பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் மன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR: Special Voters Revision) நடத்தப்படுகிறது. இதன்படி பீகாரில் வசிக்காத மக்களின் பெயர்கள் அந்த மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இவ்வாறு நீக்கப்படும் வாக்காளர்களுக்கு எந்த மாநிலத்தில் வசிக்கிறார்களோ அந்த மாநிலத்தில் வாக்குரிமை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிஹாரில் இருந்து 36 லட்சம் வாக்காளர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் இதில் தமிழகத்தில் சுமார் 6,50, 000 பீகாரிகள் தற்காலிக பணிக்காக வந்து வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி இவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் வெளி மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளராக பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். வெளிமாநிலத்தவர்கள் வட இந்தியர்கள் எதிர்காலத்தில் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள். நிலமற்ற அகதிகளாக தமிழர்கள் மாறி அடிமையாகி நாடோடியாக திரிவான். வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கினால் தமிழகத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். வட மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் – மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், இந்திய அரசு – தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
தற்போதைய நிலையில் தமிழகத்தில் சுமார் 6.5 கோடி வாக்காளர்கள் இருக்கக்கூடும். இதில் சுமார் பத்து சதவீத வாக்காளர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என வைகோ தெரிவிக்கும் நிலையில் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் பார்ப்பவர்களையும் கணக்கிட வேண்டி உள்ளது. மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் ,ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தும் ஒரிசா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களையும் கணக்கிட்டு தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவருக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள வாக்குரிமையை ரத்து செய்துவிட்டு தமிழகத்தில் வாக்குரிமையை வழங்கினால் தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 20 சதவீதம் வெளி மாநிலத்தவர் தான் இருக்கக்கூடும் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக, தேர்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதில்லை. அதிகபட்சமாக 70 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று எடுத்துக் கொண்டால் கூட ஆட்சி அமைக்கும் கட்சி சுமார் 30 சதவீத வாக்குகளை பெறுகிறது. இந்நிலையில் வெளி மாநிலத்தவருக்கு சுமார் 20 சதவீத வாக்குகள் இருக்கும் என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டால் அவர்களது ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்கவோ முதலமைச்சராகவோ முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழக மக்களின் கல்வி அறிவு, அரசியல் விழிப்புணர்வு என்பது வளர்ச்சி அடைந்த ஒன்றாகும். ஆனால், பின்தங்கிய மக்களே வட இந்தியாவில் இருந்தும் வடகிழக்கு இந்தியாவில் இருந்தும் தமிழகத்துக்கு வருகை புரிகிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்களை போன்ற அரசியல் விழிப்புணர்வு இருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டால் அதன் தாக்கம் தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். வாக்குரிமை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று 1950 ஆம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தெரிவிக்கிறது. ஒருவர் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்திருந்தால் அவரது சொந்த ஊரில் வழக்கமாக வசிப்பவர் என்ற தகுதியை இழக்க மாட்டார். எனவே, அவருக்கு சொந்த ஊரிலேயே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதில் தற்காலிகம் என்ற வார்த்தைக்கு கூடும் கொடுக்கப்படும் விளக்கத்தை வைத்து பிரச்சனை வருகிறது.
மக்கள் தொகையைக்கேட்ப எம்பிக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது என்ற முடிவை விரைவில் மத்திய அரசு எடுக்க கூடும். இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பாராளுமன்றத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை குறைய கூடும் என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே தமிழக முதலமைச்சர் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில் தற்போது எழுந்துள்ள வாக்குரிமை பிரச்சனை மிகப் பெரிய சவால்களை உருவாக்கலாம். இந்தப் பிரச்சனைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு செயல் திட்டத்தை முன்வைத்து காண்பது அவசியமான ஒன்றாகும்.
பூங்கா இதழ் (The News Park) கருத்து: இதற்கு தீர்வாக என்ன இருக்கலாம் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள நுகர்வோர் பூங்காவில் வெளியான கீழ்கண்ட கட்டுரையும் படியுங்கள்.
https://theconsumerpark.com/tamil-nadu-inner-line-permit