுகள் குறைந்த நீளம் கொண்டவையாகும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைக்கும் பல்லாயிரக்கணக்கான நிலங்களில் விவசாய சாகுபடிக்கும் மின்சார உற்பத்திக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஆறுகள் பயன்படுகின்றன. 

மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் காலநிலை மற்றும் பருவங்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் ஆண்டுக்கு 6000 செ.மீ. முதல் 8000 செ.மீ.  வரை மழையைத் தருகின்றது. இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமியிலும் தென்கிழக்கு பகுதிகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 900 செ.மீ.  குறைந்த மழைப்பொழிவு மட்டுமே ஏற்படுகிறது.

பாரம்பரிய தளம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்கினங்களையும் தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 6000 பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறைந்தது 325 உலகளவில் அழிந்து வரும் உயிரினங்களும்   உலகின் 17 சதவீத புலிகளும் (பாந்தெரா டைகிரிஸ்) மற்றும் 30 சதவீத ஆசிய யானைகளும் (எலிபாஸ் மாக்சிமஸ்) உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை தொடரை உலக பாரம்பரிய தளமாக 2012 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 39 இடங்களை பாரம்பரிய இடங்களாக உலக பாரம்பரிய குழு அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Google search engine

Latest Articles